தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.1-தலைவனின் காதல்

  • 3.1 தலைவனின் காதல்


         சூழலாலோ, பிறவற்றாலோ, தலைவியை நேரில் பார்க்கும் வாய்ப்பு
    தலைவனுக்கு ஏற்படுகிறது. நேரில் பார்க்கும் தலைவன், தலைவியின்
    அழகினால் கவரப்படுகிறான். அவளை விரும்புகிறான். அவள்
    விருப்பத்தையும் அறிய விழைகிறான். அவள் வெளிப்படுத்தும்
    மறைமுகக் குறிப்புகளினால் தன்னை அவள் விரும்புவதை
    உணர்ந்து கொள்ளுகிறான். அதன்பின்னர் அவள் மீது காதல்
    கொள்கிறான். மனம் ஒருமித்த காதலர்கள், அடிக்கடி சந்திக்கின்றனர்.
    அப்பொழுது அவன் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.

    3.1.1 தலைவனின் வியப்பு


        எதிர்பாராத வகையில், தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர்
    சந்தித்துக் கொள்கின்றனர். முதல் சந்திப்பிலேயே அவர்களை
    இணைப்பது அவர்களின் கண்களின் பார்வையே. தலைவனின்
    பார்வை தலைவியையும், தலைவியின் பார்வை தலைவனையும்
    பெரும் அளவில் பாதிக்கின்றன. தலைவியின் பார்வையின்
    பாதிப்பிற்கு ஆளான தலைவன், தலைவியின் கண்களைப் பார்த்து
    வியக்கின்றான். இந்தப் பெண்ணைப் பார்த்தால் மிகவும் மென்மைத்
    தன்மை உடைய பெண்போல் காட்சி அளிக்கின்றாள். ஆனால்
    அவளின் அழகான கண்களைப் பார்த்தால் அப்படித்
    தோன்றவில்லை. பார்த்தவர்கள் உயிரையே கவர்ந்து விடுமோ?
    அத்தகைய கொடுமை வாய்ந்தவையாக அல்லவா அவை காட்சி
    அளிக்கின்றன.

    கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்

    பேதைக்கு அமர்த்தன கண்

    (குறள்: 1084)


    (கண்டார் = பார்த்தவர்கள், தகை = தன்மை, பேதை = பெண்,
    அமர்த்தன
    = மாறுபட்டன)

    பார்க்கிறவர்களின் உயிரையே கவர்ந்து விடுகிறது அழகு வாய்ந்த
    இந்தப் பெண்களின் கண்கள். தோற்றத்தால் மென்மையும்,
    பேதமையும் கொண்ட இந்தப் பெண்ணின் கண்களா இவை?
    முற்றிலும் முரணாக அல்லவா இருக்கின்றன என்று தலைவன்
    வியக்கின்றான்.

        அடுத்து வரும் பாடலில் (குறள்:1085) கூட, தலைவன், ‘கூற்றமோ?
    கண்ணோ? என்று மேலும் வியக்கின்றான்.

        தலைவனின் இந்த வியப்பிற்கு அடிப்படைக் காரணம் என்ன?
    பார்வையால் பிறரைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் அவளது
    கண்களுக்கு இருக்கின்றன. அவள் பார்வையிலிருந்து மீள முடியாது.
    தலைவனின் உயிர் அவளிடம் தஞ்சம் புகுந்தது. அதிலிருந்து
    மீட்பது அவ்வளவு எளிமையானது அல்ல. எனவே, ‘உயிர்
    உண்ணும்’ என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

        தலைவியின் அழகாலும், அவளது பார்வையாலும் தன்னை இழந்த
    தலைவனின் மனநிலையையே வள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    3.1.2 காதல் குறிப்பு அறிதல்


        காதல் வாழ்க்கையில் முதல் நிலை தலைவனும் தலைவியும் ஒருவரை
    ஒருவர் பார்த்து மகிழும் காட்சி. அடுத்து காதல் வெளிப்படுதலும்,
    அதன்பி்ன்னர், தெளிவு ஏற்படுதலும் ஆகும். பார்வையால்
    பாதிக்கப்பட்ட தலைவனுக்குத் தலைவி வெளிப்படுத்தும்
    குறிப்புகளால், ஒரு தெளிவு ஏற்படுகிறது. தான் அவளை
    விரும்புவதைப்போல - தான் அவள் மீது காதல் கொள்வதைப்போல,
    அவளும் தன்மீது காதல் கொள்ளுகிறாள் என்பதை அவளது
    பார்வைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளுகிறான் தலைவன்.

        தான் பார்க்கும்போது வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை
    செய்த தலைவி, இப்பொழுது நேராகவே பார்க்கிறாள். பார்த்ததோடு
    அமையவில்லை, நாணத்தால், தலைகுனிந்து கொள்ளுகிறாள். அவள்
    அவ்வாறு செய்தது அன்பு என்ற பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது
    போல் இருந்தது என்கிறான் தலைவன்.

    நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்

    யாப்பினுள் அட்டிய நீர்

    (குறள்: 1093)


    (இறைஞ்சி = தாழ்தல், யாப்பு = பயிர், அட்டிய = ஊற்றிய)

    என்னை நோக்கினாள்; நான் அவளைப் பார்த்ததும் நோக்கித்
    தலைகுனிந்தாள். அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற
    நீராகும் என்பது இந்தக் குறள் தரும் பொருள்.


    • தலைவனின் எதிர்பார்ப்பு


        பார்வையினாலும், அழகினாலும் தன்னை வயப்படுத்திய தலைவி,
    தன்னைப் பார்க்கமாட்டாளா, தன்னை விரும்ப மாட்டாளா என்று
    ஏங்கினான் தலைவன். ஒவ்வொரு விநாடியும் அவளின் விருப்பத்தை,
    அவளின் சம்மதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் தலைவன்.
    இப்பொழுது தலைவி வெளிப்படுத்திய குறிப்பு - அவளது செயல்
    அவள் எத்தகைய உணர்வுடன் இருக்கிறாள் என்பதனைப்
    புலப்படுத்திவிட்டது. இதனை நன்கு உணர்ந்து கொண்டான்
    தலைவன். தன்னை நோக்கியவள், நோக்கித் தலைகுனிந்தவள்
    புலப்படுத்திய செய்கையினால், தலைவனின் எதிர்பார்ப்பிற்குத் தக்க
    விடை கிடைத்து விட்டது. எனவேதான் தலைவியின் பார்வையால்
    தனக்குக் கிடைத்த பதிலை - ஒப்புதலைக் குறிப்பிடும்போது
    ‘அன்பு’ என்ற பயிருக்கு நீர்பாய்ச்சியது போல் உள்ளது என்கிறான்
    தலைவன்.

        தலைவியின் செய்கை எந்த அளவுக்குத் தன் எதிர்பார்ப்பிற்கு உரிய
    விடையாக அமைந்தது என்பதனை அறிந்து கொள்ளும் ஆற்றல்
    தலைவனிடம் அமைந்துள்ளது.


    3.1.3 அழகில் ஈடுபாடு


        தலைவியைச் சந்தித்த முதல் காட்சியிலேயே, முதல் நிலையிலேயே,
    அவள் அழகைக் கண்டுகளித்தவன் தலைவன். அவளது அங்க
    அழகு அவனைப் பரவசப்படுத்தியது. அவளது அழகில் தன்னை
    இழந்தவன் தலைவன். அதுவே காதலின் தொடக்கம். எனவே, தான்
    பார்த்து மகிழ்ந்த, ஒவ்வோர் இயற்கைப் பொருளோடும் அவற்றை
    ஒப்பிட்டு மகிழ்கிறான்.

        மூங்கில் போன்றது அவளது தோள். அத்தகைய அழகான தோளை
    உடையவளது மேனி மாந்தளிர் போல் காட்சி அளிக்கிறது. ஒளிவீசும்
    முத்துகளை வரிசையாக வைத்தால், அவை எவ்வாறு அழகுடன்
    காட்சி வழங்குமோ அதுபோன்று வரிசையாக அவளது பற்கள்
    அமைந்திருக்கின்றன. அவளது உடலில் இயற்கையாகவே மணம்
    பொருந்தி உள்ளது. மை தீட்டப்பட்ட கண்களோ, வேல் போன்ற
    தன்மையுடன் காட்சி அளிக்கின்றன. இவ்வாறு தலைவியின் அழகைத்
    தலைவன் புகழ்கிறான்.


    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு



    (குறள்: 1113)


    (முறி = தளிர்; மேனி = உடல்; முத்தம் = முத்து;
    முறுவல்
    = புன்னகை, வெறிநாற்றம் = இயற்கைமணம்;
    உண்
    = உண்ணும்; வேய் = மூங்கில்; அவட்கு = அவளுக்கு)

    மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி,
    முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்
    என்பது இதன் பொருள். தலைவிமீது, தலைவன் கொண்டிருந்த
    மிகுந்த காதலே அவளை - அவள் அழகை இவ்வாறு இயற்கைப்
    பொருட்களோடு ஒப்புநோக்கிப் புகழவைத்தது.

        இயற்கையின் பரிசாகக் (Gift) கருதப்படும் அழகை இரசிக்கும்,
    அழகை நுகரும் முருகியல் உணர்வு (asthetic sense) பெற்றவன்
    தலைவன். எனவே, இயற்கைப் பொருட்களை மட்டுமல்ல,
    இயற்கையாக அமைந்த பெண்ணின் அழகையும் கண்டுகளிக்கும்
    இயல்பு உள்ளவனாகத் தலைவன் இருக்கிறான். எனவே,
    தலைவியினிடத்தில் காதல் வயப்படும் தலைவன், தன் உள்ள
    உணர்வுகளை எல்லாம் தலைவியைப் புனைந்துரைப்பதின் மூலம்
    வெளிப்படுத்துகிறான்.


    தன் மதிப்பீ்டு : வினாக்கள் : I

    1. தலைவியின் கண்களைப் பார்த்துத் தலைவன் ஏன்
      வியக்கின்றான்?
    1. தலைவி தன்னை விரும்புகிறாள் என்பதனைத்
      தலைவன் எவ்வாறு புரிந்து கொண்டான்?
    1. தலைவியின் அழகைத் தலைவன் எவ்வாறு
      புகழ்கிறான்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:54:17(இந்திய நேரம்)