Primary tabs
-
6.3 கதைமாந்தர்
மாங்கனி காப்பியத்தின் தலைமை மாந்தர்களாகக் காணப்படுபவர்கள் அடலேறுவும் மாங்கனியும். அவர்கள் இருவரின் காதல் உணர்வை இக்காப்பியம் வெளிப்படுத்துகிறது.
மாங்கனி காவியத்தின் தலைவனாக ‘அடலேறு’ படைக்கப்பட்டிருக்கின்றான். தன்னேரில்லாத் தலைவனாகவே காணப்படுகிறான்.
காவியத்தின் பெரும்பகுதி காதல் வயப்பட்ட ஒரு குணாதிசயப் படைப்பாகவே அடலேறு காணப்படுகிறான். ஆடல் அழகி மாங்கனியைப் பார்த்து, அடலேறு அடைந்த நிலையினை,
செழுங்கொடியைக் கண்வாங்கி மனத்துட் போட்டு சீரணிக்கமுடியாமல் நின்றான் ஆங்கே!என்று எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
- அடலேறுவின் காதல்
மாங்கனி வந்து அவையில் ஆடற்கலை நிகழ்த்திவிட்டுச் செல்கிறாள். அப்படிச் செல்பவளின் பின்னாலே போகிறான் அடலேறு. மாங்கனி சென்று மறைகிறாள்; ஆனாலும் அவள் சென்ற இடத்தையே பார்த்துப் பார்த்து ஏக்கம் கொண்டவனாக, அவளது பாதத்தின் தடயத்தைப் பார்த்து மகிழ்பவனாகக் காணப்படுகிறான் அடலேறு:
போனவளின் பின்னாலே மெல்லப் போனான்!
புதுமனதின் முதல் கூச்சம் இழுக்கக் கண்டு
சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப்பார்த்தான்
தென்றலது போனதற்குச் சுவடு ஏது?
கைத்திறத்தால் தரை தடவிப் பார்த்து அன்னாள்
கால்பட்ட இடத்தில் இளஞ் சூடு கண்டான்!என்று அடலேறுவின் காதல் செயல்பாட்டினை அழகுபட எடுத்துரைக்கிறார் கவிஞர்.
பித்துமனம் நிலையழியப் பெருமூச் சோடு
பேரரசைத் தோற்கடித்த வாளைப் பார்த்தான்!
குத்திடுவேல் வாளெல்லாம் களத்திலேதான்;
கோதையர்பால் துரும்பேதான்என்று தன்னுடைய வாள்வீரத்தையும் தோள்வீரத்தையும் காதல் போர்க்களத்தில் தோற்றுவிடுவனவாகப் பேசுவதைக் காண்கிறோம்.
விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு
வெளியிருக்கும் நினைவின்றி, வாய் வடித்து
மொழிபிறக்கும் தொடர்பின்றிக் காதல் ஒன்றே
மூண்டிருக்கும் உருவானான் அமைச்சன் மைந்தன்!என்று காதல்வயப்பட்டவனின் நிலையினைப் பேசுகிறார் கவிஞர்.
....................... மரம்பழாத
பழந்தின்னும் நினைவான அடலேறங்கே
பசியாற முடியாமல் சோலை புக்கான்!மரத்தோடு மரமாக நின்றான்; தந்தை
வலுவோடு அழைத்திட்ட குரலுங்களோன்;
சிரத்தூடு மலர்பட்டுச் ‘சில்’ லென்றேறி
சிலையாக்க, மூச்சின்றி நின்றான் மைந்தன்!என்று, தன் சிந்தனையில் மாங்கனியைத் தவிர, மற்ற செயல்பாடுகளையெல்லாம் மறந்தவனாகக் காட்சியளிக்கிறான்.
• கோபமும் பண்பும்
நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைச் சந்தித்துத் தனது காதலை வெளிப்படுத்த நினைத்துச் செல்கிறான். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத மாங்கனி அவனைக் கோபத்துடன் திட்டி விடுகிறாள். அடலேறு அப்போதும் அவளிடம் கோபம் கொள்ளாமல், மன்னிப்புக் கேட்கும் ஒரு மாண்பாளனாகக் காணப்படுகிறான்.
மாங்கனிக்குத் தன் மேல் கோபம் வரவழைத்துவிட்டேனே என்று ஏக்கத்துடன் தன்னுடைய படுக்கை அறைக்குள் சென்ற செயலினை,
பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்
படுக்கையில் அடலேறு வந்து வீழ்ந்தான்என்று அடலேறுவின் நிலை பேசப்பட்டுள்ளது.
காதலியின் மூலமாகவே காதலனின் பண்பு நலன்கள் பற்றிப் பேசவைப்பதில் கவியரசு கண்ணதாசன் கைதேர்ந்தவர்.
ஆணழகன்! சிங்காரன்! அவனியெல்லாம்
அடக்கிவைத்த மாவீரன்! அறிவுத்தோட்டம்!
தேன்பொழியும் கருணைமனம்! வடகோ டன்னத்
திரண்டிருக்கும் உயர்தோளன்! அழியாச் செல்வம்
மானமிகும் மறக்குலத்தான் என்றாள்!என்று ஒரு தமிழ் மன்னனின் பெருமைகளைப் பேசுவதைப் போல அடலேறுவின் பண்பு நலன்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
அடங்காத பொலிகாளை உருவம் போலும்
அடலேறு செல்கின்றான் தலைமை தாங்கிஎன்று வீரம் செறிந்த ஒரு காவியத் தலைவனாகக் காணப்படுகிறான். மேலும்,
பெண்களைக் கொடுமைப்படுத்தும் தன் நாட்டு வீரர்களைக் கண்டிப்பவனாகவும் மாங்கனியைக் காணாதவனாக அழுது துடித்துப் புலம்புபவனாகவும் அடலேறு விளங்குகிறான்.
ஒளியிழந்த வானத்தின் மேனி போல
தூக்கத்தில் நடப்பது போலவும் -நடந்து செல்கிறான்மாங்கனியைக் காணாத அடலேறுவின் நிலையினைக் கவியரசு இவ்வாறு பேசுகிறார். இறுதிவரை, காதலுக்காகவே வாழ்ந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்பவனாகவே காவியத்தில் அடலேறு படைக்கப்பட்டிருக்கிறான்.
தன்னேரில்லாத தலைவன் போலவே இளமையும், அழகும் நாணும் பொற்பும் பெற்ற தலைவி காவிய நாயகி மாங்கனி. ஆடல், பாடல், அழகு சிறந்த கலை மடந்தை.
மின்வெட்டுக் கண்கட்ட மேவினாற்போல்
மென்பட்டுப் பூங்குழலி பூமிதொட்டுப்
பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்.என்று மாங்கனியைக் கவிஞர் அறிமுகம் செய்கிறார்.
• மாங்கனியின் அழகு
கவியரசரின் கற்பனையில் பிறந்த பரத்தையர் குலப் பெண்தான் மாங்கனி. உயர்ந்த ஒழுக்கம் கொண்ட, ஆடல் அழகு வாய்ந்த பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.
கொலைவாளுக்கு உறைபோல விழிவாளுக்கு இமை
சிலையோடும் சமமாக விளையாடும் புருவம்
சிறுவானப் பிறைமீது அலைமோதும் அழகுஎன்று சேரமன்னனின் அவைக்களப் புலவன் மூலமாக மாங்கனியின் அழகு பேசப்படுகிறது.
விரிக்காத தோகைமயில்! வண்டுவந்து
மடக்காத வெள்ளைமலர்! நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம்! செகத்தில் யாரும்
தீண்டாத இளமை நலம்; பருவஞானம்!என்று சேரமன்னன் மாங்கனியைப் பற்றியும் அவளது இளமை அழகையும் பற்றிப் பேசுவதாகக் காணமுடிகிறது.
இவ்வாறு அனைவராலும் மாங்கனியின் அழகு நலன்கள் பேசப்படுவதைக் காணலாம்.
• தாயின் வற்புறுத்தலும் மகளின் மறுப்பும்
மாங்கனி தன்னைப்போலவே நடனமாதாக இருந்துவிடக் கூடாது என்பதால், தன்குலத்து ஆடவன் ஒருவனை மணக்க வற்புறுத்துகிறாள் அவள் தாய். ஆனால், தனக்குப் பிடிக்காத ஒருவனை எப்படி மணப்பது என்று மாங்கனி தன் தாயைப் பார்த்துக் கேட்கிறாள்.
கற்சிலையோ அம்மா நான்; கயவன் அந்தக்
காமுகனுக் கென் நெஞ்சத்தைத் தத்தம் செய்ய?பொற்கிளியை வானரத்தின் மடியில் போடப்
பொருந்தியதோ உன்னுள்ளம் போதும்போதும்என்று, தான் விரும்பாத ஆடவனை வற்புறுத்தி மணக்கச் செய்யும் போக்கினைக் கண்டிப்பதை, மாங்கனி மூலம் வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன்.
• காதலும் கண்டிப்பும்
தன்மேல் காதல் கொண்ட அடலேறு, இரவில் தனியாக இருக்கும் தன்னிடம் வந்து காதலைத் தெரிவிக்க வரும் நேரத்தில், அவனைப் பார்த்து
திறந்திருந்த வீட்டிற்குள் ஓசையின்றித்
திருடனைப்போல் நுழைந்தீரே! தென்னர்தானா?
மானத்தை இக் கோதை மறவாள்! போம்!போம்!என்று, உள்மனத்தில் அவனைக் காதலித்தாலும், திட்டிப் பழித்துப் பேசி அனுப்பிவிடுபவளாகக் காணப்படுகிறாள்.
நள்ளிரவு ! தாசிமனை ! இளம்பெண்தூங்கும்
நறுமலர்ப் பஞ்சணையருகோர் காளைவந்து
மெல்லமுகந் தொடுவதுதான் உங்கள் ஏட்டில்
வீரர்கள் பெண்கேட்க வரும் செய்தியா?என்று, தான் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டுப் பெண் கேட்கவே வந்தேன் என்று சொன்ன அடலேறுவைப் பார்த்துக் கோபப்படுகிறாள். “கள்ளமனத்தோடு எம்குலமக்கள் வாழ்ந்தது பழையகாலம் இப்போதில்லை என்பதை மறந்துவிட்டீர்களா?” என்று தன் குடும்ப, குலத்தொழிலின் இழிநிலையை உடைத் தெறிபவளாகக் காணப்படுகிறாள் மாங்கனி. அதே நேரத்தில் அடலேறு நடந்து கொண்ட பெருந்தன்மையினை நினைத்து அவன்மீது காதல் கொள்பவளாகவும் இருக்கிறாள்.
• போராட்டமும் முடிவும்
மலைமேனி எனும் கொடூரன் தன்னை மானபங்கம் செய்ய முயற்சி செய்த போது, அவனை எதிர்த்து, போராடி, வீழ்த்தித் தப்பித்து ஓடிவரும் பெண்ணாகக் காட்சியளிக்கிறாள். பெண்குலமே காணாத துன்பத்தைக் காதலுக்காகப் படுபவளாக மாங்கனி படைக்கப்பட்டிருக்கிறாள். தன் காதலன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை அறிந்த மாங்கனி, தனிமைக்குள் உடல்வேக நிற்கிறாள். தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக ஓடி மறையும் துன்பப் பாத்திரப்படைப்பாக இறுதியில் படைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வாறு ஆட்டத்தில் தொடங்கி அமைதியில் முடியும் மாங்கனியின் கதை, இணையில்லாச் சேரநாட்டுக் காதல் கதை என்பதை நினைவுறுத்துகின்றது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I