Primary tabs
4.4 ஆசிய நாட்டு மொழிகள்
ஆசியாவில் சிறப்புடன் விளங்கும் பழம்பெரும் நாகரிகமும் பண்பாடும் கொண்ட நாடு சீனா ஆகும். இயந்திரத் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடு ஜப்பான். இவ்விரு நாடுகளிலும் தனித்தனியே இலக்கியங்கள் அந்தந்த மொழிகளான சீனம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் தோன்றி வளர்ந்துள்ளன. அவற்றுள் சிலவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
4.4.1 சீன ஜப்பானிய இலக்கியங்கள்
ஹீவாங்-கு-பிட்ச் எனப்படும் கன்பூசியசின் இளவேனிலும் இலையுதிர் காலமும் என்ற கவிதைத் தொகுப்பில் சில பகுதிகளைக் கா.அப்பாத்துரையார் மொழிபெயர்த்துள்ளார். மா.செ.துங்கின் கவிதைகள் அண்மையில் தமிழாக்கம் பெற்றுள்ளன. சீனாவில் வழங்கி வரும் மகளிரைப் பற்றிய கதைகளைத் தொகுத்து, பனிப் படலத்துப் பாவை என்ற சிறுகதைத் தொகுப்பாக ந.பிச்சமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.
குங்போதங் என்ற சீனர் எழுதிய நாவலைத் தழுவி கிழக்கோடும் நதி என, த.நா.குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார்.
சி-யூ-சென் என்ற சீன நாட்டுப் பெண் எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பாரதி தமிழில் தந்துள்ளார். பெண் விடுதலை என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் அவரது கவிதைகளைப் பாரதியார் பயன்படுத்தியுள்ளார்.
தத்துவ ஞானிகளான கன்பூசியஸ், லவோட்சு, மென்ஷியஸ் முதலியோரின் நூல்களை முதுமொழிகள், நடுவுநிலைக் கோட்பாடு, சிறப்பு மிகு கல்வி, மாண்பு மிகு நெறி, மென்ஷியஸ் போதனைகள் எனும் நூல்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
ஜப்பானிய மொழியில், பண்டைக்கால இலக்கியங்கள் மிகக் குறைவு. ஆனால், இக்கால இலக்கியங்கள் நன்கு வளர்ந்துள்ளன. ஜப்பானிய சிறுகதைகள் மணியோசை எனும் தொகுப்பாகப் புதுமைப்பித்தனால் வெளியிடப்பட்டுள்ளன.
முரசாக்கி எனும் புகழ் மிகு ஜப்பானிய எழுத்தாளரின் கெஞ்சி மோனைகத்ரி எனும் புதினத்தை கெஞ்சிக் கதை எனும் பெயரில் கா.அப்பாத்துரையார் மொழிபெயர்த்துள்ளார். நாத்சுமே ஸோஸாகி என்பவரின் கோ கோ ரோ எனும் கதை, தமிழில் கொகோரோ எனும் புதினமாகக் கலைக்கதிர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
யாமதாகாஷி என்னும் ஜப்பானிய புதின ஆசிரியரின் உலகப் புகழ் வாய்ந்த கதையினைத் துன்பக் கேணி என்ற பெயரில் கா.அப்பாத்துரையார் தமிழாக்கம் செய்துள்ளார். மற்றும், பகற்கனவு, முத்துமாலை போன்ற ஜப்பானிய நாடகங்களும் தமிழில் வெளிவந்துள்ளன.
நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் குறும்பாட்டு (Haiku) ஒன்றனைப் பாரதியார் தமது கட்டுரைகளில் ஒன்றில் மொழிபெயர்த்துள்ளார்.
தீப்பற்றி எரிந்து
வீழுமலரின்
அமைதி என்னே!என்ற கவிதை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
நோகுச்சி எழுதிய மடலினைத் தம்முடைய கடிதங்களில் பாரதியார் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
6.நார்வே நாட்டு நாடக ஆசிரியருள் ஒருவரைக் குறிப்பிடுக? தமிழில் வந்துள்ள அவர் நாடகங்களைக் குறிப்பிடுக.