தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - P10422-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    பாரதம் என்னும் சொல்லுக்கு - பரதனது வம்சத்தவரைப் பற்றிய நூல் என்று பொருள். இந்தப் பரதன் சந்திரவம்சத்தில் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் புகழ் பெற்ற ஓர் அரசன்.

    பரத வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர், துரியோதனன் ஆகியோரைப் பற்றியும் அவர்களைச் சார்ந்தவர்களைப் பற்றியும் உணர்த்தும் நூல் பாரதம் எனப்பட்டது.

    நான்கு வேதங்களுக்குச் சமமாக ஐந்தாம் வேதம் என இந்நூல் போற்றப்பட்டது. அனைவராலும் வழிபடத்தக்க மேம்பாட்டை உடையதாயிருத்தலால், இந்த இதிகாசம், ‘மகா’ எனும் அடைமொழி கொடுக்கப்பட்டு, மகாபாரதம் எனவும் வழங்கும்.

    இந்நூலை முதலில் வடமொழியில் செய்த வேத வியாசமுனிவரால் வைக்கப்பட்ட ‘பாரதம்’ என்கிற பெயரே, வழிநூலாகிய இத்தமிழ் நூலுக்கும் பெயராயிற்று. எனவே வில்லிபாரதம் ஒரு வழிநூல்.

    வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருட்டிணன் தூது, சஞ்சயன் தூது என்னும் மூன்று தூதுச்சருக்கங்கள் உள்ளன. இவற்றில் உலூகன் தூதும், கிருட்டிணன் தூதும் பாண்டவர் சார்பாக நூற்றுவர்பால் அனுப்பப் பெற்றவை. சஞ்சயன் தூது திருதராட்டிரனால் பாண்டவர்பால் விடுக்கப்பெற்றது. கிருட்டிணன் தூது 264 பாடல்களால் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. காப்பியத்தின் உயிர்ப்பகுதியாகக் கிருட்டிணன் தூது அமைகிறது. முதலில் அண்ணன் தம்பி பூசலாக உருவானது; பிறகு பாண்டவர், கௌரவர் மானப்பிரச்சினையாக ஆனது; அதற்குப்பிறகு அரசியல் பிரச்சினையாக வளர்ந்தது. இவ்வாறு ஒரே காப்பியத்தின் கருவானது மூன்று நிலைகளில் நிற்பதால் தான், பாரதம் என்றென்றும் சுவை மிக்க காப்பியமாக விளங்கிவருகிறது.

    பாரதத்தின் தொடக்கத்தில் கௌரவ, பாண்டவரின் முன்னோர் வரலாற்றையும் இன்றியமையாத மாந்தர்களின் பிறப்பு நிலையினைப் பற்றியும் விவரித்துப் பங்காளிகளின் பொறாமையே பாரதப் போருக்கான வித்தாகிறது என்பது கூறப்படுகிறது. பாண்டவர்க்கமைந்த நாட்டினைக் கௌரவர் கைக்கொள்ள நினைக்கும் எண்ணமே அந்தப் பொறாமை வளர்வதற்கு உரமாக அமைகிறது.

    நூற்றுவரின் தலைவன் துரியோதனன், பாண்டவரின் வலிமை மிக்க வீமனை அழிக்க முடிவுசெய்தல், அரக்கு மாளிகையில் அனைவரையும் அழிக்க முயலுதல், இராஜசூய யாகத்தின் மூலமாகக் கண்ணனுக்குப் பெருமை சேர்த்து, கௌரவர்களைப் பாண்டவர் பழித்தல், மோதல் இல்லாமல் சூது போரால் நூற்றுவர் வெற்றிகொள்ளல், பாஞ்சாலி துகிலுரிதல் - அப்போது கண்ணன் திரௌபதிக்கு உதவுதல், அரசிழந்த பாண்டவர்களின் நிலை எனக் கதை நீண்டு செல்லும் போக்கினைத் தொடர்ந்து, பகையில் அழிவு நேராமல் இருக்க, பாண்டவர் விடுத்த தூதுச் செயல்கள், போர்ச்செயலை நோக்கி விரைவு படுத்தவே உதவுகின்றன.

    கண்ணன் தூது சென்று ஆற்றிய செயல்கள் கௌரவர்களின் முழு வலிமையைக் குலைத்தன. இறுதியில் போர்மூண்டு துரியோதனன் வீழ்த்தப் பட்டான். தருமன் அரசனானான். கண்ணன் தூது மேற்கொண்டதும், அப்பணியை எவ்வாறு திறம்பட முடித்தான் என்பதும் இப்பாடப் பகுதியில் விளக்கப் பெறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:00:36(இந்திய நேரம்)