Primary tabs
-
3.0 பாட முன்னுரை
தமிழ் அக இலக்கியப் பாடல்களில் பெரும் அளவில் பங்குபெறும்
மாந்தர்கள் தலைவனும் தலைவியும் ஆவர். தலைவியின் பங்கு
மிகுதியாக இருந்தாலும், தலைவியின் செயல்பாடுகளுக்கும் உணர்வு
வெளிப்பாடுகளுக்கும், காரணமாக அமைபவன் தலைவனே.தலைவியை நேரில் பார்த்து, விரும்பிக் காதலித்து, பின்னர்
திருமணம் செய்து வாழும் நிலையில் தலைவனின் பங்கும், பண்பு
நலன்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவை.
• தலைவனின் பங்கு
தலைவியை எதிர்பாராத விதமாகச் சந்திக்கும் தலைவன், அவளின்
அழகில் மையல் கொண்டு, அவளை விரும்புகிறான். பிறகு
அவளைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். களவு
நெறியிலும், கற்பு நெறியிலும் அவளோடு தொடர்பு கொண்டு
வாழ்ந்த காலத்தில், அவளது உள் உணர்வுகளையும் அவளது
பெண்மையின் சிறப்பினையும் அறிந்து கொள்கிறான். அவளது
முகம் வாடுவதையோ அவளது துன்பத்தையோ பொறுத்துக்
கொள்ள முடியாத தலைவன், அவற்றைப் போக்குவதற்கான
செயல்களில் ஈடுபடுகின்றான். அவளது ஊடலைத் தீர்க்க
முயற்சிக்கிறான். பிரிவுக் காலத்திலும் தலைவி தன்னை நினைத்துப்
பெருமைப்படும்படி அவள்மீது அளவு கடந்த அன்பை
வெளிப்படுத்துகிறான். தலைவனின் இத்தகைய பண்பு நலன்களைப்
பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெற்றுள்ளன.