தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.2 கதைக்கருவும் களமும்

2.2 கதைக்கருவும் களமும்

    தி.ஜா.தம் கதைகளைப் பற்றிக் கூறுமிடத்து “நான் வாழும்
வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கைவரும்
எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன்” என்கிறார் (அக்பர்
சாஸ்திரி). வாழ்க்கையும் அதன் மேல் உள்ள ரசனையுமே
இவருடைய கதைக் களங்கள். சாதாரண அசைவுகளில் கூட
இவ்வுலகம் வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அந்த வியப்பு
அனுபவங்களே     கதைகளுக்குக் கருப்பொருள் ஆகின்றன.
இயற்கையிலேயே ரசனை மிகுந்த இவர் தாம் பிறந்து வளர்ந்த
தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களையே பெரும்பாலான
கதைகளுக்குக் களன்களாக்குகிறார்.

    எந்தக் கதையென்றாலும் மனித மன உணர்வுகளே அங்கு
அடிப்படையாவதால் மனிதனே முக்கியத்துவம் பெறுகின்றான்.
இதனால்தான்     இவருடைய     சிறுகதைகளைப்     பற்றி
இரா.தண்டாயுதம் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இவருடைய
கதைகளில் மனிதனே ஓங்கி நிற்கிறான். அவன் செல்வனோ,
ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ, நல்லவனோ,
கெட்டவனோ, அப்பாவியோ, சூழ்ச்சிக்காரனோ அது வேறு
செய்தி. ஓங்கி நிற்பவன் மனிதன்தான் . . . பிரச்சினைகளை
மையமாகக் கொண்ட கதைகளில் கூட மனிதர்கள்தாம்
பளிச்சென்று தெரிகின்றனர்" (பாரதி முதல் சுஜாதா வரையில்
ப.153).

    அப்பாவியையும், சூழ்ச்சிக்காரனையும் இனம் காட்டுகிறது
கங்காஸ்நானம் (சக்தி வைத்தியம்). நல்லாசிரியர் என்று ஊரே
பாராட்ட அதில் மகிழ்ந்து நிற்கும் நேரம் முள்முடியை
உணர வைத்த அனுபவம் கூறுவது முள்முடி (சக்தி வைத்தியம்).
எப்படியும் வாழலாம் என்றிருக்கின்ற மனிதர்களை நமக்குக்
காட்டும் ரசனையின் வெளிப்பாடு கோதாவரிக் குண்டு (சக்தி
வைத்தியம்). மனிதனின் உள்ளும்,புறமும்     ஒரு சேர
வெளிப்படுத்தும் ஆற்றல் தி.ஜா.வின் எழுத்துகளுக்கு உண்டு.
இவர் கதைகளைப் படித்தால் இவ்வுண்மை புலனாகும்.

2.2.1 அனுபவக் கதைகள்

    ஜப்பான், அமெரிக்கா, செக்கோஸ்லோவேக்கியா ஆகிய
நாடுகளுக்குச் சென்ற அனுபவம் இவருக்கு உண்டு என்று
பார்த்தோம் அல்லவா. ஜப்பானியர்களின் சாதனையும் கடும்
உழைப்பும் இவ்வுலகுக்குத் தெரியும். அவர்களுடைய நல்ல
பண்புகளில் ஒன்று தங்கள் துக்கத்தை மற்றவரிடம்
தேவையின்றிச் சொல்வதில்லை என்பது. மற்றவர் மனத்தை
நோகடிக்க விரும்புவதில்லை. தங்கள் துக்கத்தை மென்று
விழுங்கும் அவர்கள் பண்பைக் கண்டு வியந்த நிலையின்
வெளிப்பாடாக வந்த சிறுகதைதான் யோஷிகி (யாதும் ஊரே,
ப.48).

    அக நோக்கு நிலையில் ஆசிரியரே கதை சொல்வது போல்
அமைந்த சிறுகதை இது. ஐப்பானுக்குச் செல்கிறார் ஆசிரியர்.
நண்பர் கொடுத்தனுப்பிய ஜப்பானிய நண்பர்களின் முகவரியில்
யோஷிகியின் முகவரியும் இருந்தது. யோஷிகிக்கு ஒரு கடிதம்
எழுதி விட்டு கியாத்தோ நகருக்குச் செல்கிறார். அங்கு யோஷிகி
ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து
விட்டுக் காத்திருக்கிறார். யோஷிகி “ஜப்பான் உங்களுக்குப்
பிடித்திருக்கிறதா” என்கிறார். ஆசிரியர் பதிலைப் பாருங்கள்.

    “அழகான ஆரோக்கியமான நகரம் ஜப்பான். நான்
ஜப்பானுக்கு வந்து இரண்டு மாதமாயிற்று. இன்னும் ஒரு
நரைமயிரைப் பார்க்கவில்லை. ஒரு சிடு மூஞ்சியைப்
பார்க்கவில்லை. எந்த ஒரு பஸ் ஸ்டாப்பிலும் ஒரு நிமிடத்துக்கு
மேல்     காத்திருக்கவில்லை.     எந்தச்     சாமானும்
கெட்டுப்போகவுமில்லை. ஹிபியா பார்க்கில் உட்கார்ந்தவன் ஒரு
பெஞ்சில் பர்ஸ், டயரி எல்லாவற்றையும் மறந்து சென்று
விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது அப்படியே இருந்தது.
ரயிலில் போகும்போது யாரும் இங்கு கத்துவதில்லை. சிகரெட்
பிடிப்பதில்லை. படிக்கிறார்கள், இல்லாவிட்டால் கண்ணை
மூடிக்கொண்டு விடுகிறார்கள் “(யோஷிகி, ப.55 யாதும் ஊரே).

    யோஷிகி ஊரைச் சுற்றிக் காண்பித்து விட்டு ஆசிரியர்க்கு
மறக்க முடியாதபடி ஓர் அன்பளிப்பையும் கொடுத்து விட்டுச்
சென்று விடுகிறார். அவரோடு ஊர் சுற்றிப் பார்த்துக்
கொண்டிருந்தபோது அவருடைய கடை ஒன்று தீப்பற்றி
எரிந்து இருபதாயிரம் டாலருக்கு மேல் நஷ்டம் என்றும்
அவருடைய தம்பிக்குத் தீக்காயம் என்றும் பின்னர்த்
தெரிய வருகிறது. ஆனால் இதை யோஷிகி நண்பர்க்குத்
தெரிவிக்கவில்லை. தம்பிக்கு உடம்புக்கு அதிகமாகிவிட்ட
தென்றும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்காது என்றும்
தகவல் வந்ததால் அவசர வேலை என்று சொல்லிச் சென்று
விட்டார். பழைய காலத்து ஜப்பானியப் பண்பின் உருவமாகத்
துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதை மென்று
விழுங்கும் பண்பாளராக யோஷிகி படைக்கப்பட்டுள்ளார்.
இக்கருத்தைத் தெரிவிக்கும் அவர்கள் உரையாடலைப்
பாருங்கள்.

    “துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் மனம்
ஆடக் கூடாது. பொங்கி வழியவும் வேண்டாம்.சோர்ந்து
மடியவும் வேண்டாம்.”

“அதற்காகச் செத்தால் கூடச் சிரிக்க முடியுமா?”

“அழுது மட்டும் என்ன ஆகிவிடப் போகின்றது?”

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

தி.ஜானகிராமன் சிறுகதைகள் இதுவரை
எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன?

2)
தி.ஜானகிராமனின் எந்தச்     சிறுகதைத்
தொகுதிக்கு சாகித்திய அகாதமி பரிசு
வழங்கப்பட்டது?
3)
தி.ஜா.வின்     சிறுகதைகள்     வெளிவந்த
இதழ்களைக் குறிப்பிடுக.
4)
தி.ஜா.வின்     சிறுகதைகள்     பற்றி,
இரா.தண்டாயுதம் குறிப்பிடுவதென்ன?
5)
யோஷிகி கதையின் கருப்பொருள் யாது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:17:35(இந்திய நேரம்)