தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    மொழியானது காலந்தோறும், சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. இன்றைய தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதாவது இலக்கண அமைப்பு, சொல்லாட்சி, ஒலியமைப்பு, பொருள் வெளிப்பாடு போன்றவற்றால் மாற்றங்களைக் காணலாம். இன்று வழக்கிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பண்டைத் தமிழில் காணவியலாது. ஒரு சொல்லுக்கு முன்னர் அறியப்பட்ட பொருளும், இன்றைய பொருளும் முற்றிலும் மாறுபட்டிருக்க வாய்ப்புண்டு. இந்நிலை எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. மொழியின் வளர்ச்சிப் போக்கிலும் வரலாற்றிலும் இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாகும். அரசு, பொருளியல், பண்பாடு போன்றன மொழியில் ஏற்படும் மாற்றங்களைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணிகள் ஆகும். 19ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பின் வழியே பரவலாக்கப்பட்ட சொல்லாக்கமும் கருத்து ரீதியில் புதிய போக்குகளை எதிர்கொண்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகத் தமிழில் வளர்ச்சியடைந்துள்ள சொல்லாக்கத்தின் போக்குகளையும் அவற்றிற்கான காரணங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 13:21:54(இந்திய நேரம்)