தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடக இலக்கியம்

  • 1.2 நாடக இலக்கியம்

    நாடு + அகம் = நாடகம்; உள்ளம் விரும்புமாறு ஆடலும் பாடலும் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். ‘இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் நாட்டப்படுவது நாடகம்’ என்பார் தொல்காப்பிய உரையாசிரியர். கூத்தரும் விறலியரும் நாடகக் கலைஞர்கள் ஆவர்.

    1.2.1 காலந்தோறும் நாடகம்

    தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் சொல்லாட்சி காணப் பெறுகின்றது. பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது.

    கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற எண்ணமுடைய சமணர்களால் களப்பிரர் காலத்தில் நாடகம் தன் செல்வாக்கை இழந்தது. இராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜேஸ்வர விஜயம் என்னும் நாடகம் இயற்றப்பட்டு நடிக்கப் பெற்றது. பிறகு கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் நாடகங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலியன எளிய நடையில் அமைந்து மக்களை மிகவும் கவர்ந்தன.

    கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றன.

    கி.பி.19ஆம் நூற்றாண்டு தொடங்கி, நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆங்கில மொழியின் இரகசிய வழி (The secret way) என்னும் நூலைத் தழுவி, மனோன்மணீயம் என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக் கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்கள் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு நாடகமே முன்னோடி என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இன்றும், தொலைக்காட்சிகளில் நாடகத்தின் செல்வாக்குச் சிறந்து விளங்கி வருவது கண்கூடு.

    காசி விசுவநாத முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    1.2.2 நாடக அமைப்பு

    நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், காலம், சூழல் ஆகியனவும் குறிக்கப் பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக் குறிப்புகள் (மெய்ப்பாடு) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு.

    நாடகம், பொதுவாக, தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்று ஐந்து கூறுகளையுடையதாக இருக்கும். இக்கூறுகளாகிய பெரும்பிரிவுகள் அங்கங்கள் என்னும் பெயரில் விளங்கும். இவற்றில் களன் அல்லது காட்சி என்னும் சிறு பிரிவுகள் அமையும்.

    இன்பியலாகவோ, துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு பெறும். துன்பியல் முடிவுகளே பெரும்பாலும் வரவேற்புப் பெறும். நாடகம் இத்தனை பக்கங்கள் அல்லது இவ்வளவு கால நேரம் கொண்டதாக விளங்க வேண்டும் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. படிக்கத்தக்கன, நடிக்கத்தக்கன, படிக்கவும் நடிக்கவும் தக்கன எனப் பல வகைகளில் நாடகம் புனையப் பெறும். நாடகம் நடிக்கப் பெறுங்காலத்து நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு முதலியன வசனத்திற்கு மேலும் மெருகூட்டிக் காண்போரை விரைந்து சென்றடைகின்றன எனலாம். மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிப்பறை நாடகம் எனப் பலவாகக் கலைஞரின் நிலைக்கேற்ப நாடகங்கள் புத்தம் புதியனவாகப் படைத்தளிக்கப் பெற்று வருகின்றன.

    1.2.3 நாடக வகைகள்

    பொருண்மை அடிப்படையில் நாடகங்களை வகைப்படுத்திக் காணுதல் தகும்.

    • சமூக நாடகங்கள்

    சமூக நாடகங்கள் சமூகச் சூழல்களின் பின்னணியில் எழுதப் பெற்றவை; அன்றாட வாழ்வியல், சராசரி மக்களின் வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவன; சீர்த்திருத்த நோக்கம் கொண்டவை. வீடு, அலுவலகம், சீர்வரிசை எனப் பல நிலைகளிலும் காணும் அவலங்களை அடையாளம் காட்டுவன; சிக்கல்களை எடுத்துரைத்துத் தீர்வுகளையும் புலப்படுத்துவன இவை. 1867-ஆம் ஆண்டில் காசிவிசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் இவ்வகையில் முதல் நாடகமாகும்.

    • புராண இதிகாச நாடகங்கள்

    சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், மார்க்கண்டேயன் முதலானோரின் புராண வரலாறுகளையும், இராமாயண, மகாபாரதங்களாகிய இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவன இவ்வகையின. லவகுசா இராமாயண அடிப்படையிலும், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் என்பன மகாபாரத அடிப்படையிலும் இயற்றப் பட்டனவாகும். இவற்றில் வசனங்கள் பழங்கால நடையினவாக அமைதல் வேண்டும். ஒப்பனைகளும் கற்பனை நிலையில் பல்வேறு அணிகலன்களும் கிரீடங்களும் (மணிமுடி) கொண்டு அமைக்கப்படுதல் மரபு. பாடல்கள் இவற்றில் மிகுதியாகக் காணப்படும். இவை மேடை நாடகங்களில் செல்வாக்குப் பெற்றவை. இயற்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல தெய்வீக நிலையில் இவற்றில் இடம்பெறும். இதற்கேற்ப மேடையமைப்பு ஏற்பாடுகளும் அமையும்.

    சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம், சதி அனுசூயா, பவளக்கொடி, அபிமன்யு, பிரகலாதா முதலான நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.

    • வரலாற்று நாடகங்கள்

    நடந்த நிகழ்ச்சிகளை உண்மைக்கு மாறுபாடின்றி எடுத்துரைப்பது வரலாற்று நாடகங்களின் இயல்பாகும். சுவை மிகுதிப்பாட்டிற்காகச் சில நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்களும் இவற்றில் படைத்துக் கொள்ளப் பெறும். ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்திப் பிற பகுதிகள் புனைந்து எழுதப் பெறுதல் வழக்கம்.

    அரு.ராமநாதனின் இராஜராஜ சோழன், ஆறு.அழகப்பனின் திருமலை நாயக்கர், கண்ணதாசனின் சிவகங்கைச் சீமை போன்றன இவ்வகையில் அமைந்த நாடகங்களில் குறிப்பிடத் தக்கவையாகும்.

    • இலக்கிய நாடகங்கள்

    சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் காணப்பெறும் சிற்சில கதாபாத்திரங்களையும், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையும் மையப் பொருளாகக் கொண்டு புனையப்பெறுவன இவ்வகை நாடகங்கள் ஆகும். இவற்றில் தலைமைப் பாத்திரங்கள் செந்தமிழ் நடையிலும், சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத்தமிழ் நடையிலும் வசனம் பேசுதலாக அமைப்பது இயல்பு. இவற்றைக் கவிதையில் அமைப்பதும் உண்டு. உரைநடையில் அமைப்பதும் உண்டு. பாரதிதாசனின் பிசிராந்தையார், சேரதாண்டவம், வ.சுப.மாணிக்கனாரின் மனைவியின் உரிமை (வள்ளல் பேகன் வரலாறு), புலவர் பழநியின் அனிச்ச அடி (பெண் கொலை புரிந்த நன்னன் கதை), மறைமலையடிகளின் அம்பிகாபதி அமராவதி, அ.ச.ஞானசம்பந்தனாரின் தெள்ளாறெறிந்த நந்தி போன்றன இவ்வகை நாடகங்களுக்குத் தக்க சான்றுகளாகும்.

    • வாழ்க்கை வரலாற்று நாடகங்கள்

    ஒருவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்த நிலையில், அவை விடுபடாத வண்ணம் புனைந்துரை அதிகமின்றி உள்ள வண்ணம், எழுதுவது இத்தகு நாடகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் யாவும் இதில் இடம்பெறும்.

    மு.வரதராசனாரின் பச்சையப்பர் நாடகம் இதற்குத் தக்க எடுத்துக் காட்டாகும். அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பதும் பல நிகழ்ச்சித் தொகுப்பாக அமைந்து இவ்வகை நாடகமாக அமைகின்றது.

    • அரசியல் நாடகங்கள்

    அரசியல் உணர்வும், சிந்தனையும் அமைந்த நாடகங்கள் இவை. விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுணர்ச்சியை ஊட்டின. எஸ்.டி.சுந்தரத்தின் வீர சுதந்திரம் என்பது திருப்பூர் குமரன், சுப்பிரமணிய பாரதி, அரவிந்தர் போன்றோர் தம் வீர வரலாறு கொண்டு தொகுக்கப் பெற்றதாகும்.

    • நகைச்சுவை நாடகங்கள்

    மக்களைச் சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, உருவம், மொழிநடை, அறியாமை, அப்பாவித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப் பெறுவது இது. இதன் தலைப்பே இதனியல்பைப் புலப்படுத்துவதாக அமைவதுண்டு. கேலி, கிண்டல், தரக்குறைவு முதலியன இவற்றில் மிகுந்திருத்தல் இயல்பு.

    சங்கீதப் பைத்தியம், வைகுண்ட வைத்தியர், சோம்பேறி, சபாபதி, சகுனம் பார்த்தது போன்றன இவ்வகை நாடகங்களாகும். பம்மல் சம்பந்த முதலியார் இவ்வகை நாடகங்களில் ஆற்றல் படைத்தவராவார்.

    • துப்பறியும் நாடகங்கள்

    இவ்வகை நாடகங்கள் திருட்டு, கொலை, சதி போன்றவற்றில் ஈடுபட்டவர்களைத் தக்க தடயங்களைக் கொண்டு கண்டுபிடிப்பதாக அமைந்திருக்கும். இது மேனாட்டு நாடகங்களைத் தழுவி எழுந்த வகைப்பாடு.

    இன்ஸ்பெக்டர், சதுரங்கம், கொலை போன்றவை இத்தகு நாடகங்களாகும். பரமகுரு எழுதிய வினை விதைத்தவர் என்னும் நாடகம் இவ்வகைக்குத் தக்க சான்றாகும்.

    • மொழிபெயர்ப்பு நாடகங்கள்

    சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிகளில் படைக்கப்பட்ட சிறந்த நாடக இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் இவ்வகையில் அடங்கும்.

    மறைமலையடிகளின் சாகுந்தல நாடகம், வடமொழியில் அமைந்த காளிதாசனின் சாகுந்தலத்தின் மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் அமைந்த சேக்ஸ்பியரின் நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், ஆங்கிலத்தில் லிட்டன் என்பார் எழுதிய ரகசிய வழி (The Secret Way) என்னும் நாடகத்தின் தழுவலாகும்.

    இவ்வாறு நாடகங்கள் பல வகைப்படும். வார இதழ், மாத இதழ்களில் தொடர்ந்து தொடர் நாடகங்களாக வெளிவரும் நாடகங்களும் இக்காலத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கனவாகும். மேடை நாடகங்களுக்கென நாடகக் குழுக்கள், நாடக சபாக்கள் பல இன்றும் நின்று நிலவுகின்றன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1)
    இன்றைக்கு மரபுக் கவிதையில் எவ்வகைப் பாவகைகளும் பாவினங்களும் செல்வாக்குப் பெற்றுள்ளன?
    2)
    எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
    3)
    புதுக்கவிதை - விளக்கம் தருக.
    4)
    புதுக்கவிதையில் முரண்தொடை அமைத்துப் பாடியவர் யார்?
    5)
    இசைப் பாடல் வகைகள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 29-09-2017 13:09:19(இந்திய நேரம்)