தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Saivam - 3.5. மாணிக்கவாசகர்-3.5. மாணிக்கவாசகர்

  • 3.5 மாணிக்கவாசகர்
    E
    பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக் கோவையாரும் எட்டாம் திருமுறையாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

    மாணிக்கவாசகர்
    மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். இயற்பெயர் திருவாதவூரர். பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். மன்னன் அளித்த பொருளை இவர் குதிரை வாங்கப் பயன்கொள்ளாது திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். சிவபெருமான் குருவடிவம் காட்டி இவரைக் குருந்த மர நிழலில் ஆட்கொண்டான்.
    அக்காலை இவர் பாடிய பனுவல்களே திருவாசகம். இறைவன் இவருக்கு மாணிக்கவாசகர் என்னும் திருநாமம் சூட்டினார்.
    நரி பரியானது, வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது, இறைவன் பிரம்படிபட்டது, பௌத்தர்களோடு வாதிட்டது, தில்லைப் பொன்னம்பலத்தில் இறைவன் தாள் மலர்களில் கலந்தது என்பன இவரது வாழ்வியல் அற்புதங்களாகும். ஆனி மக நாளில் இவர் இறையடிகளில் கலந்தார். இவ்வுலகில் இவர் வாழ்ந்த காலம் 32 ஆண்டுகள்.
    இவர் காலம் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குப் பிற்பட்டது என்பதே ஆய்வாளர் முடிவு. இவர் தேவார மூவருக்கு முற்பட்டவர் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

    3.5.1 திருவாசகம்

    திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முதற்கண் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் அமைந்துள்ளன. அடுத்து வரும் திருச்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.

    மேலை நாட்டுக் கிறித்துவர்களும் இதன் சிறப்பில் நெஞ்சைப் பறி கொடுத்துள்ளனர். இதனை ஒரு அனுபவ நூல் என்பர். திருவாசகச் சிறப்பினைப் பின்வந்த சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார் முதலியோர் பெரிதும் போற்றிச் சிறப்பித்துள்ளனர். திருவாசகம் ஒரு சிறந்த பாராயண நூலாகத் திகழ்ந்து வருகிறது.

    3.5.2 அனுபவ வெளிப்பாடுகள்

    திருவாசகத்தில் பக்தி அனுபவ வெளிப்பாட்டில் வந்த பல அரிய தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க
    (சிவ புராணம் - 1)
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
    (சிவ.பு - 18)
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

    (சிவ.பு - 26-31)

    (விருகம் = மிருகம் என்பது விருகம் என மருவிற்று, பல்விருகம் = பல மிருகம், தாவரம் = நிலைப்படு பொருள், சங்கமம் = இயங்கும் பொருள்)

    தென்னா டுடைய சிவனே போற்றி
    எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
    (போற்றித் திருவகவல் 164-65)

    இவையும், இவை போல்வனவுமாகிய அரிய தொடர்கள் பலவற்றைத் திருவாசகத்தில் காணலாம்.

    3.5.3 அருட் பாடல்கள்

    திருவாசகத்தில் ஞான அனுபவ வெளிப்பாடாக அமைந்த உள்ளுருக்கும் அருட்பாடல்கள் பல உள்ளன. ஒன்றிரண்டைக் காணலாம்.

    யானே பொய் என் நெஞ்சும் பொய்
         என் அன்பும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால்
         உன்னைப் பெறலாமே
    தேனே அமுதே கரும்பின்
         தெளிவே தித்திக்கும்
    மானே அருளாய் அடியேன்
         உனைவந்து உறுமாறே

    (திருச்சதகம் - 90)

    (உறுமாறே = பெறும் வழி)

    என்ற பாடலில் தன்னிலை இரக்கம் நிறைந்துள்ளது. ‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ என்ற பாடலில் படைத்தல் முதலிய இறைவனின் ஐந்தொழில்களும் ஒரு சேரப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மா£ணிக்கவாசகரின் பக்தி வைராக்கியத்தை

    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
         அன்பினில் விளைந்த ஆரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
         புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

    செம்மையே ஆய சிவபதம் அளித்த
         செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
         எங்கெழுந் தருளுவது இனியே


    (பிடித்த பத்து:538)

    என்ற அரிய பாடல் அளவிட்டுக் காட்டுகிறது
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:44:37(இந்திய நேரம்)