தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202263.htm-சிற்றிலக்கியங்கள்

  • 6.3 சிற்றிலக்கியங்கள்

    சிற்றிலக்கியங்களில், பொதுவான அமைப்பையும் வகைகளைப்
    பற்றியும் சிற்றிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற தாளில்
    படித்திருப்பீர்கள்.     அதனால்     இங்கு வைணவச்
    சிற்றிலக்கியங்களைப் பற்றிச் சுருக்கமாகவே பார்க்கப்
    போகிறோம்.

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகை
    உறுதிப்பொருள்களுள் ஒன்றோ, பலவோ, குறைந்துவரின் அது
    சிற்றிலக்கியம் என அழைக்கப்படும். அத்தன்மைத்தான
    வைணவ இலக்கியங்கள் பற்றிச் சான்றுக்காகச் சிலவற்றைக்
    காணலாம்.

    6.3.1 அந்தாதி

    திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்து அந்தாதிகள் உள்ளன. அவை
    தவிர வைணவ சமயவாதிகள் பல அந்தாதிகள் இயற்றி
    உள்ளனர்.

    • இராமானுச நூற்றந்தாதி

    திருவரங்கத் தமுதனார் இராமானுச நூற்றந்தாதியை 108
    கட்டளைக் கலித்துறைகளில் பாடியுள்ளார். அதன்படி
    ஆழ்வார்கள் காலம் பின்வருமாறு:

    1.
    பொய்கை ஆழ்வார்
    }
    2.
    பூதத் தாழ்வார்
    }6ஆம் நூற்றாண்டு
    3.
    பேயாழ்வார்
    }
    4.
    திருப்பாணாழ்வார் திருமழிசை ஆழ்வார்
    }
    5.
    தொண்டரடிப் பொடி ஆழ்வார்
    }
    6.
    குலசேகராழ்வார்
    }
    7.
    பெரியாழ்வார்
    }8 ஆம் நூற்றாண்டு
    8.
    ஆண்டாள்
    }
    9.
    திருமங்கை ஆழ்வார்
    }
    10.
    நம்மாழ்வார்
    }9 ஆம் நூற்றாண்டு
    11.
    மதுரகவி ஆழ்வார்
    }

    • சடகோபர் அந்தாதி

    கம்பர், நம்மாழ்வார் மீது சடகோபர் அந்தாதி பாடித்
    ‘தெய்வங்களில் உயர்ந்தது திருமால்; அந்தப் பரம்
    பொருளைப் பாடிய கவிஞர்களுள் தலைசிறந்த தெய்வக்
    கவிஞர் நம்மாழ்வார்’ எனப் போற்றுகின்றார்.

    கம்பர் தெய்வப் பனுவலான திருவாய்மொழியைக் ‘கண்ணன்
    உண்ணும் அறுசுவை உணவு’ (7) பக்திக்கு மூலப்பனுவல் (8)
    திருமாலின் 11ஆவது அவதாரம் (78), நான்கு வேதத்தின்
    சாரம் (71) எனப் பலவாகக் காண்கின்றார்.

    பாக்களில் சிறந்ததாகத் திருவாய் மொழியையும், அதைப்
    பாடிய நம்மாழ்வாரை ‘ஞானத்தைத் திறந்து தந்தவன்’(85)
    என்றும் புகழ்கின்றார்.

    நம்மாழ்வாரைப் பற்றி மதுரகவி 10 பாசுரங்கள் பாடி அருள்
    பெற, கம்ப நாடர் 10 பதிகங்கள் பாடி அருள்பெற
    விழைந்துள்ளார்.

    • திருவாய்மொழி நூற்றந்தாதி

    ஆழ்வார் திருநகரியில் பிறந்து அழகிய மணவாளன் என
    இயற்பெயர் பெற்ற மணவாள மாமுனிகள் திருவாய்மொழி
    நூற்றந்தாதி, மற்றும் உபதேச ரத்தின மாலை (71 வெண்பா),
    ஆர்த்தி பிரபந்தம் ஆகிய மூன்று நூல்களை அருளியுள்ளார்.

    மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே! ஓடு (7) மாறன்
    பதம் பணிக என்சென்னி, வாழ்த்திடுக என்னுடைய வாய் (10),
    மாறன் அடியாருடன் நெஞ்சே! ஆடு (13), ஞான முனி (99)
    என நம்மாழ்வாரைத் திருவாய்மொழி நூற்றந்தாதியில்
    புகழ்கின்றார் மணவாள மாமுனி. சோழநாட்டில் திருமங்கை
    நகரில் பிறந்த அழகிய மணவாளதாசர் திருவரங்கத்தில் தங்கி,
    திருவரங்கப் பெருமானைப் பாடுவதில் பேரின்பம் கண்டவர்.
    இவர் திருவரங்கத்து அந்தாதி, திருவேங்கடத்து அந்தாதி,
    நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய
    மூன்று அந்தாதி
    நூல்களை அருளியுள்ளார். இவை அஷ்டப்பிரபந்தம் என்று
    அழைக்கப்படும் நூலுள் இடம் பெற்றுள்ளன.

    6.3.2 சிலேடை உலா

    நந்துவராயர் அருளிய சிலேடை உலா ‘சடகோபன்
    செந்தமிழை’ப் போற்றுகின்றது.

    எண்ணார் மறைப்பொருளை எல்லாரும் தாம்அறியப
    பண்ணார் தமிழால் பரிந்து

    எனப் புகழ்கின்றது.

    6.3.3 ஊசல்

    அஷ்டப் பிரபந்தம் அருளிய பிள்ளைப் பெருமாள்
    ஐயங்காரும் (அழகிய மணவாள தாசர்) அவர் திருப்பேரன்
    கோனேரியப்பன் ஐயங்காரும் முறையே சீரங்க நாயகர்
    ஊசல்
    (32 பாடல்கள்) சீரங்க நாயகியார் ஊசல் எனத்
    தனித் தனி நூலாக அருளியுள்ளனர்.

    6.3.4 திருவரங்கக் கலம்பகம்

    பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றியது திருவரங்கக்
    கலம்பகம். வைணவர் இயற்றிய கலம்பகங்களுள் இது
    குறிப்பிடத்தக்கது. மறக்குடிப் பெண் அரங்கனின் பாதத்தில்
    பாசம் வைத்தவள் எனப் பாடுகிறார்.

    கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
    குறையுடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
    அற்றவர்சேர் திருவரங்கப் பெருமாள் தோழன்
    அவதரித்த திருக்குலமென்று அறியாய் போலும்

    (பெருமாள் தோழன் = குகன்)

    என்னும் பாடல் மகள் மறுத்தலில் அமைந்து அரங்கன்
    பெருமை பேசுவதைக் காணலாம்.

    பதின்மர் செந்தமிழைப் படிக்கிலாய்; கேளாய்
    படித்தபேர் தாளையும் பணியாய்
    எதிபதி சரணே சரணம் என்று ஒருகால்
    இசைக்கிலாய், எமது வேங்கடத்தைத்
    துதி செயாய், இருந்த இடத்து இருந்தேனும்
    தொழுகிலாய்! வாழி என் மனனே!
    மதிநுதல் அலர்மேல் மங்கை நாயகனார்

    மலர்ப்பதம் கிடைப்பது எவ்விதமே?

    (எதிபதி = யதிராஜர், இராமானுசர்)

    என்பது திருவேங்கடக் கலம்பகம், பன்னிரு ஆழ்வார்களுள்
    ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் ஆகியோரை நீக்கி, பதின்மர்
    பாடிய செந்தமிழ் எனத் திவ்வியப் பிரபந்தத்தைக் குறிக்கின்றது.
    திருமாலின் பெருமை பேசுவதே வைணவச் சிற்றிலக்கியங்களின்
    குறிக்கோளாக இருப்பதை நாம் அறியலாம்.

     


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    வைணவக் காப்பியங்கள் இரண்டினைக்
    குறிப்பிடுக.
    2.
    வைணவர் இயற்றிய இலக்கண நூல்கள்
    இரண்டினைச் சுட்டி, அவற்றின் ஆசிரியர்
    பெயரை எழுதுக.
    3.
    திருப்பதிக் கோவை காட்டும் திவ்விய
    தேசங்கள் அல்லது வைணவத் திருத்தலங்கள்
    எத்தனை?
    4.
    மணவாள மாமுனி அருளிய அந்தாதியின்
    திருநாமத்தை எழுதுக.
    5.
    திருவரங்கக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்?

    6.3.5 கோவை

    மாறனகப் பொருளுக்கு இலக்கியமாகத் திருக்குருகைப்
    பெருமாள் கவிராயர் இயற்றிய திருப்பதிக் கோவை
    குறிப்பிடத்தக்க கோவை நூலாகும். நாலாயிரப் பாசுரப்படி
    108 திருப்பதிக்கோவை ஒன்றை வங்கிபுரத் தாய்ச்சி
    அருளியுள்ளார்.

    6.3.6 பிள்ளைத் தமிழ்

    வேதத்திலும் மேலான பாடல்களைத் தம்மீது பாடும்படி,
    திருமாலே நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்திற்கு, நடந்தார்’
    என அழகர் பிள்ளைத்தமிழ் நம்மாழ்வார் பெருமையைப்
    பேசுகின்றது.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் போன்ற சைவம் பற்றிய
    பிள்ளைத் தமிழ் நூல்களும் காப்புப் பருவத்தில் குழந்தையைக்
    காக்க வேண்டி, காத்தல் கடவுளான திருமாலைக் காக்குமாறு
    பாடி வழிபடுகின்றன.

    6.3.7 தூது

    திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) எழுந்தருளி
    இருக்கும் சௌந்தரராகவப் பெருமாள் உலா வந்ததைக் கண்ட
    தலைவி, அவர் மீது காதல் கொண்டு, ‘அழகரிடம் சென்று
    மாலை வாங்கிவா’ எனக் கிளியைக் தூது விடுத்ததாக அமைந்த
    நூல் ‘அழகர் கிள்ளை விடு தூது’ ஆகும். இதன் ஆசிரியர்
    பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

    கிளியிடம் “நீ திருமால் பெயராகிய ‘அரி’ என்ற பெயர்
    பெற்றிருக்கின்றாய்; திருமால் நிறம் பெற்றாய்; திருமகள்
    உன்னைத் தன் கையில் பிடிக்கின்றாள்; உன் சிறகு கண்ணன்
    குழல் ஊதிய காலத்துத் தழைத்த பசுந்தழையின் நிறம்.
    இராமன் இராவணனை அழித்த பிறகு வீடணன் இலங்கையில்
    புதியதாகக் கட்டிய தோரணமோ அது? நீ பேசும் மொழி
    கண்ணனின் புல்லாங்குழல் இசையோ? எனப் பறவையில்
    பெருமானைக் காண்கின்றாள் தலைவி.

    பாட்டுடைத் தலைவன் ஆன அழகரின் அவதாரப்
    பொலிவைப் பேசுகின்றாள்; இறைவனின் அருளையும்
    ஆட்கொள்ளும் பண்பையும் சொல்லிச் சொல்லி அரற்றுகிறாள்
    தலைவி.

    - பைந்தமிழால்
    ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நற்கவியால்
    ஓதும் பதினொருவர் உள்ளத்தான்

    (கண்ணி 86-87)(பதினொருவர் ஆழ்வார்கள்


    எங்கும் இலாதிருந்தே எங்கும் நிறைந்திருப்போன்

    எங்கும் நிறைந்திருந்தே எங்குமிலான் - அங்கறியும்
    என்னை எனக்கொளித்தி யான் என்றுங் காணாத
    தன்னை எனக்கருளும் தம்பிரான்’

    (கண்ணி 86-87)

    மேற்காட்டிய சான்றுகள் தலைவியின் காதல் நோயோடு
    இறைவனின் சிறப்பையும் வெளிப்படுத்துவன.

    ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல
    வைணவத் தூது நூல்களுள் ஒன்றான அழகர் கிள்ளை விடு
    தூது திருமாலின் பெருமை பேசும் சமயக் களஞ்சியம் எனலாம்.

    பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளையின் கவிதை நடையும்
    இருபொருளில் அமைந்த சொற்களும், இசையில் பிரித்துப்
    பார்த்தால் பொருள் வேறு வேறு தரும் சொற்களும் தூது
    இலக்கியத்துக்கு வளம் சேர்க்கின்றன.

    6.3.8 பரணி

    அஞ்ஞவதைப் பரணி, பேய் முறைப்பாடு பகுதியில்
    ‘சடகோபன் அமுதம்’ ‘தீந்தமிழ்’, ‘ஒரு கோடிவேதம்’ எனத்
    திருவாய் மொழியின் சிறப்பைப் பேசுகின்றது.

    தண்பொருளை வீசும் வண்குருகை யாளி
    தந்த தமிழ் வேதம் வாழியவே

    எனக் குறிப்பிடுகின்றது.

    • இரணியவதைப் பரணி

    இரணியன் பிரமனால் கொடுக்கப்பட்ட வாழ்நாளை உடையவன்
    எனச் சுட்டுகிறது. இரணியன் அழிவு பற்றிப் பேசுகிறது.
    கஞ்சவதைப்பரணி
    கண்ணபிரான் கம்சனை அழித்ததைக்
    கூறுகின்றது.

    • மாலை

    பிள்ளைலோகாச்சாரியார் நவரத்தின மாலை இயற்றியுள்ளார்.
    வேதாந்த     தேசிகர்     என்று     அழைக்கப்படும்
    திருவேங்கடமுடையான் அருளியனவாகத் தமிழில் 20 நூல்கள்
    கிடைத்துள்ளன.     அவற்றுள் திருச்சின்னமாலை,
    நவரத்தினமாலை
    ஆகிய இரு மாலை நூல்கள் உள்ளன.
    மணவாள மாமுனி அருளிய உபதேசரத்தினமாலை 71
    வெண்பாக்களில் ஆழ்வார் பதின்மர் வரலாற்றைக் கூறுகின்றது.
    திருக்குருகைப்     பெருமாள்     கவிராயர்     மாறன்
    கிளவிமணிமாலை
    எழுதியுள்ளார். பிள்ளைப் பெருமாள்
    ஐயங்கார் திருவரங்கத்துமாலை, திருவேங்கடமாலை ஆகிய
    இரு மாலைகளை அருளியுள்ளார்.

    • மான்மியம்

    சைவ சமயத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று
    பொருள்கள்     கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தலத்தின்
    பெருமையைப் (மற்ற இரண்டையும் சேர்த்தே) பேசுவன
    தலபுராணங்கள். அவ்வாறே வைணவத் திருப்பதிகளின்
    பெருமையை, மான்மியங்கள் எடுத்துக்கூறுகின்றன. மான்மியம்,
    என்ற சொல் மகாத்துமியம் என்னும் வடசொல்லின்
    தமிழ்வடிவம்.     திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
    திருக்குருகை மான்மியம்
    என்னும் நூலை இயற்றியுள்ளார்.
    இந்நூல் ஊரின் பெருமையைத் திருமாலோடு இணைத்துப்
    போற்றுகின்றது.

    • மகாத்மியம்

    வேதாந்த தேசிகர் அத்திகிரி மகாத்மியம் அருளியுள்ளார்.

    • பஞ்சகம்

    பிள்ளை லோகாச் சாரியாரும், வேதாந்த தேசிகரும் அர்த்த
    பஞ்சகம்
    என்னும் பெயரில் தனித்தனி நூல்கள்
    அருளியுள்ளனர்.

    • பத்து

    வேதாந்த தேசிகர் அடைக்கலப் பத்து என்னும் தமது நூலில்
    திருமாலின் திருவடிப்பேற்றைப் போற்றுகின்றார்.

    • திருநாமம்

    வேதாந்த தேசிகர் பன்னிரு திருநாமம் எனும் நூலைப்
    பாடியருளியுள்ளார்.

    • வழக்கம்

    வேளாளர்கள் தம் திருக்கையால் வழங்கும் கொடைச்
    சிறப்பைப் பற்றிக் கூறும் நூல் திருக்கைவழக்கம். இந்நூல்
    கம்பநாடரால் 59 கண்ணிகளில் கலிவெண்பாவால் பாடப்பட்டது.

    - பண் அமைந்த,
    வேதம் ஒருநான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
    ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை

    (42)

    பண் அமைத்து ஒதவேண்டிய வட மொழி வேதங்கள்
    நான்கையும் நாலடிப் பாசுரங்கேளாடுத் தமிழில் பாடிய
    கருணை மிகுந்த கை வேளாளர் கை என நம்மாழ்வாரின்
    சிறப்பையும் அருளிச் செயல்களையும் போற்றுகின்றார்.

    • பிரபந்தம்

    மணவாள மாமுனிகள் ஆர்த்தி பிரபந்தம் இயற்றியுள்ளார்.
    இராமானுசர் அவதரித்த காலத்தில் அவருடன் இருந்து
    ஆண்டான், ஆழ்வான், எம்பார், வடுக நம்பி போன்றோர்
    பணி செய்தார்கள். அதுபோல மணவாள மாமுனிகளும் பணி
    செய்ய விரும்பினார். எனவே அவர் இந்த உலகத்தில் வாழ
    விரும்பவில்லை, ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டி ஆர்த்தி
    பிரபந்தம்
    அருளினார்.

    ‘வாழி எதிராசன் வாழி எதிராசன்’ எனப் பிரபந்தம் இராமானுசர்
    வாழ்த்தொடு தொடங்குகின்றது. இந்நூல் முழுக்க எதிராசர்
    ஆன இராமானுசருடன் நிலையான தொடர்பு வேண்டியும்
    அவரின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்தும் பாடியுள்ளார்.


    தேன்பயிலும் தாரான் எதிராசன் சேவடிமேல்
    தாசன் பரம பக்தி தலை எடுத்து -மாந்தர்க்(கு)
    உணவாக ஆர்த்தியுடன் ஒண்தமிழ்கள் செய்தான்
    மணவாள மாமுனிவன் வந்து

    (கண்ணி 86-87)

    என்பது அந்த மணவாள மாமுனிவரைப் தனிப்பாடல் (இத்தகைய போற்றித் தனிப்பாடல்களைத்
    ‘தனியன்’ என்ற பெயரில் வைணவம் குறிப்பிடும்)

    6.3.9 பள்ளு

    பள்ளு நூல்களில் தலை சிறந்தது முக்கூடற்பள்ளு ஆகும்.
    பண்ணையாரிடம் வேலை செய்யும் பள்ளன் வைணவ
    மதத்தைச் சார்ந்த பள்ளி ஒருத்தியையும் சைவ மதத்தைச்
    சார்ந்த பள்ளி ஒருத்தியையும் திருமணம் செய்து கொண்டான்.
    இரண்டு பள்ளிகளுக்கும் இடையே சண்டை மூண்டது.
    அவர்கள் தங்கள் நாடு, ஊர், மதம் போன்றவை பற்றி
    ஏசிக்கொள்கின்றனர். சான்று:

    வைணவம் சார்ந்த பள்ளி

    நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல்
    வாரி நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள்
    நாதனல்லோடி?

    (நஞ்சை உண்டது = சிவன், நாதன் = சிவன்)

    சைவம் சார்ந்த பள்ளி

     

    மாட்டுப் பிறகே திரிந்து சோற்றுக்கில்லாமல்
    வெறும் மண்ணை உண்டான் உங்கள் முகில்
    வண்ணனல்லோடி?

    (கிருஷ்ணாவதாரத்தில் மண்ணை உண்டது =
    முகில் வண்ணன், முகில் வண்ணன் =
    கண்ணன்)

    வை.ப :


    ஏற ஒரு வாகனம் இல்லாமையினால் மாட்டில்
    ஏறியே திரிந்தான் உங்கள் ஈசனல்லோடி?

    (மாடு = சிவன் வாகனமாகிய நந்தி)

    சை.ப :


    வீறு சொன்ன தென்ன மாடு தானுமில்லாமல்
    பட்சி மீதில் ஏறிக் கொண்டான் உங்கள்
    கீதனல்லோடி?

    (பட்சி = கருடன், கீதன் = திருமால்)

    பள்ளு இலக்கியம் சாதாரண மக்களின் வாழ்வியல் கூறுகள்
    பற்றியது என்பதால் மதக் கருத்துகளும் எளிமைப்படுத்தப்பட்டு,
    பாமரனின் மொழியில் புரியும்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:40:23(இந்திய நேரம்)