Primary tabs
-
1.1 தொல்காப்பியம்
நமக்குக் கிடைக்கின்ற பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே முதன்மையானது. இது இலக்கண நூல். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி இலக்கியத்திற்கும் இலக்கணம் வகுத்ததைக் காட்டும் நூல். இந்த இலக்கண நூலின் பொருளதிகாரம் மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை பற்றிய செய்திகளை அறிய உதவுகிறது. இலக்கணத்தில் ஒரு கருத்து நிலைபெற வேண்டுமாயின் அதற்கு முன் இலக்கியங்கள் பல சிறப்போடு விளங்கியிருக்க வேண்டுமல்லவா?
தொல்காப்பியத்தில் ஆங்காங்கே திருமாலைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றைப் பார்க்கலாமா?
சங்ககால மக்கள் சிவனையும் வழிபட்டனர்; திருமாலையும் வழிபட்டனர்; சிவன் மைந்தனான முருகனையும் வழிபட்டனர்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
(தொல்காப்பியம் - பொருளதிகாரம் நூ. 5)(மாயோன் = திருமால், சேயோன் = முருகன்)
இதன் மூலம் திருமால் முல்லை நில மக்களின் திணைக் கடவுளாக இருந்தமையை அறியலாம்.
ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள்கள் பதினான்கில் தெய்வமும் ஒன்று என்று குறிப்பிடும் தொல்காப்பியம், முல்லை நிலத்திற்குரிய தெய்வம் திருமால் எனவும் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் சேயோன் (முருகன்) எனவும் சுட்டுகிறது.