தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் நாவல்களில் பெண்ணியம்

  • 6.3 தமிழ் நாவல்களில் பெண்ணியம்

    பெண்ணியம் என்ற சொல் Feminism என்ற சொல்லின் தமிழாக்கம் ஆகும். இந்தச் சொல் Femina என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் அடியாகப் பிறந்தது. பெண்ணின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் இது குறிக்கிறது.

    1)

    பெண்ணின் தாழ்வுற்ற நிலையை மாற்ற முயலும் அனைத்துப் போராட்ட முறைகளையும் உள்ளடக்கி, மனித சமூகத்தில் பெண்ணுக்கு மனித மதிப்பு கிடைக்கப் பாடுபடுவது.

    2)

    பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ள நேரும் துயரத்தைக் களையப் பாடுபடுவது.

    3)

    வாழ்வின் எல்லாத் தளங்களிலும் ஆண், பெண் இருபாலரும் சமமானவர்களே என்ற சமத்துவக் கருத்தை உருவாக்கப் போராடுவது.

    பெண்ணியம் குறித்த விழிப்புணர்வு தமிழ் நாவல்களின் தொடக்க காலம் தொட்டே ஓரளவு இருந்து வந்திருக்கிறது.

    தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் பிரதாப முதலியாரின் மனைவியாக வரும் ஞானாம்பாள், கல்வி கற்றவளாகவும், போராடும் குணம் உள்ளவளாகவும் காணப்படுகிறாள். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைச் சமூகத்தில் இருந்து விடுபடும் முதல் பெண்ணாக இவள் காட்டப்படுகிறாள்.

  • இடைக்காலப் பெண்ணிய நாவல்கள்
  • இடைக்காலத்தில் ஆங்கிலப் பேராசிரியரும் தமிழ்த் தொண்டாற்றியவருமான எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்று பெண்ணியச் சிந்தனைகளோடு எழுதப்பட்டது ஆகும். அவருடைய மருத்துவன் மகள், தப்பில் ஆகிய இரண்டு நாவல்களும் இரு வேறுபட்ட பிரச்சனைகளை ஆராய்கின்றன.

    தமிழ்ச் சமுதாயத்தில் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மருத்துவன் மகள் சித்திரிக்கிறது. தமிழில் எழுதப்பட்ட முதல் பெண்ணிய நாவலாக மருத்துவன் மகளைக் கொள்ளலாம்.

    எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய ஒரு பெண் பேராடுகிறாள், நித்திய கன்னி ஆகிய நாவல்களைப் பெண்ணிய நோக்கில் எழுதியுள்ளார். நித்திய கன்னி நாவல் மகாபாரதத்தில் வரும் கிளைக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

    வியாசர் படைத்த மாதவி, யயாதியின் மகள். ஒரு குழந்தை பிறந்தாலும் மீண்டும் கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் வரம் பெற்றிருந்தாள். அவ்வரத்தின் பயனாக மூன்று அரசர்களையும், ஒரு முனிவரையும் மணந்து நான்கு குழந்தைகளையும் பெற்று, பெற்ற இடத்திலேயே அக்குழந்தைகளை விட்டுவிட்டு மீண்டும் கன்னியாகித் தந்தையிடம் திரும்புகிறாள். தந்தை அக்கன்னிப் பெண்ணுக்குச் சுயம்வரம் வைக்க விரும்புகிறார். அவள், அச்சுயம்வரத்தை மறுத்துவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பி விட்டாள்.

    இக்கதையில் பல மாறுதல்களை ஏற்படுத்தி எம்.வி. வெங்கட்ராம் நித்தியகன்னி எனும் நாவலை உருவாக்கி உள்ளார். ஒரு பெண்ணுக்குத் தருமத்தின் பெயரால் இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை இது. காதலனாகிய காலவன், தந்தையாகிய யயாதி, கணவர்களாகிய அரசர்கள், முனிவர் விசுவாமித்திரர் எல்லாருமே அவளை ஒரு பெண் என்று கருதாமல், போகம் துய்க்கப் பயன்படும் ஒரு பொருளாகவே கருதுகின்றனர். அவள் உள்ளம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதனால் பெண்ணுக்கு இழைக்கப்படும் இச்சமூக அநீதியை எதிர்த்து நிற்க இயலாமல் காட்டை நோக்கி ஓடி விடுகிறாள்.

  • இன்றைய பெண்ணிய நாவல்கள்
  • பெண்ணுக்கு ஏற்படும் அநீதிகளைக் குறித்து எத்தனையோ நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகிய நாவல்களின் கதைத் தலைவி கங்கா, பெண்ணுக்கு ஏற்படும் அனைத்துச் சிக்கல்களையும் அடைந்து இறுதியில் கங்கையில் மூழ்கி மறைகிறாள்.

    தலித் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளைக் குறித்து அண்மையில் பாமா எழுதிய ‘கருக்கு’ என்ற நாவல் ஒரு தலித் பெண்ணின் வாழ்வியல் பேராட்டத்தைக் காட்டுகிறது.

    கு.சின்னப்ப பாரதி எழுதிய சங்கம் என்ற நாவல் மலைவாழ் பெண்களைச் சமூகம் எப்படி நடத்தியது என்பதைச் சுட்டுகிறது.

    கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பி அளிக்க முடியாத வெள்ளையன், தன் மனைவி கருமாயியைக் கடன்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய கொடுமையைச் சங்கம் எனும் நாவல் காட்டுகிறது.

    ‘சுக்ரன் வீட்டினுள் நுழைந்தான். காடடர்ந்த தனிப்பாதையில் தனிமையில் இருக்கும் ஒருத்திக்குத் திடீர் எனப் பய அதிர்ச்சியைப் போல் கருமாயி அதிர்ச்சிக்கு உள்ளானாள். குழந்தையை மார்புறத் தழுவியபடி ‘அண்ணா என்னெ உட்டுடுங்கண்ணா! பச்சப்புள்ளத்தாச்சி யண்ணா’ என்று ஓவென்று கதறினாள்.

    அந்த மனித மிருகம் அவளின் அவலக் குரலைச் செவி மடுத்ததாகவே தெரியவில்லை. அவள் கொண்டையைப் பிடித்து இழுத்தவாறே வெளியில் கொண்டு வந்து நிறுத்தித் தன் பின்னால் நடக்குமாறு உத்தரவிட்டான்.’

  • பெண்ணிய நாவல்கள் கூறும் செய்திகள்
  • இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகளை நாவலாசிரியர்கள் எடுத்துரைப்பதை இன்றைய நாவல்களில் பெரிதும் காணமுடிகிறது.

    தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் பெண்கள் இருந்ததையும் பெண்ணிய நாவல்களில் காணலாம்.



    1.

    சமூக நாவல்கள் - விளக்குக.

    2.

    சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நாவல்கள் பற்றி எழுதுக.

    3.
    பெண்ணியம் - விளக்குக.
    4.
    இடைக்காலப் பெண்ணிய நாவல்கள் பற்றி விளக்குக.
புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 17:10:17(இந்திய நேரம்)