தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P202253.htm-மதுரகவி ஆழ்வார்

  • 5.3 மதுரகவி ஆழ்வார்

    திருக்கோளுரில் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் மதுரகவி.

    இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தம் ‘கண்ணிநுண்  சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும் 11 பாசுரங்கள்,  இளமையிலேயே இனிய கவிகளைப் பாட வல்லவராக விளங்கியதால் மதுரகவி எனப் பெயர் பெற்றார்.

    நம்மாழ்வார் தவிர வேறு தெய்வமில்லை.  திருக்குருகூரில் எழுந்தருளிய நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டு வீடுபேறு பெற்றவர். பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் மட்டும் திருமாலைப் பாடாமல், திருமாலின் அவதாரங்களைப் பாடாமல் திருமாலடியார் ஆன நம்மாழ்வாரை மட்டும் பாடி ஞானம் பெற்றவர். மேலும்,

    வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
    மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு,எங்கள்
    வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
    ஆள்வார் அவரே யரண்

    (தனியன்)

    எனப் பாடிய நாதமுனிகள் கூற்றும் இதனைத் தெளிவுபடுத்தும்.

    கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
    பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
    நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
    அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே

    (937)

    (தாம்பு = கயிறு, பண்ணிய = செய்த, என் அப்பன் இல் = நம்மாழ்வார் வீடு, நண்ணி = சேர்ந்து, அண்ணிக்கும் = தித்திக்கும்)

    சிறிய கயிற்றினால் தன்னை யசோதை கட்டும்படி செய்த மாயனே தென்குருகூர் நம்பி ஆகிய நம்மாழ்வார் எனச் சொன்ன அளவில் தேன் என இனிக்கும்; வாயில் அமுதம் ஊறும் என்கின்றார்.

    எனவே நம்மாழ்வாரைத் தவிர தெய்வம் வேறில்லை; அவர் அருளிச் செயல்களைப் பாடித் திரிவேன்.

    நாவி னால்நவிற்றி இன்ப மெய்தினேன்
    மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
    தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
    பாவி னின்னிசை பாடித் திரிவனே

    (938)

    (குருகூர் நம்பி = நம்மாழ்வார், தேவு = கடவுள்)

    எனப் பாடும் மதுரகவியின் பாசுரங்கள் வித்தியாசமானவை. நம்பியைக் குருவாகக் கொண்டதால் நம்மாழ்வார் திருவடியே சரணம் என்கின்றார்.

    • நம்மாழ்வாரைப் போற்றுதல்

    நம்மாழ்வாரைத் ‘தமிழ்ச் சடகோபன்’ என்று பாடும் மதுரகவி, அவர் அருள் பரப்புவது தம் வேலை என்பர்.

    வேதத்தின் பொருளை எளிய தமிழில் பாடியவர் என்பதை உணர்ந்த சீடர்,

    அருள்கொண் டாடும் அடியவ ரின்புற
    அருளி னான்அவ் வருமறை யின்பொருள்
    அருள்கொண் டாயிரம் இன்தமிழ் பாடினான்
    அருள்கண் டீர்இவ் வுலகினில் மிக்கதே

    (944)

    எனப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றார். படித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய அல்லது சிறுபான்மையோரின் கைக்குள்ளிருந்த வேதத்தைக் கற்றோரும் கல்லாதோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்திய பெருமைக்குரியவர் நம்மாழ்வார்.



    தன் மதிப்பீடு: வினாக்கள் - I

    1.
    நம்மாழ்வாரின் அருளிச் செயல்களை எழுதுக.
    2.
    வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படுபவர் யார்?
    3.
    நம்மாழ்வாரின் சீடர் யார்? அவர் அருளிய பாசுரங்கள் யாவை?
    4.
    ‘அக்காரக்கனி’ என்பது யாரைக் குறிக்கும்?
    5.

    திவ்வியப் பிரபந்தத்தில் அதிகமாகப் பாசுரங்கள் அருளியவர் யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 12-06-2018 18:45:25(இந்திய நேரம்)