தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - P10422-காப்பியச் சிறப்பு

  • 2.3 காப்பியச் சிறப்பு

    பல கிளைக் கதைகளும், அணிநலன்களும் வருணனைகளும் காப்பியத்தின் சிறப்பாக அமைந்துள்ளன.

    2.3.1 கிளைக் கதைகள்

    வில்லிபாரதத்திலும், அந்தக் காலத்து மக்களுக்கு விருப்பமான கதைகள் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண்ணன், சிவன், ராமன் பற்றிய கதைகளைத் தொடர் வடிவில் சுருக்கமாகச் சுட்டுவதும், பிற்காலத்தில் வழங்கிய சம்பந்தர் கதையைக் குறிப்பிடுவதும், நளாயினி கதை, சிவபெருமான் மூங்கிலில் பிறந்தது, முப்புரம் எரித்தது போன்ற கதைகளும் வில்லிபாரதத்தில் காணமுடிகிறது. கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில், இந்திரன் கோபத்தால் இடையர்க்கும், இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையைப் பெய்வித்த பொழுது கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தது. (பாடல்-27) பூதகி நஞ்சு தீற்றிய முலைப்பாலைக் கொடுத்துக் கண்ணனைக் கொல்ல வந்த கதை (பாடல்-32) ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் குபேர புத்திரர்கள் - நாரதர் சாபத்தால் மருதமரமாய் ஆனவர்கள், யசோதையால் கயிற்றில் கட்டப்பட்ட கண்ணன் மருதமரத்தில் குறுக்காக வர, மரங்கள் முறிந்து விழவும், குபேரபுத்திரர்கள் உயிர் பெற்று வந்தனர். (பாடல்-27)

    மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்க, திருமால் வாமன அவதாரம் எடுத்துத் திரிவிக்கிரமனாக உலகம் அளந்த கதை (பாடல்-37).

    பாணாசுரனைத் தனது சுதர்சனம் எனும் சக்கரத்தைப் பிரயோகித்து, அவனது ஆயிரந்தோள்களையும், தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து, அவனுயிரையும் சிதைக்க இருக்கும் போது சிவபெருமான் வேண்டியதால், நான்கு கரங்களுடன் அவனை உயிருடன் விட்டார் திருமால் (பாடல்-4). இவ்வாறு பல கிளைக்கதைகள் கிருட்டிணன் தூதுச்சருக்கத்தில் காணப்படுகின்றன.

    2.3.2 அணி நலன்கள்

    துரியோதனனை அழிக்க வேண்டும் என்று வீமன் கண்ணனிடம் சொல்லும் போது, தருமன் சொல்வதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. எனது அவயவங்களில் ஒன்றில் மற்றொன்று அஜாக்கிரதையினால் பட்டு அதற்கு வருத்தத்தை உண்டாக்கினால், அதற்காக அந்த வருத்தும் உறுப்பைக் கோபித்துக் களைபவரில்லாமை போல, ஒரு குடும்பத்தவருள் மற்றொரு வருக்குச் சோர்வினால் தீங்கிழைத்தால், அதற்கு அவரை அழிப்பது தகுதியன்று என்று கூறும் தருமனின் கருத்தை மிக அழகாக அமைத்துள்ளார் புலவர். (பாடல் 8)

    கிருட்டிணன் தூது சென்ற அத்தினாபுரத்தில் நகரத்தினை அடுத்துள்ள சோலைகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, பாக்குமரப் பழுத்த குலைகளுக்குப் பவழத் திரளும், பச்சை இலைகள், பச்சைக் குலைகளுக்கு மரகதமும், தொங்கும் வெள்ளிய பாலைக்கு முத்துக் கோவையும் உவமையாக வருகின்றன. (பாடல் 56)

    அத்தினாபுரத்தையும், அந்நகர மாளிகையையும் அந்நகரத்தில் எழும் பலவகை ஒலிகளையும் பற்றிக் குறிக்கும் பாடல்களில் சொற்பொருட் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது. (பாடல்-67)

    இவ்வாறு வில்லிபாரதத்தில் அணி இலக்கணங்களின் பயன்பாட்டினை அறிய முடிகிறது.

    2.3.3 வருணனை

    வாழ்வின் கூறுகளை உள்ளத்தில் பதியும்படி பல திறன்கள் கொண்ட வருணனைகளை வில்லிபுத்தூராழ்வார் கையாளுகின்றார். யானைப்படையைப் பற்றி அதிகமாக வருணித்துள்ளார்.

    கண்ணன் விதுரன் வீட்டில் விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறான். அந்த மாலைப் பொழுது - சூரியன் அஸ்தமான நிகழ்வை வில்லியார் வருணிக்கிறார். கண்ணபிரான் விருந்துண்டு வீற்றிருந்த சமயத்தில், சூரியனும் மகாமேரு மலைக்கு அந்தப்புறத்தில் சென்று தேவாமிருதத்தை உண்ணுதற்கு அஸ்தமித்தான் என்று வருணிக்கிறார். (பாடல்-85) அதுபோலவே, மாலை நேரத்துச் செவ்வானத்தின் தோற்றமானது, பிராமணர்கள் எல்லாரும் தாம் கழிக்கவேண்டிய கடமைகளை எண்ணி, வேதமந்திரமாகிய கொடிய வில்லின் மேலே, நீராகிய பாணத்தைக் கையால் வைத்து, சூரியனது பெரிய பகைவர்களான அசுரர்களின் மேலே பிரயோகித்தலால் பரவிய இரத்தம் போல நினைக்கும்படி மேற்குத் திசை சிவந்தது என்று வருணிக்கிறார். (பாடல்-86)
    மேலும்,

    மாலைக்காலத்தில் குவிந்த தாமரைத் தொகுதிகள், பகல் பொழுது முழுவதிலும், உக்கிரமாக எழும் சூரியனொளி, நீரில் வாழும் தெய்வமகளிர் மேல் படாதபடி பரப்பப்பட்டிருந்து, அந்தப் பகல்பொழுது ஒடுங்கிவிட்டது என்கிற காரணத்தால், வரிசையாக மடக்கப்பட்ட, அழகிய மென்மையான பட்டுக்குடைகளைப் போல இருந்தன என்று வருணிக்கிறார். (பாடல் 88) அந்திக் காலத்தில் அத்தினாபுர நகரத்தின் தோற்றத்தினை,

    கலந்து மங்கல முழவு வெண்சங் கொடுகறங்க
    மிலைந்த பூங்குழல்வனிதையர் மெய்விளக்கெடுப்பக்
    கலந்த தாமரைத் தடமெலாங் குவிந்தது கண்டு
    மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம்


    (பாடல்-89)

    எனும் பாடலில் வருணிக்கும் திறன் வெளிப்படுவதைக் காணலாம். அதாவது, மங்கலமான பேரிகைகள், வெண்ணிறமான மங்கலச் சங்குகளுடனே கூடி ஒலிக்கவும், மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மகளிர் தீபங்களை ஏந்தவும், அத்தினாபுரி நகரமானது, தாமரை மலர்களையுடைய தடாகங்களெல்லாம் குவியப் பெற்றதைப் பார்த்துத் தானும் மலர்ந்ததொரு தாமரைத் தடாகத்தைப் போலிருந்தது என்று வருணித்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 14:50:27(இந்திய நேரம்)