Primary tabs
-
பாடம் - 6
P10426 கண்ணதாசனின் 'மாங்கனி'இந்தப் பாடம் ஒரு வரலாற்றுச் சான்று கொண்ட பகுதியை எடுத்துப் புதுவிதமாகப் பாடியிருப்பதைக் குறிப்பிடுகிறது. சிறையில் பூத்த நாடகக் குறுங்காவியம் மாங்கனி. கற்பனை கலந்த காதல் சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது.
காதல் வாழ்வில் ஏற்படும் பிரிவுத் துன்பத்தையும், காதல் கைகூடாமல் இருக்கும் நேரத்தில் ஏற்படும் மன உணர்வுகளின் வெளிப்பாட்டினையும் எடுத்துச் சொல்கிறது.
இலக்கண வரம்பினை மீறிய கவிதைப் புனைவான மாங்கனி ஆடவர், பெண்டிர் ஆகியோரின் அழகு நிலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறது.
தமிழ் வேந்தர்கள் மூவரின் வீரம் செறிந்த பெருமைகளையும் தமிழ்ப் பெண்களின் கற்பின் மாண்பினையும் பற்றி எடுத்துச் சொல்கின்றது.
கவியரசு கண்ணதாசன் தான் கற்ற இலக்கியத்தையும் தன்னுடைய அனுபவங்களையும் மாங்கனி காவியத்தில் பதிவு செய்திருப்பதையும் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தை நீங்கள் படித்து, இதில் வரும் கவித்துவ அழகில் ஈடுபட்டால், கீழ்க்காணும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்.
-
மானுடச் சாதியின் மகத்துவத்தில் ‘காதல்’ என்பது மாண்பிற்குரியது; காதலின் வளர்நிலையினை இல்லற மாண்பினுக்குட்படுத்தலே ‘அறவாழ்வு’ என்பதை விளக்கிக் கூறலாம்.
-
மனிதன், இன்பங்களை நுகர்தலிலும் நிலையாமை தான் உண்டு என்பதை உணரலாம்.
-
இசை, நடனம், கலை, அழகியல் தன்மைகளைப் பற்றிய கவிஞரின் கருத்தினை அறியலாம்.
-
காவிய மாந்தர்களின் பண்பு நலன்களை விளக்க, பல்வேறு வகையான உவமைகளைக் கையாளும் திறமை பெறலாம்.
-
தமிழக வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியை அறியலாம், மூவேந்தர்களின் புகழ், வெற்றி, படைச்சிறப்புகளை விளக்கலாம்.
-
மாங்கனி எனும் பரத்தையர் குலப் பெண்ணைப் பற்றி உயர்த்திச் சொல்லியிருப்பதை அறியலாம்.
-
தமிழ்க் காப்பியங்களின் சாயலும் சங்கப்பாடல்களின் தாக்கமும் கொண்டதாக மாங்கனி காவியத்தை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்.
-