Primary tabs
-
6.4 படைப்பாளிகளும் உரைநடையும்
இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் முற்பகுதிக் காலத்தில் கல்வியாளர்கள் உரைநடையே மேலோங்கி இருந்தது. ஆனால் பிற்பகுதிக் காலத்தில் கதை, கவிதை படைக்கும் படைப்பாளிகளின் ஆயுதமாக உரைநடை விளங்கியது. அறிவுக்கும் மட்டுமல்ல, மனத்திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் உரைநடை பயன்பட ஆரம்பித்தது. அவ்வாறான படைப்பாளிகளின் உரைநடைத் தன்மைகளை இனிக் காணலாம்.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப் பித்தன், உரைநடையிலும் சாதனை புரிந்துள்ளார். சாதாரணச் சொற்களுக்குத் தனி அழகும் புதுமையும் கம்பீரமும் தரக்கூடிய ஆற்றல் இவரது நடைக்கு இருந்தது. இவர் இதுவரை எழுதி வந்த அத்தனை பேரிலும், ஒரு வித்தியாசமான எழுத்து நடையைக் கையாண்டுள்ளார்.
புதுமைப்பித்தன், தன்நடையைப் பற்றித் தானே கூறும்போது, ''கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது” என்பார்.
திருநெல்வேலி வட்டார வழக்குகள் அவரது உரைநடையில் பரவலாக இருக்கும். ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில வாக்கிய அமைப்புகளையும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார்.
தமிழ் உரைநடை வரலாறு என்ற நூலில் வி.செல்வநாயகம் கூறுகையில் ''சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவர்நடை, பிறர் பின்பற்ற முடியாத ஒன்று'' என்பார்.
ஆங்கில வாக்கிய அமைப்பில் கையாளப்படுகின்ற இடைவாக்கியம் என்பதை, அதாவது இருபுறமும் கோடுகளிட்டுத் தனியாகச் சேர்த்து வைப்பது என்ற முறையைத் தமது உரைநடையில் அதிகம் பயன்படுத்தினார். சான்றாக, ''முருகதாசரைப் பொறுத்தவரை அது அவரது புனைபெயர் - அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம். வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை - ஏன் வாழ்க்கையையே - திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள் தாம் சிறுகதைகள்......'' என்ற பகுதியைக் காணலாம்.
புதுமைப்பித்தனின் உரைநடைச் சிறப்புகளாகக் குறிப்பிடத்தக்கன
(1)
புதுமையான உரைநடை அமைக்கும் நோக்கில், ‘காம்பவுண்ட் சென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் சென்டன்ஸ்’ என்று சொல்லப்படுகிற முறைகளைக் கையாண்டார்.
(2)
இடை வாக்கியங்களை அமைத்தார்.
(3)
தாவிச் தாவிச் செல்லும் நடையைப் பயன்படுத்தினார்.
(4)
சொற்களை வைத்து விளையாடுகிற தன்மையை உரைநடைக்குள் சோதனை செய்தார்.
(5)
நனவோட்டம் என்னும் முறையில் உரைநடையை எழுதிப் பார்த்தார்.
(6)
திருநெல்வேலி வட்டார மொழியை எழுத்தில் கொண்டு வந்து உரைநடைக்குத் தனித்தன்மை சேர்த்தார்.
புதுமைப்பித்தன்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
அண்ணா, மௌனி, லா.ச.ராமாமிருதம், கல்கி, நீல.பத்மநாபன், சுஜாதா, கி.ராஜநாராயணன், சுந்தரம் ராமசாமி போன்றோர் தம் படைப்புகளில் தமக்கெனத் தனித்தன்மை வாய்ந்த உரைநடையைக் கையாண்டனர்.
அண்ணாதுரை
அண்ணா என்றழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். ''எளிமை, இனிமை, உணர்ச்சி வேகம், இவற்றுடன் ‘பாட்டு மொழிக்கு’ உரிய அடுக்கு மொழித்தன்மையும், மோனை அழகும் அவர் உரைநடையில் கலந்து கிடக்கும்'' என்கிறார் ம.செ.இரபிசிங். சில சமயங்கள் நீளமாக வாக்கிய அமைப்புகளும் இடம் பெறும். எதையும் விரிவாகச் சொல்வதே அவர் பாணி.
அறிஞர் அண்ணா
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
மௌனி
குறைந்த அளவே சிறுகதைகளை எழுதியிருந்தாலும், யாரும் செல்லாத புதிய உரைநடைப் பாதையை உண்டாக்கியவர் என்ற முறையில் மௌனிக்கு உரைநடை இலக்கியத்தில் இடமுண்டு. உள்ளப் பதிவுகளை, மனச்சஞ்சலங்களை, சிந்தனை ஓட்டங்களை உரைநடையில் கொண்டு வந்தவர் மௌனி. எளிமையாக ஆரம்பித்து, போகப் போக நடையில் ஒரு கனமும், பின்னலும் அவர் உரைநடையில் (கதைகளில்) இடம் பெறக் காணலாம். சிறுசெயல்களை நுணுக்கமாக வருணித்தார். இயற்கை பற்றிய பல வருணனைகளை உரைநடையில் கொண்டு வந்தார்.
லா.ச.ராமாமிருதம்
சிறந்த சிறுகதை ஆசிரியரான லா.ச.ரா.வின் உரைநடையும் தனித்தன்மை கொண்டது. சொற்களைக் கொண்டு கலைச் சித்திரங்கள் அமைப்பதில் வல்லவர். மேலும் உரைநடையில் சொற்களைப் பாதியில் விட்டுவிடும் உத்தியைக் கையாண்டார். சான்றாக ''வயிற்றில் பகீர்'', ''உடல் மனம் காற்றுவாக்கில் சிறுவெடிப்பாய் குபீர்'' போன்ற தொடர்களைக் கூறலாம். கொச்சை மொழியையும் உரைநடையில் கொண்டு வரும்போது இலக்கிய அழகு பெறும்படி எழுதியிருப்பது லா.ச.ரா.வின் தனிச்சிறப்பாகும்.
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
பல நாவல்கள், கட்டுரைகளைப் படைத்தவர் கல்கி. பாமரரும், பண்டிதரும் விரும்பிப் படிப்பதற்குரிய நடை ஒன்றினைக் கல்கி கையாண்டார். அவருடைய உரைநடையில் நகைச்சுவைக்கு அதிகம் இடமிருக்கும். எளிமை, தெளிவு, இனிமை, நகைச்சுவை, கற்பனை நயம் சேர்ந்த அழகான உரைநடை என அவர் உரைநடையினைக் கூறலாம்.
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
ஜெயகாந்தன்
அறுபதுகளில் தமிழ் எழுத்துலகில் ஜெயகாந்தன் மிகப் பெரிய எழுத்தாளராக விளங்கியவர். எண்ணங்களை எடுத்துச் சொல்கிற சாதனமாகவே அவர் உரைநடை அமைகிறது. சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரைநடை, எண்ணஓட்டம் வலுப்பெறுகிறபோது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக மாறி விடுகிறது.
நீல.பத்மநாபன்
சிறந்த நாவல், சிறுகதை ஆசிரியரான நீல.பத்மநாபன் தனித்த நடை ஒன்றை உருவாக்கியவர் எனலாம். ஏழூர் செட்டிமார்கள் என்ற ஒரு தனிப்பட்ட சமூகத்தில் வழங்கப்படுகிற பேச்சு வழக்குகள், பழமொழிகள் முதலியவற்றை, அவர்கள் வசிக்கிற வட்டாரத்தில் இயல்பாகப் பேச்சில் கலந்து விட்ட மலையாளச் சொற்களோடும் சேர்த்துத் தனித்த உரைநடையைப் படைத்துள்ளார்.
சுஜாதா
எஸ்.ரங்கராஜன் என்ற சுஜாதா தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்கவர். பல புதுமைகளை உரைநடையில் செய்து பார்த்தவர். ''அவருடைய எழுத்து நடையில் இளமை, புதுமை, அழகு, ஆழம், வேகம், விறுவிறுப்பு. சில சமயங்களில் கவிதைத் தன்மை எல்லாம் கலந்திருக்கும்'' என்பார் வல்லிக் கண்ணன்.
பல சமயங்களில் தமிழா, ஆங்கிலமா என்று அறிய முடியாத அளவு ஆங்கிலச் சொல்லுடனும் உரைநடையை அமைத்திருப்பார்.
மரபு என்பதை உடைத்து, உரைநடையில் புதுமை உண்டாக்கியவர் சுஜாதா.
உணர்ச்சிப் பரபரப்பை எடுத்துச் சொல்லப் பல உத்திகளைக் கையாள்வார். சான்றாக,
“அவன் இருதயம் பயம் பயம் பயம் என்று பம்ப் அடித்துக் கொண்டிருந்தது” என்ற தொடரைக் கூறலாம்.
சுஜாதா
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
கி.ராஜநாராயணன்
கரிசல் காட்டு அகராதியைத் தொகுத்த கி.ராஜநாராயணன் வட்டார வழக்கை அடிப்படையாகக் கொண்டு பல படைப்புகளைப் படைத்துள்ளார். மண்வாசனையை ‘அப்படியே கண்முன் நிறுத்தும்’ உரைநடை அவருடையது. கோவில்பட்டி வட்டாரக் கிராமங்களும், மனிதர்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வாசகர்களுக்கு முன் நடமாட கி.ராஜநாராயணனின் வட்டார உரைநடை ஒரு காரணமாகும்.
கி.ராஜநாராயணன்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
சுந்தர ராமசாமி
நீண்ட காலமாக எழுதி வரும் படைப்பாளியான சுந்தர ராமசாமியின் உரைநடை தனித்துவமிக்கது. எள்ளலும், ஆழமும் அவர் உரைநடையில் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவோடை என்ற தலைப்பில் உரையாடல் வடிவில் உரைநடை அமைத்து ஒரு புதிய நடையை உருவாக்கியுள்ளார்.
''தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பி விட வேண்டுமென்றோ, உரு, உத்தி இத்யாதிகளில் மேல்நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத் தீருவது என்று ஆசைப் பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது'' எனும் ஒரு புளிய மரத்தின் கதை நாவலின் முன்னுரையே சுந்தர ராமசாமியின் உரைநடைத் தன்மையைக் காட்டும்.
சுந்தர ராமசாமி
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
அ.மார்க்ஸ்
தமிழ்த் திறனாய்வு உலகில் குறிப்பிடத்தக்கவர் அ.மார்க்ஸ். நிறப்பிரிகை என்னும் இதழை நடத்தியவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ள இவரின் உரைநடை சிந்திக்க வைக்கும் கருத்துகளையும், எளிமையும் கடுமையும் கொண்ட சொற்களையும் கொண்டதாக அமைகின்றது. ஆதாரங்களையும், நம்பகத் தன்மையான செய்திகளையும் கொண்ட உரைநடைக்கு அ.மார்க்ஸின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். பண்டை இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை அகன்ற பார்வை கொண்டது அவரது உரைநடை.
''பாலியல் நிலை என்பது இயல்பிலேயே சிக்கலானது. பாலியல் சார்ந்த அடையாளங்கள் (ஆண்மை/பெண்மை; மாற்றுப்பால் புணர்ச்சி/ஒருபால் புணர்ச்சி) வெறும் தனிநபர் சார்ந்தவையோ, உடற்கூறு சார்ந்தவையோ மட்டுமன்று....'' இது அ.மார்க்ஸின் உரைநடைக்கு ஒரு சான்றாகும்.
எஸ்.இராமகிருஷ்ணன்
இன்றைய நவீன உரைநடைக்கு எஸ்.இராமகிருஷ்ணனின் படைப்பையே உதாரணமாகக் கூறலாம். சிறந்த சிறுகதை, நாவல்களைப் படைத்துள்ள இவர் நிஜமும், கற்பனையும் கலந்த உரைநடையைப் படைத்துள்ளார். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் தாக்கத்தால் புதிர் மொழி என்னும் புரிந்தும் புரியாத தன்மையில் அமைந்த உரைநடையில் சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ராஜ் கௌதமன்
தமிழில் திறனாய்வு நூல்களைப் படைத்து வருபவருள் குறிப்பிடத்தக்கவர் ராஜ்கௌதமன். இவருடைய சிலுவைராஜ் சரித்திரம் என்னும் இரண்டு பகுதிகளால் ஆன நாவல் ‘தலித் மொழியை’ச் சரளமாகச் சொல்லிச் செல்கிறது. எளிய மக்களின் மொழியாலான உரைநடை தமிழ் உரைநடைக்குச் செல்வமாக அமைகின்றது.
பாமா
சிறுகதை, நாவல் படைப்பாளியான பாமா நேரடியாகப் பேசும் பாங்கில் உரைநடையைத் தந்தவர். இவரின் கருக்கு, சங்கதி போன்ற சிறு நாவல்களின் உரைநடை இதுவரை தமிழ் உரைநடை காணாத புதுவகையாகும். உண்மையான தலித் மொழியைத் தமிழுக்கு வழங்கியது பாமாவின் உரைநடையாகும்.
ப. சிவகாமி
நவீன பெண்ணியப் படைப்பாளர்களில் முன்னோடியாக விளங்குபவர் ப.சிவகாமி. இவரின் ஆனந்தாயி, குறுக்கு வெட்டு போன்ற புதினங்கள் பெண்ணியத்திற்கும், தலித் மக்களின் எளிய எதார்த்த பேச்சு உரைநடைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. நாட்டுப்புற மக்கள் வழக்கில் நிலவும் மொழியை நறுக்கென்று சொல்லும் ஒரு புதுமாதிரியான வடிவினைத் தமிழுக்குத் தந்துள்ளது ப.சிவகாமியின் உரைநடையாகும்.