Primary tabs
- 5.4 தமிழில் புகுத்திய புதுமைகள்
தமிழ்க் கவிதை இலக்கியத்தில் அப்துல் ரகுமான் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடி ஆவார். இதனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிச் சிறப்பிடத்தை அவர் பெறுகிறார்.
- மீமெய்ம்மை இயல்
சர்ரியலிசம் என்னும் இந்தப் படைப்பாக்க முறையைக் கையாண்டு தமிழில் கவிதை நூல் (பால்வீதி) செய்தவர் இவர்.
- நஜம், கீத், கஸல்
இவை அரபி, உருது இசைப்பா வடிவங்கள் ஆகும். இவற்றைத், தமிழில் முதன்முதலில் எழுதி அறிமுகம் செய்துள்ளார். மின்மினிகளால் ஒரு கடிதம் தமிழ் கஸல்களின் முழுத்தொகுதி.
நான் உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆகவேண்டும் (ப.18)
என் இதயத்தை
உடைத்து விட்டாயே
இனி எங்கே வசிப்பாய்? (ப.19)
- ஹைக்கூ
இப்போது தமிழில் பலரும் எழுதிவரும் ஹைக்கூ என்னும் ஐப்பானியக் குறுங்கவிதை வடிவத்தை முதலில் தமிழில் அறிமுகம் செய்தவரும் இவர்தான். சிந்தர் என்ற தலைப்பில் பால்வீதியில் ஐந்து ஹைக்கூக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று-
இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்காதல் நினைவுகள் உறங்க விடாமல் தொல்லை செய்கின்றனவாம்.
இவ்வாறு, அப்துல் ரகுமான் தமிழ் இலக்கிய உலகுக்குப் புதுமைகள் பலவற்றை அறிமுகம் செய்துள்ளார் என்று அறியலாம்.
அப்துல் ரகுமான் மிகச் செறிவான, எண்ணிக்கையில் மிகுதியான பல சிறந்த கவிதைகளைப் படைத்துள்ள பெருங்கவிஞர். இதனால் தான் கவிக்கோ என்று சிறப்பிக்கப்படுகிறார். (கோ = அரசர்)
இவரது படைப்புகளில் நாம் இப்பாடத்தில் அறிந்து கொண்டவை மிகமிகச் சிறிய அளவே ஆகும். இவரது நூல்களைத் தேடிப் படித்துக் கவிதைச் சுவைப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களே, உங்கள் கவிதை நுகர்வுத் திறனைச் செழிப்பாக்கவும், நீங்களாகவே கவிதை வாசிப்புப் பயிற்சி பெற்றுக் கொள்ளவும், அப்துல் ரகுமானின் ஆலாபனை நூலில் இருந்து நீராக என்ற கவிதையின் சில அடிகள் கீழே தரப்படுகின்றன.
நீராகநீரிலிருந்து பிறந்தவனே
நீ ஏன் நீராக இல்லை?
நீ மட்டும்
நீராக இருந்தால்
இல்லாமல் போகமாட்டாய்
நீ மட்டும்
நீராகவே இருந்தால்
உன்னை யாரும்
காயப்படுத்தவே முடியாது
நீரைப்போல்
மென்மையாக இரு
மென்மையே
உயிர்த் தன்மை
நீரைப் போல்
போராடுகிறவனாக இரு
நீர் ஆயுதமில்லாமல்
போராடுகிறது
ஆனால்
எல்லாவற்றையும்
வென்று விடுகிறது
நீரைப்போல்
உன் சிறைகளில் இருந்து
கசிகின்றவனாக இரு
நீரைப்போல்
கண்டுபிடிப்பவர்களுக்காக
ஒளிந்திரு
நீரைப்போல்
சுவை அற்றவனாக இரு
எப்போதும்,
நீ தெவிட்டாதவனாக
இருப்பாய்
நீரைப்போல்
பிரதிபலிப்பவனாக இரு
சூரியனும் சந்திரனும்
உனக்குக் கிடைப்பார்கள்
நீரைப்போல்
எங்கே சுற்றி அலைந்தாலும்
உன் மூல சமுத்திரத்தை
அடைவதையே
குறிக்கோளாய்க் கொள்வாயாக !