தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தரப்படுத்துதலும் எதிர்காலமும்

  • 6.4 தரப்படுத்தலும் எதிர்காலமும்

    சொல்லாக்கத்தில் தரப்படுத்தலின் தேவையையும், சொல்லாக்கத்தின் எதிர்காலத்தைப் பற்றியும் இனிப் பார்ப்போம்.

    6.4.1 தரப்படுத்தல்

    சொல்லாக்கத்தில் தரப்படுத்துதல் என்பது முக்கியமான பணி ஆகும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சொற்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய முயற்சியில் சீர்மை இல்லை. ஒத்த கருத்து இல்லை; அவரவர் தத்தம் விருப்பப்படி சொல்லாக்கியுள்ளனர். இவற்றைத் தொகுத்து வகுத்துத் தரப்படுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. சொல்லாக்க முயற்சியில் இதுவரை நிலைபேறு பெற்றுப் பெரு வழக்காகியுள்ள சொற்களையும் தொகுக்க வேண்டியுள்ளது. இந்நிலையேற்படின் எதிர்காலத்தில் தமிழில் அறிவியல் கட்டுரைகள்/நூல்கள், பாடநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றின் உருவாக்கத்தில் எல்லோரும் ஏற்கும் நிலை ஏற்படும். சொல்லாக்கமும் புதிய வளர்ச்சி நிலையினை அடையும்.

    6.4.2 எதிர்காலம்

    சொல்லாக்கம் என்பது என்றும் தொடரும் பணி. உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கலைச்சொற்களைத் தொகுத்து, அவற்றைத் தமிழில் சொல்லாக்கம் செய்து அகராதிகள் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும். இம் முயற்சியில் ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேயா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் சொல்லாக்க முயற்சிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதனால் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஒரே மாதிரியான சொல்லாக்கங்களைப் பயன்படுத்தும் நிலையேற்படும்.

    உலகமெங்கும் முப்பத்தொரு மொழிகளில் அறுபத்தைந்து நாடுகளில் சுமார் 280 கலைச்சொல்லாக்கக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இக்குழுக்களுடன் தொடர்பு கொண்டு சொல்லாக்கம் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் சொல்லாக்கத்தில் நிலைபேறாக்கம் ஏற்பட வழியுண்டாகும்.

    தமிழ் வாழும் மொழியாக நிலைபெற வேண்டுமெனில், அது உயர் கல்வியில் பயிற்று மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் செயற்பட வேண்டும். இந்நிலையில் சொல்லாக்கத்தின் தேவை முன்னெப்போதையும் விட அதிக அளவில் தேவைப்படுகிறது. அதாவது தமிழ் மொழியின் வளர்ச்சியென்பது சொல்லாக்கத்தினைச் சார்ந்துள்ளது என்று கூறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:57:34(இந்திய நேரம்)