Primary tabs
- 4.0 பாட முன்னுரை
ஒரு நாவலை எவ்வாறு எழுதுவது என்பதைக் கற்றுக் கொள்வதே இப்பாடத்தின் நோக்கமாகும். நாவல் எப்படி எழுதுவது என்பதைப் பற்றிய கருத்துகள் அல்லது செய்திகளை அறிவது ஒரு நல்ல படைப்பாளனுக்கு மிகவும் தேவையான ஒன்று. கையிலே பேனாவுடன், தாளை எடுத்து வைத்துக் கொண்டு நாவல் எழுத முடியாது. நாவலாசிரியராக விரும்புபவர் தொடக்கத்தில் சிறுகதையில் முயற்சி செய்து பார்த்தல் நல்லது என்பர். நல்ல சிறுகதையாசிரியர்களே பிறகு நல்ல நாவலாசிரியர்களாக விளங்கியுள்ளனர்.
மனத்திற்குள் பல நாட்கள் சிந்தித்து ஒரு கதையை மனத்திலேயே நாவலாக வடிவம் கொடுத்துக் கதையைப் பின்ன வேண்டும். சில நேரங்களில் கதையைத் தொடங்கி, கதையை வளர்த்துக் கொண்டே சென்று, நாவலின் வளர்ச்சி நிலையில் முடிவைத் தீர்மானிக்கலாம்.
நாவல் எழுதும்போது நாவலாசிரியரே ஒரு பார்வையாளராக நின்று, விளையாட்டு வருணனையைத் தொலைக்காட்சியிலேயோ, வானொலியிலேயோ சொல்வதைப் போலக் கதையைச் சொல்லிச் செல்லலாம்.
இரண்டாவது வகை, நாவலாசிரியர் தம்மையே ஒரு பாத்திரமாக்கிக் கதையை நடத்துவதாக அமைக்கலாம். மூன்றாவது வகை, கதைமாந்தரே கதை கூறுவது போல அமைக்கலாம். நான்காவது வகை, கடித முறையிலே நாவலைப் படைக்கலாம். இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.