தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடகச் சிறப்பு

4.2 நாடகச் சிறப்பு


மனோன்மணீய நாடகத்தின் சிறப்புக் கூறுகளாகக் குறிக்கத்தக்கவை இரண்டு. அவை

     1) இது காப்பிய அமைப்பில் அமைந்த நாடகம்
     2) மேலை நாட்டு நாடகங்களைப் போல் அங்கம், களம்
    ஆகிய அமைப்புகளை உடையது.

காப்பிய இலக்கணத்தைச் சுட்டும் போது,

     ‘வாழ்த்தும் வணக்கமும்’ கூறி
     ‘நாற் பொருள் பயக்கும் நடையினைக் கொண்டு
     ‘தன்னிகரில்லாத் தலைவனைக்’ காட்டி
     ‘மலை கடல் நாடு வளநகர் பருவம்’ கூறி
     ‘நன் மணம் புணர்தலைச்’ சுட்டி

எனப் பல கூறுகளைக் கூறுவர். இவை அனைத்தும்
மனோன்மணீய நாடகத்துள் இடம் பெற்றுள்ளன.

மேனாட்டு நாடக அமைப்பில் Act. Scene என்னும்
கூறுகள் உள்ளன. அதைப் போலவே மனோன்மணீயத்துள்ளும்
அங்கம், களம் ஆகிய அமைப்புகள் உள்ளன.

காவிய நோக்கில் படிப்பவர்களுக்குக் காவியமாகவும்
நாடக     நோக்கி்ல்     படிப்பவர்களுக்கு நாடகமாகவும்
மனோன்மணீயம் ஒருசேரப் பயன் அளிக்கிறது.

  • தொடக்கம்
  •     நாடகத்தின் தொடக்கமே மிகுந்த சிறப்புக்குரிய ஒன்றாக
    அமைந்துள்ளது. தமிழைத்     தெய்வமாக     உருவகித்துப்
    பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பாயிரம் அமைத்துள்ளார்.
    இப்பாயிரப் பாடலின் முதல் பகுதியைத் தமிழக அரசு
    தமிழ்த்தாய் வணக்கப் பாடலாக ஏற்றுக் கொண்டுள்ளது.
    அப்பாடல் பின்வருமாறு.

    நீராரும் கடல்உடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
    சீராரும் வதனம்எனத் திகழ்பரத கண்டமிதில்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
    தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே
    உன்சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

        மனோன்மணீயம் நாடகம்     பலசிறப்புகளைப் பெற்று
    விளங்கும் ஒப்பற்ற     நாடக நூலாகும். மொழிப்பற்று,
    நாட்டுப்பற்று, வீரஉணர்வு, குறள் மேற்கோள், பழமொழி ஆட்சி,
    பன்னூல் ஆட்சி, இயற்கை நாட்டம், தத்துவச் சாயல் எனப்
    பல சிறப்புகளைப் பெற்று     விளங்குகின்றது. அவற்றை
    ஒவ்வொன்றாக அறியலாம்.
     

    4.2.1 மொழிப்பற்று


    தமிழ் மொழிப்பற்று,     நாட்டுப்பற்று, வீரஉணர்வு
    ஆகியன நாடகப் போக்கிலேயே நிறைவாக அமைந்துள்ளன.

    எத்திசையும் புகழ்மணக்க
            இருந்தபெரும் தமிழணங்கே


    என்றும்,

         மனம் கரைத்து மலம் கெடுக்கும்
            வாசகத்தில் மாண்டோர்கள்
         கனஞ்சடை என்று உருவேற்றிக் கண்மூடிக்
                     கதறுவரோ?


          (மாண்டோர் - மூழ்கியவர்கள் ; மலம் - ஆணவம்,
          கன்மம் மாயை என்ற கட்டுகள்; குற்றங்கள்)

        என்றும் தமிழ்த் தெய்வ வணக்கத்துள் தமிழைத்
    தெய்வமாக ஏற்றியும் பழந்தமிழ்ப் பக்திப் பாடல்களைப்
    போற்றியும் பாடுகிறார்.

    அன்னையர் தம் குழந்தையிடம் கொஞ்சிக் குலாவியதும்
    அறிதுயில் கொள்ளத் தாலாட்டி மகிழ்ந்ததும், அன்னைத்
    தமிழிலே எனக் கூறித் தமிழைச் சிறப்பிக்கிறார்.

          தீரமும் செய்கையும் வீரமும் பரிவும்
          எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக்
          கண்துயிலாது நீர் கனிவுடன் கேட்ட
          வண்தமிழ் மொழி
                                            (அங்கம் 4 : களம் 1 : வரி : 112 : 115)


          (துயிலாது - தூங்காது)

    என்று கூறுகிறார்.
     

    4.2.2 நாட்டுப்பற்று


    நாட்டுப்பற்றினைச் சீவகன் பாத்திரப்     படைப்பின்
    வாயிலாகப் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.

          அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும்
          நாட்டு அபிமானம் உள்மூட்டிய சினத்தீ
          அன்றோ வானோர்க்கு என்றுமே உவப்பு
                                            (அங்கம் 4 : களம் 1 : 136-138)


          (உவப்பு - மகிழ்ச்சி;
         வானோர் - வானுலகத்தில் வாழும் தேவர்கள்)

    என்றும்,

          தினம்தினம் தாம் அனுபவிக்கும் சுதந்தரம்
          தந்த தம்முன்னோர் நொந்தபுண் எண்ணிச்
          சிந்தை அன்பு உருகிச் சிந்துவர் கண்ணீர்
                                            (அங்கம் 4 : களம் 1 : 155-157)


    என்றும் கூறி நாட்டுப் பற்றினையும் விடுதலை
    வேட்கையையும் எழுப்புகிறார்.

  • வீரஉணர்வு
  •     சீவகன் பாத்திரப் படைப்பின் வாயிலாகக் காட்டும்
    வீரஉரைகள் சிந்தையைக் கவர்வன ஆகும்.

          வேற்படைத் தலைவரே ! நாற்படை யாளரே !
          கேட்பீர் ஒருசொல் ! கிளர் போர்க் கோலம்
          நோக்கி யாம் மகிழ்ந்தோம் ; நுமது பாக்கியமே
          பாக்கியம். ஆ ! ஆ ! யார்க்கு இது வாய்க்கும் !
          யாக்கையின் அரும்பயன் வாய்த்தது இங்கு உமக்கே
                                            (அங்கம் 4 : களம் 1 : 78-82)

         (யாக்கை - உடல்)

        எனப் படைவீரர்களை நோக்கிச் சீவகன் பேசப் பேச,
    படை வீரர்கள் வீரஉணர்வால் ஆர்ப்பரிக்கின்றனர்.
     

    4.2.3 பழைய இலக்கியங்களும் பழமொழியும்


    மனோன்மணீயத்தின் இரண்டாவது சிறப்பாக, அந்நாடகம்
    பழந்தமிழ்     நூற்கருத்துகளையும்     பழமொழிகளையும்
    மேற்கோளாகக் காட்டுவதைக் கூறலாம்.

  • திருக்குறள்

  •  
    திருவள்ளுவர்


        திருக்குறள் கருத்துகள் இடம் அறிந்து பாத்திரப் படைப்பின்
    தன்மை அறிந்து இடம்பெறுகின்றன. ஏறக்குறைய இருபத்தைந்து
    இடங்களில் குறள் கருத்துகளைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
    கையாண்டிருக்கிறார்.

        முதல் நாள் போரில் தோல்வி அடைந்த சீவகன், வெட்கித்
    தலைகுனிந்து இனி, என் உயிரை வீணே சுமந்து திரிய மாட்டேன்
    என்று கூறுகிறான்.

         ....................... ஓர் சிறு
         மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமான்
         பெருந்தகை பிரிந்தும் ஊன்சுமக்கும் பெற்றி
         மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா
                                        (அங்கம் 4 : களம் 3 : 49-53)


        (ஊன் - உடல்)

        என நாராயணனைப் பார்த்துச் சீவகன் கூறுகிறான்.
    இக்கருத்து,

         மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
         உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் : 969)


        (அன்னார் - போன்றவர்)

        மற்றும்

         மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
         பீடழிய வந்த இடத்து (குறள் : 898)


        (ஓம்பும் - பாதுகாக்கும்)

        ஆகிய குறள் கருத்துகளைப் பின்பற்றி எழுந்த
    கருத்துகளே ஆகும்.

  • பழந்தமிழ் இலக்கியங்கள்
  •     இவர் பழந்தமிழ் இலக்கியங்களாகிய புறநானூறு,
    சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், திருவாசகம்,
    திருவிசைப்பா, பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம்,
    நைடதம், நளவெண்பா, திருவிளையாடற்புராணம், நீதிநெறி
    விளக்கம், பட்டினத்தார் பாடல்கள் எனப் பழந்தமிழ்
    இலக்கியங்கள் பலவற்றைத் தம் நாடகத்துள்
    பயன்படுத்தியுள்ளார்.

        ஒரு செவ்வியல் (Classical) நாடகத்துக்கு உரிய
    தன்மைகள் எவை என்றால்,

    1) குறிப்பிட்ட நாடகம் எழுந்துள்ள மொழியின் பழமையான
         உயர்ந்த எண்ணங்களை அந்த நாடகத்தினுள் சேர்த்துக்
          கூறுவது.

    2) அதுவரை எழுந்துள்ள இலக்கியங்களின் நேர்த்தியான
         மொழி வெளிப்பாட்டைத் தம் நாடகத்தினுள் இணைப்பது.

    3) பொருத்தமான பழைய இலக்கிய மேற்கோள்களை
         எடுத்தாள்வது

    போன்றனவாகும்.

        ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமான சேக்ஸ்பியர்
    நாடகத்துள்ளும் இவற்றைக் காணலாம். பேராசிரியர் சுந்தரம்
    பிள்ளை அவர்கள் தம் நாடகத்தை ஒரு செவ்வியல் நாடகமாக
    உருவாக்கி இருப்பதால் இத்தகைய பழைமைக் கூறுகள்
    அனைத்தையும் நாடகத்தினுள் கொண்டு வந்துள்ளர்.

  • பழமொழிகள்
  • தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கிவரும் பழமொழிகள்
    மனோன்மணீய நாடகத்தில் ஆங்காங்கே இடம் பெறுகின்றன.
    ஏறக்குறைய அறுபதுக்கும் மேற்பட்ட பழமொழிகள் நாடகத்தில்
    இடம் பெற்றுள்ளன. கதையை வலிமைப்படுத்தவும், பாத்திரப்
    படைப்பை அழகுபடுத்தவும், நாடகப் பின்னணிக்கு
    மெருகூட்டவுமாகப் பல சூழல்களில் இப்பழமொழிகள் இடம்
    பெற்றுள்ளன.

  • காயும் பழமும்
  •     மனோன்மணியின் மனவேறுபாட்டிற்குக் காரணம், அவள்
    திருமணப் பருவம் அடைந்தமையால்தான் என்று சுந்தர முனிவர்
    கூறுகிறார். இதனை விளக்குவதற்கு ஓர் அருமையான
    பழமொழியைப் பயன்படுத்துகிறார். இது ஒரே வேளையில்
    பழமொழியாகவும் உவமையாகவும் அமைந்து மனோன்மணியின்
    மனக்கருத்தை வெளிப்படுத்துகிறது.

    புளியம் பழம்

         குழவிப் பருவம் நழுவும் காலை
         களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்
         புளியம் பழமும் தோடும் போலாம்
                                                   (அங்கம் 1 : களம் 4 : 167-169)


         (தோடு - புளியம் பழத்தின் மேல் தோல் பகுதி)

    என்று கூறி, புளியம் பழத்துக்கும் அதனைப் பற்றி
    இருந்த ஓட்டுக்கும் இடையே உள்ள உறவினைக் கூறி
    மனோன்மணியின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

         "காய் நிலையில் புளியங்காய் ஓட்டினையும் அதனைப் பற்றி
    இருக்கும் சதைப் பகுதியையும் பிரிக்கமுடியாது; அதே
    புளியங்காய் பழமாகும் பொழுது ஓட்டையும் சதைப் பகுதியையும்
    ஒட்ட வைக்க முயன்றாலும் அது ஒட்டாது. பெண்களின்
    மனநிலையும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில் அவர்களின்
    சொல்லும் செயலும் பிரியாமல் இருக்கும்; ஆனால் பருவமுற்றுக்
    காதல் கொள்ளத்தகும் மனநிலையில் அவர்களின் சொல்லும்
    பொருளும் - சொல்லும் செயலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து
    நிற்கும். இந்த உணர்வைத்தான் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
    மேலே சுட்டிய பழமொழி மூலம் வெகு அழகாக
    வெளிப்படுத்துகிறார்.

    மனோன்மணீய நாடகத்தில் சாதராணச் சேவகன் முதல்
    மன்னர் வரை அனைவரும் பழமொழியைப் பயன்
    படுத்துகின்றனர். பழமொழி அனைத்து நிலை மக்களுக்குமான
    பொதுமொழி என்பதால்தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
    அவற்றை அனைத்துப் பாத்திரப் படைப்புகளிலும்
    பயன்படுத்துகிறார்.
     

    4.2.4 இயற்கையும் தத்துவமும்


    பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இயற்கை மீது மிகுந்த
    ஈடுபாடு உடையவர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் தம்
    இயற்கை ஈடுபாட்டை நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
    அதேபோல், தத்துவப் பேராசிரியராகிய சுந்தரம் பிள்ளை,
    தத்துவக் கருத்துகளையும் நாடகத்தில் கூறியுள்ளார்.

  • இயற்கை ஈடுபாடு
  •     நாடகக் காட்சிக்கு இயற்கைப் பின்னணி அழகுசேர்க்கும்
    என்பதை சுந்தரம்பிள்ளை அறிந்திருந்தார். இத்தகைய இயற்கை
    ஈடுபாட்டைப் பேராசிரியர் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.
    நடராசன் என்னும் பாத்திரத்தை இயற்கையின் இரசிகனாகவே
    படைத்துள்ளார். அவன் வாயிலாகத் தாம் இயற்கையின் மீது
    கொண்டுள்ள காதலைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை வெளிக்
    காட்டுகிறார். எந்த எதிர்பார்ப்புமில்லாமல், உழைக்கும் நாங்கூழ்ப்
    புழுவின்    செயலைக் கூர்ந்து     நோக்கும் நடராசன்
    கீழ்க்குறிப்பிடுமாறு கூறுகிறான்.

    நாங்கூழ்ப் புழு

         ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
         ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்
         உழைப்போர் உழைப்பில் உழவோர் தொழில் மிகும்
         உழுவோர்க்கு எல்லாம் விழுமிய வேந்து நீ
         எம்மண் ணாயினும் நன்மண் ஆக்குவை


        நாங்கூழ்ப் புழுவைப் பற்றிய இவ்வரிகள் நாராயணனின்
    இயற்கை ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.

  • தத்துவக் கருத்துகள்
  •     பல தத்துவக் கருத்துகள் நாடகத்தில் இடம்
    பெற்றுள்ளன. தத்துவம் என்பதை மெய்ப் பொருள் உண்மை
    எனத் தனித் தமி்ழில் கூறலாம். இந்த மெய்ப்பொருள்
    உண்மைகள் பல, நாடகத்தில் இடம் பெற்றுள்ளன. பல
    பாத்திரங்கள் மெய்ப்பொருள் விளக்கமாகவே வெளிப்படுகின்றன.
    மெய்பொருள் விசாரணையில் ஈடுபடும் பாத்திரமாக
    நிஷ்டாபரரையும், கருணகரரையும் சுந்தரம் பிள்ளை
    படைத்துள்ளார்.

        பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கல்லூரியில் தத்துவப்
    பேராசிரியராகப் பணிபுரிந்ததால் தம் நாடகத்தில் தத்துவக்
    கருத்துகளைப் பாத்திரப் படைப்புக்கு ஏற்ற நிலையில்
    இயல்பாகக் கலந்திருக்கிறார்.
     

    1)
    பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எந்த ஆண்டு
    எங்கே பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்?
    2)
    மனோன்மணீய நாடகத்தின் சிறப்புகளாக
    எவற்றைக் குறிக்கலாம்?
    3)
    மனோன்மணீயம் எத்தனை அடிகளில்
    எவ்வெப் பா வகைகளில் அமைந்துள்ளது?
    4)
    பாண்டிய மன்னன் தன் தலைநகரை
    எங்கிருந்து எங்கு மாற்றினான்?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:42:33(இந்திய நேரம்)