Primary tabs
4.8 தென்னிந்திய மொழிகள்
தென்னிந்திய மொழிகளான திராவிட மொழிகளில் முதன்மையானது தமிழ். தமிழ்மொழிக்கு அடுத்த நிலையில் தொன்மையானது தெலுங்கு. தெலுங்குடன் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் இலக்கிய வளமையுடன் உள்ளன. அவற்றில் இருந்து இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. அவற்றை இப்பகுதியில் காணலாம்.
4.8.1 தெலுங்கு
தெலுங்கு மொழியில் உள்ள வேமன்ன பத்தியம் என்ற தத்துவ நூலுக்குத் தமிழில் ஐந்து மொழிபெயர்ப்புகள் உள்ளன. பலரால் வேமன்னரையும் திருவள்ளுவரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் சிறப்புற்று விளங்கும் சுமதி சதகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறே நரசிம்ம சதகம், ஸ்ரீ வாசவி கன்னிகா புராணம் போன்ற நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தெலுங்கு மொழிச் சிறுகதைகள், கதாபாரதி என்ற பெயராலும் கதா ரத்னாவளி என்ற பெயராலும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் வழங்கும் தெனாலிராமன் கதைகள் யாவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தனவாகும்.
தெலுங்கு மொழியின் நாவல்களுள் ஆயிரம் தலைநாகம், உருத்திர மாதேவி, கடைசியில் இதுதான் மிச்சம் போன்ற நாவல்கள் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
தெலுங்கு மொழி நாடகங்களுள் கன்யா சுல்கம், சிவகாம சுந்தரி, பரிணய நாடகம், வாழ்வில் இன்பம் என்பன மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
4.8.2 கன்னடம்
கன்னட மொழியிலிருந்து விசவேசுவரரின் வசனங்கள் முதுமொழிகளாகத் தமிழில் 500 ஆண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விவேக சிந்தாமணி என்ற நூலும், அக்கமாதேவியின் அருளுரை எனும் நூலும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மாஸ்தி வேங்கடேச அய்யங்கார், சிவராம காரந்த், திரிவேணி, யூ.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்ப, கிரிஷ் கார்நாட் முதலிய பலரின் நாவல்களும், நாடகங்களும், சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சாந்தலை, அழிந்த பிறகு, ஸம்ஸ்கார, மண்ணும் மனிதரும், பாட்டியின் கனவுகள், கடசிராத்த, பருவம், பலிபீடம், சிக்கவீர ராஜேந்திரன், சொப்பன மாளிகை, பூனைக்கண் முதலிய புதினங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. ஆண்டுவிழா என்ற நாடகத் தொகுப்பு தமிழில் செல்வாக்குப் பெற்றுள்ளது.
சாகித்ய அகாடெமியின் நன்முயற்சியால் கன்னட இலக்கியப் படைப்பாளிகள், கன்னட இலக்கியங்களில் பரிசு பெற்றவை எனப் பல தமிழ் மொழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணி நடந்து வருகிறது.
4.8.3 மலையாளம்
தமிழோடு நெருக்கமான தொடர்புடைய மொழி மலையாளம். குமாரன் ஆசான், வள்ளத்தோள் முதலிய (ஷைலஜா) மகாகவிகளின் கவிதைகளும், மிளகுக் கொடிகள் என்ற தலைப்பில் கவிதை மொழிபெயர்ப்புத் தொகுப்பும் மரக்குதிரை, கதாபாரதி, மலையாளச் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்துலேகா, ஏணிப்படிகள், செம்மீன், தோட்டியின் மகன், பனிமேகம், பைத்தியக்கார உலகம், வெறும் மனிதன், பேராசிரியர் முதலிய புதினங்கள் தமிழில் பெருவழக்காக உள்ளன. கூட்டுப்பண்ணை அடிமை என்ற நாடகம் முதலிய தொகுப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் என்ற நூலைக் கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார். தகழி, வைக்கம் முகம்மது பஷீர், எஸ்.கே.பொற்றக்காட், எம்.டி.வாசுதேவன் நாயர் முதலியவர்களின் நாவல்களும் சிறுகதைகளும் தமிழில் வந்துள்ளன.
4.8.4 தமிழிலிருந்து பிறமொழிகளுக்குச் சென்றவை
19-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் நூல்களை மேலைநாட்டு மொழிகளில் பெயர்க்கும் பணி பரவலாகத் தொடங்கிவிட்டது. சிவப்பிரகாசம், திருவாசகம், திருவருட்பயன், தேவாரப் பாடல்கள் சில முதலிய சமய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. G.U.போப், திருவாசகத்தையும், திருக்குறள், திருவருட்பயன், நாலடியார், புறநானூறு ஆகியவற்றிலிருந்து சில பல பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விவிலியத்துக்கு அடுத்த நிலையில் மிக அதிகமான மொழிகளில் பெயர்க்கப்பட்ட தமிழ்நூல் திருக்குறள் ஆகும். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய காப்பியங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாரதி, பாரதிதாசன், மு.வரதராசனார், ஜெயகாந்தன், அகிலன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் பிறமொழிகளுக்குச் சென்றுள்ளன. பாரதியும் வள்ளத்தோளும் போன்ற ஒப்பீட்டு நூல்கள் பாரதியை மலையாள மொழியிலும் அறிமுகம் செய்துள்ளன. வள்ளலாரும் நாராயண குருவும் போன்ற ஒப்பீடுகளும் வெளிவந்துள்ளன.
தற்காலத்தில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வாகப் பதிவு செய்ய வேண்டியது குறள் பீடம் என்ற அமைப்பாகும். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பின் வழியாகத் தமிழில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் சில தொகுக்கப்பட்டு அவை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அமைப்பு நிலையிலன்றி, இந்திரன், விஜயராகவன் போன்ற தனியாரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பாராட்டுக்குரியன.
சிற்றிதழ்களின் பங்களிப்பு மொழிபெயர்ப்பு நிலையில் பெரும்பங்கு வகிக்கிறது. அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியே இன்றி அவை வந்த அளவில் உள்ளன.
பிறநாட்டுக் கலை இலக்கியங்களை மொழிபெயர்க்கும் அதே வேளையில் தமிழில் உள்ள இலக்கிய வளங்களையும் பிறமொழிக்கு மொழிபெயர்த்தல் வேண்டும் என்கிற வேட்கை வளர வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழிலிருந்து சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பாரதி, பாரதிதாசன் கவிதைகள் போன்ற இலக்கியங்களையும் படைப்பாளிகளின் படைப்புகளையும் மொழிபெயர்க்க முயற்சி எடுத்துள்ளது.