தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202252.htm-நம்மாழ்வார் அருளியவை

  • 5.2 நம்மாழ்வார் அருளியவை

    1.
    திருவிருத்தம் 100 பாசுரங்கள்
    2.
    திருஆசிரியம் 7 பாசுரங்கள்
    3.
    பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள்
    4.
    திருவாய்மொழி 1102 பாசுரங்கள்

    இனி அவர் அருளிய திருவிருத்தம் பற்றிக் காணலாமா?

    5.2.1 திருவிருத்தம்

    இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் விண்ணப்பம் அல்லது வேண்டுதல் ஆகவும், இறுதிப் பாசுரம் பயன் உரைக்கும் பாசுரம் ஆகவும் அமைய, ஏனைய 98 பாசுரங்கள் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை.

    சான்றாக, நலம் பாராட்டல் துறையைக் காண்போம். தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம்பாராட்டல் என்பர். இங்கு, திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார் நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார். சான்றாக ஒரு பாடல்:

    வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
    உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
    மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
    விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

    (3634)
     

    (வம்மின் = வாருங்கள்; ஏனம் = பன்றி, விண்டு = மலர்ந்து, விரை = மணம்)

    ஞானச்சுடர் விளக்கானவன் (3637), வெண்ணெய் உண்ட கள்வனை அல்லால் வேறு எதுவும் நெஞ்சம் பேணவில்லை (3670), யாக்கை முதுமை அடைந்து தடுமாறும் முன் நல்வீடு செய்யும் திருமாலை வணங்குபவன் (3674) இப்படிப் பல சொல்லி நாயகி தாம் விரும்பும் தலைவன் யார் எனக் காட்டுவது போல் அமைந்த பாசுரங்கள் அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்துள்ளன.

    ஞானப் பிரானை அல்லால் இல்லை நான்கண்ட நல்லதுவே
    (3678:4)

    என அகப்பொருள் துறைகள் அரங்கன் மீது கொண்ட பக்தியைப் பரப்பும் துறைகளாகப் படைத்துக் கொண்டுள்ளார் நம்மாழ்வார்.

    5.2.2 திருஆசிரியம்

    ஏழு பாசுரங்களைக் கொண்ட இப்பிரபந்தம் மூன்று உலகம் அளந்தவனின் சேவடியைப் போற்றுகிறது. சிவன், பிரமன், இந்திரன் ஆகிய தெய்வங்களும் திருமாலுக்குள் அடக்கம். அவன் தனிப்பெரும் தெய்வம்.

    ஐம்பெரும் பூதங்கள் அவனுள் அடக்கம். உலகுக்கும் அவன் தெய்வம், எமக்கும் அவனே தெய்வம் எனத் தீவிர வைணவராகத் திருஆசிரியத்தை நிறைவு செய்கின்றார் நம்மாழ்வார்.

    பிரிவையும் கூடலையும் மாற்றி மாற்றித் திருவிருத்தத்தில் காட்டிய நம்மாழ்வார், திருஆசிரியத்தில் திருமால் மட்டும் தனிப்பெரும் தெய்வம் என்றும் அவன் அருளிச் செயல்களைத் தொகுத்துக் காட்டி, அவனை மட்டும் வணங்குவோம் என்றும், அவன் திருவடிகளைப் போற்றும் பேறு பெற்று நல்வீடு பெறுவோம் என்றும் கூறி, உண்மையான செல்வம் (பக்தி) வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறார்.

    5.2.3 பெரிய திருவந்தாதி

    அந்தாதித் தொடையில் அமைந்தது இந்நூல்; 87 பாசுரங்கள் கொண்டது.


    பல்உருவை எல்லாம் படர்வித்த வித்தா!உன்

    தொல் உருவை யார் அறிவார்? சொல்லு

    (3704:3-4)

    (படர்வித்த = உண்டாக்கிய)

    எனக் கேட்டு வியக்கின்றார் ஆழ்வார்.

    இறைவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே உரையாடல் போக்கில் பாடுகின்றார். நெஞ்சம் பெருமாளை மட்டும் சிந்தித்து இருக்க வேண்டும் (3695), பஞ்சபாண்டவர்களைக் காத்தவனைக் காணவேண்டும் (3699), நாவு திருமாலை வாழ்த்த வேண்டும் (3730), இப்படி மனிதப் பிறவியின் பயனைத் திருமாலை வழிபட்டு அடையவேண்டும் எனக் காட்டுகின்றார்.

    உலகைப் படைத்தவன் அவனே, அவனுக்கு எல்லாம் உரியது என்பதையும் (3278),

    பார்உண்டான்! பார்உமிழ்ந்தான் பார்இடந்தான்! பார்அளந்தான்
    பார்இடம் முன்படைத்தான் என்பரால் - பார் இடம்
    ஆவானும் தான்ஆனால், ஆர்இடமே? மற்றொருவர்க்கு
    ஆவான் புகாவால் அவை

    (3728)

    எனக் காட்டுகிறார். அதாவது பெருமானின் செயற்கரிய செயல்களை இப்பாசுரம் கூறுகிறது. பிரளய காலத்தில் இவ்வுலகை விழுங்கித் தம் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின்னர் படைப்புக் காலத்தில் வெளிவிட்டார். அவரே வராக அவதார காலத்தில் பூமியை எடுத்துக் கீழிருந்து மேலே கொண்டு வந்தார். திரிவிக்கிரம அவதாரத்தில் பூமியை அளந்தார். அவ்வுலகை ஆதியில் படைத்தவரும் அவரே என்று கூறுவர். பார் (உலகம்) என்னும் பெயர்ச்சொல் மீண்டும் மீண்டும் வேறு வேறு வினைச்சொற்களோடு வந்து அவதாரங்களை நயம்படக் காட்டுகிறது.

    ‘எல்லாம் அவனே, அவனுள் எல்லாம்’ என்பதையும் அழகுபடச் சுட்டுகிறார்.


    தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு

    இல்லைகாண் மற்றோர் இறை!

    (3746:3-4)

    எனவே நரகம் செல்லாதிருக்கத் துழாய் மாலை அணிந்த மாயனைப் பணிய வேண்டும் என்பது நம்மாழ்வார் முடிவாகும்.

    கடவுள் எங்கு உள்ளான்? எப்படிப்பட்டவன்? என்று மனப் போராட்டத்துக்கு ஆளாகாமல் கண்ணனே கடவுள் எனத் தெளிந்து நன்மை பெறுங்கள் எனத் தம் சமயக் கடவுளைக் காட்டுவார் நம்மாழ்வார்.

    ஐம்புலன்கள் படுத்தும் பாட்டைப் பற்றிப் பேசாத கவிஞர்களும், பக்தர்களும், சித்தர்களும் இல்லை எனலாம். ஆழ்வாரும் குறும்பு செய்யும் ஐவரை நெறிப்படுத்தி, சினம் அழித்துச் செலுத்தினால் திருத்துழாய் மாலையானைச் சேவிக்கப் பழகிக் கொள்ளும் பெருமை உடையது (3737) ஆகுமாம்.

    வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்தி, இருகை கூப்பித் தொழுவாய் மனமே! அவனைத் தொழாமல் உன்னால் இருக்க முடிகிறதா? எப்போதும் பெருமானின் திருவடிகளைப் போற்று. வல்வினை நீங்கும் என்பதோடு பெரிய திருஅந்தாதி நிறைவுறுகிறது.

    நெஞ்சை விளிப்பது போலத் தன் உணர்வையும், பிறரையும் பக்தி நெறிப்படுத்தும் ஆழ்வாரின் அணுகுமுறையைக் காட்டும் இவ்வந்தாதி, உண்மையிலேயே பெரிய அந்தாதிதான்.

    5.2.4 திருவாய்மொழி

    .....................
    ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்

    யாழின் இசை வேதத்து இயல்

    ....................
    ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
    முதல்தாய் சடகோபன்...

    (திருவாய்மொழித் தனியன் 4,5)

    வடமொழி வேதத்தைத் தமிழ்ப்படுத்திய பெருமைக்குரிய நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி என்பது தனியன், திராவிட வேத ஸாகரம் (கடல்) என்பர் நாதமுனிகள்.

    ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனத் திருவாய்மொழியினால் திருநாமம் பெற்றார் நம்மாழ்வார். இத்தன்மைத்தான சிறப்புக்குரிய திருவாய்மொழி பற்றிக் காண்போம்.

    உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
    மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
    துயர்அறு சுடரடி தொழுதுஎழு என் மனனே!

    (2082)

    (மயர்வற = அறியாமை நீங்க, அமரர்கள் = தேவர்கள், துயர் அறு = துயரத்தைத் தீர்த்து)

    என்பது முதல் பாசுரம் ஆகும். முதன்மையாக நின்று ஞானத்தின் முதிர்ச்சியையும் காட்டுகின்றது. ‘இதற்கு மேலே ஏதும் இல்லை என்னும் அளவுக்கு உயர்ந்து நிற்பவன்; மயக்கம் தீர்ந்த அறிவொளி தந்து உயர்த்தினான்; துன்பம் நீங்க அவன் திருவடியைத் தொழுவாயாக என் நெஞ்சமே!’என்பது நம்மாழ்வாரின் வேண்டுகோள்.

    உருவினன், அருவினன், ஒழிவிலன், நலன் உடைய ஒருவன், அந்த இறைவன்.

    அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
    அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்

    அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
    அவரவர் விதிவழி அடைய நின்றனரே

    (2086)

    மக்கள் இறைவனை வழிபாடு செய்யும் முறை, அவர்களுக்கு இறைவன் அருளும் திறன் பற்றிப் பொதுவிதி செய்துள்ளார் ஆழ்வார்.

    • இறைமை

    இறைவன் ஐம்பெரும்பூதங்களாகிப் படர்கின்ற பொருள் முழுவதிலும் நிறைந்தவன். உடலில் தங்கி உள்ள உயிர் போல எங்கும் மறைந்து எங்கும் நிறைந்துள்ளவன். ஒளி விடுகின்ற வேதங்களும் அவனே (2088) எனப் போற்றுகின்றார்.

    • உளன் இலன்

    இறைவன் உண்டு என்றால் அவன் உருவங்கள் உடையவன். இல்லை என்றால் அவன் அருவப்பொருள் ஆகின்றான். உள்ளவன், இல்லாதவன் ஆகிய இரு தன்மையனாய் எங்கும் ஒழிவு இலன் ஆக இருப்பவன் (2090) என்பர்.

    ‘அகலில் அகலும் அணுகில் அணுகும்’ (2157), ‘மயக்கம் அற என் மனத்தே மன்னினான் உயர்வினையே தரும் ஒண்சுடர்க் கற்றை, தேவர்களின் ஆதிக் கொழுந்து (2151) எனப் பாடுபொருளாகவும் நுண்பொருளாகவும் நிற்கும் நாதனைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார்.

    ஆணல்லன்; பெண்ணல்லன்; அல்லா அலியுமல்லன்
    காணலும் ஆகான்; உளன்அல்லன்; இல்லை அல்லன்

    பேணுங்கால் பேணும் உருவாகும்; அல்லனுமாம்

    (2245:1-3)

    என்பன போன்ற பாசுரங்கள் பல உள்ளன.

    • ஞானச்சுடர்

    விடுவே னோஎன் விளக்கைஎன் ஆவியை
    நடுவே வந்துஉய்யக் கொள்கின்ற நாதனை

    தொடுவே செய்துஇள ஆய்ச்சியர் கண்ணினுள்
    விடவே செய்து விழிக்கும் பிரானையே?

    (2152)

    அதாவது என்னுடைய உயிர் போன்றவரும், வாழ்வின் ஒளியாக மேவுபவரும் நடுநாயகமாக விளங்கி என்னுள் மேவி உய்யுமாறு புரியும் தலைவரும் ஆய்ச்சியர்கள் தமது கண்களால் மகிழ்ந்து பருகியும் கைகளால் தொட்டுப் பேரானந்தம் கொண்டும் விளங்க அருள் செய்தவருமான கண்ணபிரானை, அடியேன் விட்டு நீங்கி இருப்பேனா? என்று எளிவந்த பிரானைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட நம்மாழ்வார் நிலையைக் காட்டுவது மேற்குறித்த பாசுரம்.

    • வீடுபேற்றை அடையும் வழி

    எல்லாப் பற்றையும் துறந்தால் பற்று அற்ற நாதனைப் பற்றிக் கொள்ளலாம்.


    வீடுமின் முற்றவும் - வீடுசெய்து உம்உயிர்
    வீடு உடையானிடை - வீடு செய்ம்மினே

    (2093)

    (வீடு = விடுதல், முக்தியுலகம்)


    அற்றது பற்று எனில் - உற்றது வீடுஉயிர்
    செற்றது மன்னுறில் - அற்றுஇறை பற்றே

    (2097)

    என உலக மக்களுக்கு உபதேசம் செய்கிறது திருவாய்மொழி.

    • பிறவிப் பிணிக்கு மருந்து

    தம்மை வழிபடுகின்றவர்களுக்குச் செல்வம் ஆகவும் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும் விளங்கும் ஆயர் கொழுந்தை (கண்ணன்), அமுதினைப் பருகிப்பருகி மாயப் பிறவியிலிருந்து விடுபட்டேன் (2150) எனப் பிறவித் துன்பம் நீங்கக் காரணமானவனைத் தம் ஞானத் தெளிவால் பாசுரமாக்கியுள்ளார் நம்மாழ்வார்.

    • என் ஆவி நலம் கொள்நாதன்

    ஆலிலையில் துயின்றவன் ஆழ்வாரோடு கலந்த நிலையைக் காட்டும் பாசுரம் (2170) மிக அருமையானது. ‘கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்; நான் அவன் கண்களாலே காண்பன் (2178) எனப் பிரித்தறிய இயலாத உறவைக் கூறும் மனநிலை எத்துணை அற்புதமானது!

    ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி (2209)யின் உறவால் பிறவிப்பேறு பெற்ற ஆழ்வார், ‘நீ எனது ஆவியுள் கலந்த உதவிக்குக் கைம்மாறாக எனது ஆவியை உனக்கு உரிமையாக்கி விட்டேன், உன்னிடம் பெற்றதை உன்னிடம் கொடுத்து விட்டேன், உரிமை ஆக்கியதை உய்தி பெறச் செய்வாய்’ எனக் கேட்கும் பக்திப் பாசுரம்.

    எனதுஆவியுள் கலந்தபெரு நல்உதவிக் கைம்மாறு
    எனதுஆவி தந்தொழிந்தேன்;இனிமீள்வது என்பதுஉண்டே
    எனதுஆவி ஆவியும்நீ, பொழில்ஏழும் உண்ட எந்தாய்!
    எனதுஆவி யார்?யான்ஆர்? தந்த நீகொண் டாக்கினையே

    (2217)

    (பொழில் ஏழும் = உலகம் ஏழும், கொண்டு = ஏற்றுக்கொண்டு, ஆக்கினையே = உன்னுடையவையாக மாற்றினாயே)

    என்பது நம்மாழ்வாரின் சொல்லாடலுக்கும் (2217) சான்றாகும்.

    • அக்காரக் கனி

    கைம்மா (இந்திரன் யானை) துன்பம் கடிந்த பிரானே! அம்மா அடியேன் வேண்டுவது இஃதே (2202)

    எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
    எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்
    மிக்கார் வேத விமலர் விழுங்கும்என்
    அக்காரக் கனியே! உன்னை யானே

    (2289)

    எனத் திருமாலை அக்காரக்கனி (இனிய் வெல்லப்பாகில் தோய்த்த கனி) யாகக் காணும் ஆழ்வார்


    ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
    ஒழுகிலா அடிமை செய்ய வேண்டும்

    (2326: 1-2)

    (ஒழிவில் = இடைவெளியின்றி)

    என வேண்டுகோள் விடுக்கின்றார். ‘மன்னி’ என்னும் சொல் நிலைபெற்று, நீங்காது, கலந்து, என்னும் பொருளைத் தரும். ஆழ்வாரின் பக்தி கனிந்த நிலையையும் புலப்படுத்தும்.

    • அடியார்க்கு அடியார்

    பிறப்பினால் வரும் வேறுபாடுகள் எங்களுக்கு இல்லை; சக்கரக்கையானுக்கு ஆட்பட்டவர்கள் எமக்குக் கடவுள்.

    வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
         மணிவண்ணற்கு ஆள்என்று உள்

    கலந்தார், அடியார் தம் அடியார்
         எம் அடிகளே

    (2378:3-4)

    (அடிகள் = கடவுள்)

    இக்கடவுள் பாசுரம் ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டுகிறது. அக்காலத்தில் நிலவிய சாதி முறை அல்லது சமூக அமைப்பு மனிதனை மனிதனில் இருந்து பிரித்துப் பார்க்கும் கொடுமையைச் செய்தது. விளைவு கடவுள் கூட, தனிப்பட்ட சமூகத்தின் சொத்துபோலப் பாவிக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழிபாடு மறுக்கப்பட்டது. அதன் விளைவு இத்தன்மைத்தான பாசுரங்களும் தோன்ற வித்திட்டன.

    • இன்கவி யாருக்கு?

    ‘சொன்னால் விரோதம் இது, இருந்தாலும் சொல்லுவேன், என் நாவில் இன்கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் (2392), இம்மானிடத்தைக் கவி பாடி என்ன பயன்? (2393), வானவர் ஈசனை வான்கவி கொண்டு பாடுங்கள்’ (2394), மனிதரைப் பாடிப் பெறும் பொருள் எதற்கு (2395) என்பன போன்ற பாசுரங்கள் பாடுபொருளில் மாற்றம் ஏற்பட்ட சிந்தனையைக் காட்டும்,

    நும்இன் கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வம் ஏத்தினால்
    செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே

    (2397:3-4)

    (இட்டா = விருப்பமான)

    என எல்லோரும் வணங்கும் கடவுளாகத் திருமாலைக் காணும் நம்மாழ்வார்

    வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன

    (2400:1)

    எனத் தம் நோக்கத்தைப் பதிவு செய்கின்றார்.

    நம்மாழ்வார் வாழ்ந்த காலம் (9-ஆம் நூற்றாண்டு) தனி மனிதன்/ வள்ளல்/ அரசர் போன்றோரைக் கவிபாடிக் கவிஞர்கள் பொருள் பெற்ற காலம். அதே நேரத்தில் முதல் ஆழ்வார்கள் தொடங்கி வைத்த பக்தி ஆல விதை போலத் தழைத்துக் கிளைகள் பெருகத் தொடங்கிய காலம்; அதாவது மனிதரையும் தெய்வத்தையும் கவிபாடிப் பொருளும் அருளும் பெற்ற மனிதம் பாடிய கவிஞர்களும் தெய்வம் போற்றிய அருளாளர்களும் ஊடாடிய காலம். எனவே ஆழ்வார் இருவர் நிலையையும் ஒப்புநோக்கி, மனிதம் பாடிய கவிஞர்களைத் தம் பக்கம் இழுக்க, பக்தியைப் பரப்பும் முயற்சிக்கு வளம் சேர்ப்பவர்களை அழைக்கும் அழைப்பிதழாகத் தம் பாசுரங்களைப் படைத்துக் கொண்டார்போலும்.

    தமிழ் மொழி என்றாலே கவிதைப் பதிவு தான் பெரும்பான்மை என்பதால் கவிஞர்களை விளித்தார் போலும்.

    • புறச்சமயத்தவர் போற்றுமின்

    சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறருக்கும் நாயகன் அவனே. சமணரும் சாக்கியரும் வலிந்து வாதம் செய்பவர்களும், திருக்குருகூர் நாதனைப் போற்றுங்கள் (2516, 2517) என்பர்.

    நம்மாழ்வாரின் திருமால் பக்தியும் பிற சமயத்தாரை வேண்டும் தன்மையும் அதேநேரம் திருமால் மீது அவர் செலுத்திய அளப்பரிய காதலும் புலப்படுகிறதல்லவா?

    5.2.5 அகப்பொருள் துறைகள்

    கடவுள் காதலை வெளிப்படுத்தும் வகையிலே பல பாடல்களை நம்மாழ்வார் அருளியிருக்கிறார். பராங்குசன் என்பது அவருடைய பெயர்களில் ஒன்று. எனவே அவரைப் பராங்குச நாயகி என்று குறிப்பிடுவதுண்டு. அகத்திணைத் துறைகள் பலவற்றை இவர் பாசுரங்களில் காண்கிறோம். அவற்றுள் சில:

    • நோக்குபவை எல்லாம் திருமாலே

    தலைவியின் மனநிலை கண்ட தாய் கூற்றில் அமைந்த பாசுரம்:

    மண்ணை இருந்து துழாவி
        
    ‘வாமனன் மண் இது’ என்னும்

    விண்ணைத் தொழு(து) அவன் மேவு   
         ‘வைகுந்தம்’ என்று கைகாட்டும்
    கண்ணையுள் நீர்மல்க நின்று
         ‘கடல்வண்ணன்’ என்னும்; என்னே!என்
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
         என்செய்கேன் பெய்வளை யீரே?

    (2447)

    (கண்ணையுள் = கண்ணில், பெருமயல் = பெருமயக்கம், பெய்வளையீர் = வளையணிந்த பெண்கள்)

    செந்தீயைத் தழுவி ‘அச்சுதன்’ என்றும், காற்றைத் (துழாய் மணம்) தழுவி ‘கோவிந்தன்’ என்றும், கன்றைத் தழுவி ‘கோவிந்தன் மேய்ந்தன’ என்றும், நாகத்தின் (பாம்பு) பின்போய் ‘அவன் கிடக்கை’ என்றும், ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் ‘அவன் உண்ட வெண்ணெய்’ என்றும் உருகி நிற்கும் பாங்கு அவர்தம் பக்தியைக் காட்டுகிறது.

    • ஞானச் சிறுகுழவி

    என்நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே? (2616) என்றும், கோலப்பிரான் செய்கையை நினைந்து என் மனம் குழைகிறது (2668) எனக்கு இனி யார் நிகர்? (2673) என்றும் பெருமையைப் பேசுகிறாள் தலைவி.

    உண்ணுஞ் சோறு பருகுநீர்
         தின்னும் வெற்றிலையும் எல்லாம்

    (2700:1)

    கண்ணன் எனச் சொல்லித் திருக்கோளுர் புக நினைக்கின்றாள். கண்ணனே எல்லாம் ஆகிப் போன தலைவி ஞானச் சிறு குழவிக்காக ஏங்குகின்றாள்; தூது அனுப்புகின்றாள் (2711-2721).

    • கட்டுவிச்சி

    அன்னைமீர் கட்டுவிச்சி சொற்கேட்டுக் கள்ளும் இறைச்சியும் தூவாதீர்கள். துழாய்முடிப்பிரான் கழல் வாழ்த்துங்கள் (2471) பெருந்தேவன் பேர் சொன்னால் இவளைப் பெறலாம். அதுவே இவள் உற்ற நோய்க்கு மருந்து எனத் தோழி அன்னையரிடம் தலைவியின் மெலிவுக்குக் காரணமானவன், தலைவி விரும்பும் தலைவன் யார் எனச் சொல்லி, தலைவியின் தாய்க்குத் தலைவியின் நோய் அறியச் செய்து, பிறவழிபாடுகளை விலக்குகின்றாள்.

    • மடலூரத் துணிதல்

    தலைவியைப் பெறத் தலைவன் கடைசியாக மேற்கொள்ளும் முயற்சி மடலூர்தல் ஆகும். அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட நாயகியாகிய நம்மாழ்வார்.

    ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து
    ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்

    பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த

    காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே

    (2549)

    (செய் = வயல், கவ்வை = அவதூறு மொழி, கடியன் = கொடுமை நிறைந்தவன் )

    மணிவண்ணன் வலையுள் பட்டேன். எனவே மடல் ஊர்ந்தாவது ஆழியங்கைப் பிரானின் தன்மைமிக்க துழாய் மலர் கொண்டு சூடுவோம்’ (2555) எனப் பக்திக்காதல் மடல் ஊர்தலால் கிடைக்கும் பரிசைக் கூறுகின்றது.

    தாய் ஆகவும், தலைவி ஆகவும் தம்மைப் பாவித்த ஆழ்வார், மகள் நிலை உரைப்பதும், தம் நிலை உரைப்பதும் நம்மாழ்வாரின் பக்திப் புலப்பாட்டிற்கும், நடைச் சிறப்பிற்கும், மொழி ஆளுமைக்கும், பக்தியோடு கூடிய மொழிப் பற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

    • வழிபாடு

    வானவர் தலைவன் இந்திரனும், தேவர்களும் மலர்களைத் தூவிவழிபட்ட இடம் திருவேங்கடம் (2327), துழாய் மலர் விரும்பும் தலைவி (2731), தொண்டர்கள் பூக்கொண்டு ஏத்தி ஆடிப்பாடுதல் (2487), பாதத்தில் மலர் தூவுதல் (3121)

    நாடீர்நாள் தோறும் - வாடா மலர் கொண்டு
    பாடீர் அவன் நாமம் - வீடே பெறலாமே

    (3122)

    என்பதால் திருமால் வழிபாட்டில் மலரும், துழாயும் நிறைந்திருந்ததை அறியலாம்.

    • நிலையாமை

    இளமை கெடுவதன் முன்பு திருமாலிருஞ்சோலை அழகனை நினையுங்கள் (2293). மூப்பும் பிறப்பும் இறப்பும் பிணியும் விழும்படி செய்பவன் திருவேங்கடத்தான் (2334), வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று இளைப்பதன் முன்னம் (2335) நினையுங்கள். மழைநீரில் தோன்றும் குமிழிபோல் வாழ்வு நிலையற்றது, உறுதிப்பொருள் வேண்டில் கடல்பள்ளி அண்ணலின் அடியவர் ஆகுங்கள் (2419).


    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை
         மொக்குளின் மாய்ந்து மாய்ந்து

    ஆழ்ந்தார் என்று அல்லால்

         அன்று முதல் இன்று அறுதியா
    வாழ்ந்தார்கள்
    வாழ்ந்தே நிற்ர்
         என்பதில்லை

    (மொக்குளி = நீர்க்குமிழி)

    என நிலையாமையைக் காட்டி, நிலைத்த பொருளாய்ப் பற்ற வேண்டும். அதுபோலவே செல்வமும் உறவும் நிலையற்றது (2964 - 2973). எனவே, எம்பிரானே சிறந்த துணை என்பர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:30:03(இந்திய நேரம்)