தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.3 மரபுக் கவிதையும் பாடுபொருளும்


     மரபுக்கவிதை, பிற்காலத்தில் தெம்மாங்கு, சிந்து, கண்ணி
முதலிய சந்தங்களில் பாடப்பட்டுள்ளது. பாரதி மரபுக்கவிதையில்
பல பாடல்கள் பாடியுள்ளார். நடிப்புச் சுதேசிகள் என்ற தலைப்பில்
பாரதி, கிளிக்கண்ணிகள் என்ற சந்தத்தில் பாடல் எழுதியிருப்பதை
இங்கே சான்றாகப் பார்க்கலாம்.

     கிளிக்கண்ணி என்பது பெண்கள் தினைப்புனம் காக்கச்
செல்லும்போது,     தினையைக்     கிளிகள் உண்ணாதவாறு
வில்லுக்கட்டையில் கல்வைத்து, கிளியை ஓட்டியபடி பாடும்
பாவகை.

     பாரதியார் இந்தச் சந்தத்தில் போலிச் சுதேசிகளை எள்ளி
நகையாடிப் பாடுகிறார்.

     நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமுமின்றி
          வஞ்சனை சொல்வாரடி ! - கிளியே
     வாய்ச்சொல்லில் வீரரடி... !


1.3.1 இந்திய தேசியம்

     பாரதியாருக்குப் பாடுபொருளாக அமைந்தவற்றுள் இந்திய
தேசியமும் ஒன்று. “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர்
நிறை
” என்று தம் கவிதைகள் மூலமாக, இந்திய தேசியத்தைப்
பாடியவர் பாரதி. தேசப்பற்று மக்களிடையே ஏற்பட வேண்டும்
என்பதை நினைவுபடுத்தியவர்.



     பாரததேசம் என்று பெயர் சொல்லுவார் - மிடிப்
     பயம் கொள்ளுவார் துயர்பகை வெல்லுவார்
- என்றும்

     வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி
     மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
- என்றும்

இந்திய தேசியத்தை முன்மொழிந்தவர் பாரதி.

     இந்திய தேசியத்தை வளர்த்தவர்களுள் பாரதியும், நாமக்கல்
கவிஞரும் சிறப்பிடம் பெறுகின்றனர்.
  • பாரதியார்


     நமக்குத் தொழில் கவிதை
          நாட்டிற்குழைத்தல்
     இமைப்பொழுதும் சோராதிருத்தல்


என்று தன் பணியைத் தெளிவுபட எடுத்துக்கூறியவர். சிறு
வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர். பாரதியின்
காலம் தேசியப் போராட்டக்காலம்.நாடு அந்நியப்பிடியில் சிக்குண்டு
வாழ்ந்த காலம். எனவே நாட்டின் அடிமை விலங்கை உடைக்க,
கவிதையைக் கருவியாகப் பயன்படுத்தினார் பாரதி. நாட்டு
விடுதலையோடு பெண் விடுதலையும் வேண்டிய மகாகவி. மானுட
விடுதலை பெண் விடுதலையோடு தொடர்புடையது என
முழங்கினார்.

  • நாமக்கல் கவிஞர்


    “காந்தியக் கவிஞர்” என்று அழைக்கப்படும்
வெ. இராமலிங்கம் நாமக்கல் கவிஞர் ஆவார்.

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கோர் குணமுண்டு


என்று பாடி, தமிழனின் மாண்பை விளக்குகிறார்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற
பாடல் நாமக்கல் கவிஞரை அடையாளப்படுத்திய பாடலாகும்.

1.3.2 தமிழ்த் தேசியம்

தமிழ்மொழியை, தமிழ்நாட்டை, தமிழர்களை மையப்படுத்திப்
பேசுவது தமிழ்த்தேசியம். பாரதி, இந்திய தேசியத்தைப் பாடியவர்.
பாவேந்தர் தமிழ்த் தேசியத்தை ஆதரித்தவர். குறிப்பாக, தமிழர்கள்
ஆட்சியை முதன்மைப்படுத்திப் பேசுவது தமிழ்த்தேசியமாகும்.

  • பாரதிதாசன்

பாரதியின் சிந்தனைகளில்     மூழ்கித் திளைத்த
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
வெள்ளையரிடமிருந்து    தப்பி,     பாரதியார்     புதுவையில்
வாழ்ந்தபோது பாவேந்தருக்குப் பாரதியின் நட்புக் கிடைத்தது.
பாரதிக்குத் தாசன், பாரதிதாசன். தாசன் என்றால் ஒருவரை
முன்மாதிரியாகக் கொண்டு அவரைப் பின்பற்றி நடப்பவன் என்று
பொருள்.

பாவேந்தர் எழுதிய கவிதைகள் உணர்ச்சி நிறைந்தவை.
தமிழ்மொழியும் தமிழ்நாடும் இந்தியாவில் ஆட்சிபுரிய வேண்டும்.
அதாவது தமிழ்த்தேசியம் வேண்டும் என முழங்கியவர்.
  • தமிழும் தமிழ்மொழிச் சிந்தனையும்
தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்    


தமிழை உயிரோடு ஒப்புமைப்படுத்திப்பாடிய கவிஞன்.

  • பாவேந்தரின் பொதுவுடைமைச்சிந்தனை


சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே


என்ற பாடல் உழைப்பாளர்களின் உழைப்பை வலியுறுத்தும்
பாடலாகும். பொதுவுடைமை என்பது எல்லோரும் எல்லாமும் பெற
வேண்டும் என்பதாகும்.இதையும் வலியுறுத்திப் பாடியுள்ளார் அவர்.

  • வாணிதாசன்
வாணிதாசன், பாரதிதாசனின் சிந்தனைகளை ஏற்று வாழ்ந்தவர்.
பாரதிதாசனின் மரபில் மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவர்.
பாட்டரங்கப் பாடல்கள் பாடுவதில் வாணிதாசனுக்கு ஒரு
தனி இடம் உண்டு. இவரின் முதல் கவிதை நூல் ‘தமிழச்சி’
1949இல் வெளிவந்தது. ‘பாட்டரங்கப் பாடல்கள்’ கவிதைத்
தொகுதி 1975இல் வெளியாயிற்று.

வாணிதாசனைத் தொடர்ந்து முடியரசன், சுரதா முதலியவர்கள்
மரபுக்கவிஞர்களாக எல்லோராலும் அறியப்பட்டனர்.

1.3.3 திரைப்படமும் கவிஞர்களும்

சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதில் திரைப்படத்திற்குப்
பெரிதும் இடமுண்டு. திரைப்படப்பாடல்கள் மக்கள் மனத்தை
மாற்றும் சக்தியாகக் கருதப்படுகின்றன. மனிதர்களின் வாழ்க்கை,
தத்துவம், அறம், இன்பம், துன்பம் எல்லாவற்றையும் உள்ளடக்கி,
திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில்
கவிஞர் கண்ணதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர்.

  • கண்ணதாசன்


திரைப்படம் மூலம் பல கவிதைகளை இலக்கியநயம் சொட்டச்
சொட்டப் பாடியவர். தனிக்கவிதைகள், திரையிசைப் பாடல்கள்,
கதை பொதிந்த பாடல்கள், கவிதைக் குறு நாடகங்கள்
எழுதியுள்ளார். கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் இனிமை
நிறைந்தவை. தாலாட்டுப் பாடல் தொடங்கி, மரணத்தைப் பாடுவது
வரை கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்தான்.

உதாரணமாக,

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே

     (திரைப்படம் : பாசமலர்)


என்ற பாடல் தாலாட்டுப் பாடலாக ஒலிக்கிறது. இந்தப்
பாடலைப் பாடும்போது, தொட்டிலை இழுத்து ஊஞ்சல்போல
ஆட்டினால் தொட்டில் முன்னும், பின்னும் போய்வரும் ஓசை
இந்தப் பாடலில் அமைந்திருப்பதைப் பாடி உணரலாம்.



வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ


என்ற பாடல் ஒரு மனிதன் இறந்துபோனால் அவனுக்காக
அழக்கூடியவர்களில் உறவினர்கள் வீடுவரையிலும், மனைவி
வீதிவரையிலும் அழுதுகொண்டு செல்வார்கள் என்பதும், பிள்ளை
சுடுகாடு வரை செல்வான் என்பதும் சொல்லி, கடைசி வரை
யாருமில்லை என்பதை வாழ்க்கைத் தத்துவமாகப் பாடியுள்ளார்.

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மக்கள் படைத்த கலைகள் மக்களின் வாழ்க்கை உயர
வழிவகுக்க வேண்டும். அந்த வகையில் பாடல் மூலம் பாரதியும்,
பாவேந்தரும் ஒரு பெரிய எழுச்சியை, இந்திய தேசியத்தை, தமிழ்த்
தேசியத்தை எழுப்பினர். திரையுலகில் கண்ணதாசனைப்போலவே,
கவிஞர் பட்டுக்கோட்டையார் மக்கள் நெஞ்சம் மகிழப் பாடினார்.

தமிழகத்தில், ஏழை உழைப்பாளிகள், அறிவால் உழைக்கும்
இடைநிலை மக்கள் ஆகியவர்களுக்காகத் திரையுலகிலே குரல்
கொடுத்து, அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாடியவர்
கல்யாணசுந்தரம்.

சமுதாயத்திலே, மக்களிடையே வேற்றுமை உணர்வு மிகுந்து
காணப்படுகிறது. அது, கவிஞரைப் பாதிக்கிறது. அதனை
விளக்க, ஒரு கற்பனை கலந்த பாடலைப் பாடுகிறார்.

விண்ணையிடிக்கும் மலைமுகட்டிலே அருவிகள்
தோன்றுகின்றன. அந்த அருவிகள் பொழியும் நீர் கடலில் சென்று
கலக்கிறது. ஆனால் தனிமனிதனோ சமுதாயம் என்ற கடலில்
கலப்பதில்லை. உயர்வு, தாழ்வு என்ற வேறுபாட்டை வளர்க்கிறான்.
இதனை விளக்கும் பாடல் கீழே தரப்படுகிறது.



உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
ஒற்றுமையில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது

     (மக்கள் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடல்கள்)


  • கல்யாணசுந்தரம் விவசாயக் கவிஞர்
  • உழைப்பாளிகளுக்காகப் பாடியவர்
  • மூடநம்பிக்கையை எதிர்த்தவர்
  • மக்களுக்காகப் பாடியதால் மக்கள் கவிஞர் என
    அழைக்கப்படுகிறார்.

1)
கவிதைக்குத் தேசிகவிநாயகம் கூறிய விளக்கம்
யாது?
2)
மரபுக்கவிதை என்பதற்கு விளக்கம் தருக.
3)
இந்திய தேசியம் பற்றிப் பாடிய கவிஞர்கள்யார்?
4)
புரட்சிக் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்?
5)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் யாரைப் பற்றி
அதிகமாகப் பாடினார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:09:46(இந்திய நேரம்)