தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Saivam - 3.4. சுந்தரமூர்த்தி சுவாமிகள்-3.4. சுந்தரமூர்த்தி சுவாமிகள்

  • 3.4 சுந்தரமூர்த்தி சுவாமிகள்
    E

    சுந்தரமூர்த்தி

    திருமுறை ஆசிரியர்களுள் மூன்றாமவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் அருளிய பனுவல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் திருமுனைப்பாடி நாட்டில், ஆதி சைவர் குலத்தில் சடையனார் - இசைஞானியார் அருமகவாக அவதரித்தார். இவர் பிள்ளைத் திருநாமம் ஆரூரர் என்பது. திருமணநாளில் சிவபெருமான் புத்தூரில் தடுத்து ஆட்கொண்டான். இறைவன் விரும்பியவாறு திருவெண்ணெய் நல்லூரில் ‘பித்தா பிறை சூடி’என்று சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்க, இவர் பதிகப்பாமாலைகள் பாடத் தொடங்கினார்.

    திருவதிகையில் திருவடி தீட்சை பெற்றார். திருவாரூரில் இறைவன் தம்மை இவருக்குத் தோழனாகத் தந்தான். திருவாரூரில் பரவையாரையும் திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்தார். சிவபெருமான் இவருக்காக வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்று உணவு படைத்தார். பரவையின் ஊடல் தீர்க்கத் தூது சென்றார். சேரமான் பெருமாள் நாயனாரும், கோட்புலியாரும் இவர் காலத்தவர். முதலை வாய்ப் பாலனை இவர் பதிகம் பாடி மீட்டார். வன்தொண்டன் என்பதும் இவர் பெயர்களுள் ஒன்று. திருத்தொண்டத் தொகை இவரால் அருளப்பட்டது. ஆடிச் சுவாதி நாளில் இவர் வெள்ளானை மீது ஏறிக் கயிலை சேர்ந்தார். சகமார்க்கம் என்றும் யோகநெறி என்றும் கூறப்படும் தோழமை நெறியில் வாழ்ந்தவர் இவர். இவர் உலகில் வாழ்ந்திருந்த காலம் 18 ஆண்டுகள் என்பர். இவர் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கூறப்படுகிறது.

    3.4.1 திருத்தொண்டத் தொகை

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையுள் 100 பதிகங்களும் 1026 அருட்பாடல்களும் இடம் பெற்றுள்ளன. 96 திருத்தலங்கள் இவர் பாடல் பெற்றுச் சிறந்துள்ளன. இவர் 17 பண்களில் பாடியுள்ளார். இவர் அவதரித்த நோக்கமே திருத்தொண்டத்தொகை என்ற அடியார் வரலாறு கூறும் பதிகம் பாடுவதற்கென்று சேக்கிழார் குறிக்கிறார்.

    மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
    தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்போதுவான்

    (பெரியபுராணம்-35)

    சுந்தரர் வருகை அமைந்தது என்பது சேக்கிழார் எண்ணம் திருத்தொண்டத் தொகையின் சிறப்பினைப் பெரிய புராணம் பலவாறு விரித்துரைக்கிறது. சான்றாக

    ஈசன் அடியார் பெருமையினை
    எல்லா உயிரும் தொழ எடுத்துத்
    தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகை....
    (பெரியபுராணம் - 1270)

    இதில் 60 தனியடியார்களும் 9 தொகையடியார்களும் குறிக்கப்பட்டுள்ளனர். பெரிய புராணத் தோற்றத்திற்கு இதுவே முதல் நூலாக அமைந்தது. இதில் ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று தொடங்கி 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    3.4.2 பக்திக் கனிவு

    சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏழாம் திருமுறைப் பாடல்கள் இலக்கிய எழிலும், கற்பனை வளமும், பக்திக் கனிவும் மிக்கன. இறைவன் ஒருவனே போற்றிப் புகழத் தக்கவன் என்பதனை,

    தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
        சார்வினும் தொண்டர் தருகிலாப்
    பொய்மை யாளரைப் பாடாதே எந்தை
        புகலூர் பாடுமின் புலவீர்காள்

    (7564)

    (இச்சை = விருப்ப மொழிகள்)

    குற்றம் செய்யினும் மன்னித்துச் சிவ பெருமான் அருள்செய்வான் எனத் தாம் கொண்ட நம்பிக்கையை,

    குற்றஞ் செய்யினும் குணம் எனக் கருதும்
        கொள்கை கண்டு நின் குரைகழல்அடைந்தேன்
    பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
        பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே

    (7786)

    என்ற அடிகளில் சுந்தரர் பதிவு செய்கிறார்.

    3.4.3 அரிய தொடர்கள்

    சைவப் பெருமக்கள் போற்றித் துதிக்கும் பல அரிய பாடல்களும், தொடர்களும் ஏழாந்திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. ஒன்றிரண்டு கீழே தரப்பட்டுள்ளன.

    நற்றவா உனை நான்மறக்கினும்
    சொல்லும் நா நமச்சி வாயவே

    (7712)
    வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால்
    மற்று நான் அறியேன் மறு மாற்றம்

    (7774)
    அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
    ஆரூ ரானை மறக்கலும் ஆமே

    (7827)
    விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்
    விரும்பி ஆட்பட்டேன்

    (8189)
    மண்ணுலகில் பிறந்து உம்மை
    வாழ்த்தும் வழியடியார்

    (8245)
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:20:51(இந்திய நேரம்)