Primary tabs
6.1 திருக்காவலூர்க் கலம்பகம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒன்று திருச்சிராப்பள்ளி. இந்த மாவட்டத்தில் கொள்ளிடம் என்ற ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஊர் ஏலாக்குறிச்சி என்ற திருக்காவலூர் ஆகும். தெய்வத் திருக்காவல் மிகுந்த ஊர் என்ற பொருளில் திருக்காவலூர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கருதுவர். இந்தப் பெயரை இந்த ஊருக்கு இட்டவர் இந்த நூலின் ஆசிரியராகிய வீரமாமுனிவர் ஆவார். திருக்காவலூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள பெண் தெய்வம் அடைக்கல அன்னை. இந்த அடைக்கல அன்னையைப் புகழ்ந்து கலம்பகமாகப் பாடப்பட்ட நூலே இது. எனவே, இந்நூல் திருக்காவலூர்க் கலம்பகம் எனப்பட்டது.
6.1.1 ஆசிரியர்
இந்த நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார். இவருடைய இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது ஆகும். இவர் இத்தாலி நாட்டில், மாண்டுவா என்ற மாவட்டத்தில், காஸ்திக்கினியோன் என்ற ஊரில் 8.11.1680-இல் பிறந்தார். இவர் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர். கிறித்தவ சமயக் கருத்துகளைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார். தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மொழியைக் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் நன்கு கற்றார். பின் இலக்கணம், காப்பியம், சிற்றிலக்கியம், சிறுகதை, அகராதி போன்ற துறைகளில் தமிழ்மொழியில் நூல்கள் பல இயற்றினார். அவற்றுள் ஒன்றே திருக்காவலூர்க் கலம்பகம் ஆகும்.
6.1.2 சிறப்புகள்
திருக்காவலூர்க் கலம்பகம் பல சிறப்புகளைப் பெற்ற நூலாகத் திகழ்கின்றது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:
1) தமிழ் மொழியில் தோன்றியுள்ள கலம்பக நூல்கள் பொதுவாக ஆண்பாற் கலம்பகங்களாக உள்ளன. அதாவது, பாட்டுடைத் தலைவர் ஆடவராக உள்ளனர்.
ஆனால், இந்தக் கலம்பகம் பெண்பாற் கலம்பகமாக உள்ளது. இந்நூல் அடைக்கலமாதா என்ற பெண் தெய்வத்தைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
2) கிறித்தவ சமயம் சார்ந்த கலம்பக நூலாக இது ஒன்றே காணப்படுகின்றது.
3) பிற கலம்பக நூல்களில் சிற்றின்பச் செய்திகளே அதாவது உலக இன்பச் செய்திகளே காணப்படும். இந்த நூலில் பேரின்பச் செய்திகள் அதாவது இறை இன்பச் செய்திகள் காணப்படுகின்றன.
4) இந்த நூலில் காணப்படும் கலம்பக இலக்கிய உறுப்புகளுள் ஒன்று சமூக உல்லாசம். இந்த உறுப்பு வேறு கலம்பக நூல்களில் காணப்படவில்லை.
இவை போன்ற பல சிறப்புகளை உடையதாக இந்த நூல் திகழ்கின்றது.
6.1.3 நூல் அமைப்பு
இந்நூல் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, துறை, தாழிசை, விருத்தம் முதலிய பல வகைப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளது.
இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளது.
கலம்பக உறுப்புகள் 18 எனக் கூறப்படும் பொது மரபு உள்ளது. ஆனால், கலம்பக நூல்களைப் பார்க்கும்போது 18 உறுப்புகளுக்கு அதிகமாகவும், வேறு சில உறுப்புகள் கலந்து வரவும் காணலாம். இந்த நூலில் காப்புச் செய்யுள் நீங்கலாக 20 உறுப்புகள் காணப்படுகின்றன.
6.1.4 காப்புச் செய்யுள்
நூலை இயற்றும் புலவர்கள் தாம் இயற்றும் நூல் நன்கு முடிவதற்காக இறைவனைக் காக்கும்படி வேண்டிப் பாடுவர். இது காப்புச்செய்யுள் எனப்படும்.
இந்த நூலில் திருக்காவலூரில் கோயில் கொண்டுள்ள, பெண்களில் சிறந்த அடைக்கல அன்னையின் பெருமைகளைக் கூறுகின்றார். அதற்குக் கன்னிமை மாறாத சங்கு போன்ற தூயவளாகிய மரியாள் ஈன்ற இறைவனாகிய இயேசு என்ற அழகிய முத்து மாலையைத் தம் நெஞ்சில் அணிந்து கொள்வதாகக் கூறுகின்றார். இப்பாடலில் வீரமாமுனிவர் இயேசுவின் தாயாகிய மரியாளை, பால் கடல் கன்னிச் சங்கு என்று புகழ்கின்றார். கடலில் உள்ள சங்கு மழைத் துளிகளை ஏற்று, ஆணின் உறவு இல்லாமல் கருவுற்று, முத்தினைக் கொடுக்கும். அதுபோல், ஆணின் உறவு இன்றி, தேவ ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்று, இயேசுவைப் பெற்றாள் என்று காட்டுகின்றார்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I