தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.3 குழு முறைகள்டுகளங்கள்

  • 5.3 குழு முறைகள்

    பல்வேறு வகையான குழுமுறைகள் இருந்தன. அவற்றுள்
    குறிப்பிடத்தக்கவை, பாலர் நாடகசபை முறை, நிரந்தரக் குழுமுறை
    போன்றவையாகும்.

    5.3.1 பாலர் நாடக சபை

    பெரியவர்கள் ஏற்று நடித்துச் சீரழித்துக் கொண்டிருந்த
    நாடகப் பாத்திரங்களின்று அவர்களை விலக்கி விட்டு
    அப்பாத்திரங்களில் இளம் சிறுவர்களை நடிக்க வைத்து நாடகம்
    நடத்தும் முயற்சியே பாலர் நாடக சபை முறை எனப்பெற்றது.

  • பாலர் நாடக சபை தோற்றம்


  • பரிசோதனை முயற்சியாக 1910-ல் சமரச சன்மார்க்க சபை
    என்னும் பாலர் நாடக சபையை, சங்கரதாசு சுவாமிகள்
    தோற்றுவித்தார். 1918-ல் முற்றிலும் சிறுவர்களைக் கொண்ட
    மதுரை தத்துவ மீன லோசனி வித்துவ பால சபா என்னும் பாலர்
    நாடக சபையையும் சுவாமி தோற்றுவித்தார். இது முற்றிலும்
    சீரமைக்கப்பெற்ற பாலர் நாடக சபையாக விளங்கியது. சுமார் 12
    வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்
    பெற்றனர்.

    இதனைத் தொடர்ந்து பல கலைஞர்கள் இம் முயற்சியில்
    ஈடுபடத் தொடங்கினர்.

  • பெயர்கள்


  • பாலர் நாடக சபை முறையின் வழி, தோற்றம் பெற்ற நாடகக்
    குழுக்கள் யாவும் பாலர் சபைகள் அல்லது பாய்ஸ் கம்பெனிகள்
    எனப் பெயரிட்டு அழைக்கப் பெற்றன. வருமான நோக்கில்
    செயல்பட்டு வந்ததால் கம்பெனி என்ற பெயர் அமைந்து வந்தது.

    பாலர் சபைகளின் வழி உருவாகிய நாடகங்கள் பாலர் சபை
    நாடகங்கள் அல்லது பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் எனப்
    பெயரிட்டு அழைக்கப் பெற்றன.

  • ஆடவர் பங்கேற்பு


  • பாலர் என்பது சிறுவயதுக்காரர் என்ற பொருளில்
    பயன்படுத்தப் பெற்றது. பாலர் என்பதை பால்யர் என்றும்
    அழைத்தனர். இவ்வகை நாடகக் குழுக்களில் முதலில் ஆண்கள்
    மட்டுமே இடம் பெற்றதால் பாலர் அல்லது பாய்ஸ் என்ற
    அடைமொழியிட்டு வழங்கப் பட்டது.

  • பெண்கள் பங்கேற்பு


  • பிற்காலத்தில் பாலர் சபைகளில் சிறுவயதுப் பெண்களும்
    இடம் பெறும் நிலை ஏற்பட்டது. இவ்வேளையில் சிறுவர்களை
    மட்டுமே கொண்டு விளங்கிய பாலர் சபைகள் ஒரிஜினல் பாய்ஸ்
    கம்பெனி என்று அழைக்கப்பட்டது.

  • முன்னோடிகள்

  • டி.கே.சண்முகம்,     டி.கே.சங்கரன்,
    டி.கே.முத்துசாமி ஆகியோர் இச்சபையின்
    தொடக்க கால நடிகர்களாக விளங்கினார்கள்.
    தமிழகமெங்கும் சுமார் அறுபது பாலர்
    சபைகள் தோற்றம் கண்டன.


    டி.கே.சண்முகம்



    5.3.2 நிரந்தரக் குழு முறை

    பாலர் சபைகள் உள்ளிட்ட தொழில் முறை நாடகக் குழுக்கள்
    நிரந்தர நாடகக் குழுக்களாக (Permanent Drama Troupes)
    விளங்கின. இவ்வகைக் குழு முறைக்கு நிரந்தரக் குழுமுறை
    (permanent troupe system) என்று பெயர்.

  • குருகுல முறை


  • இவ்வகைக் குழு முறையில் அனைத்துக் கலைஞர்களும்
    ஓரிடத்தில் ஒரு சேரத் தங்கியிருப்பார்கள். சாதி, மத, இனப்
    பாகுபாடின்றி ஒன்றிணைந்த இந்த நிலை குருகுல முறையாக
    விளங்கிற்று.

    ஒன்றாகவே சாப்பிட்டு ஒற்றுமையுடன் கலைஞர்கள் இருந்து
    வந்தனர். இவர்களுக்கான உணவு தயாரித்தலுக்காகத் தனி்ச்
    சமையற்காரர் அமர்த்தப்பட்டிருந்தார்.

  • பயிற்சி


  • சிறு நடிகர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்கெனத் தனிப்
    பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இசைப்பயிற்சி,
    நடிப்புப்பயிற்சி, நடனப் பயிற்சி, குரல் பயிற்சி என பலதரப்
    பயிற்சிகள் வழங்கப்பட்டன.

  • பயணம்


  • குழுவினர் ஓர் இடம் விட்டு இன்னோர் இடம் செல்லும்
    போதும் ஒன்றாகவே பயணம் செய்தனர். மாட்டுவண்டிகள்,
    புகைவண்டி போன்றவை போக்குவரத்துக்காகப்
    பயன்படுத்தப்பட்டன.

  • நாடகக் கலைஞர்கள்


  • தோற்றப் பொலிவின்     அடிப்படையில் வேடங்கள்
    வழங்கப்பட்டன. கூடவே பாடும் திறன், நடிப்புத்திறன் போன்ற
    திறன்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. சுமார் 14 வயதில்
    உருவாகும் மகரக் கட்டு என்னும் குரல் மாற்ற இயற்கை நிகழ்வே
    இக்கலைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது.
    இக்கால கட்டத்தில் குரலில் மாற்றம் நிகழ்வதால் சில
    கலைஞர்கள் தங்களது வாய்ப்பை இழக்க நேர்ந்தது.
    அவ்வேளையில் அவர்களுக்கு வேறு பாத்திரங்கள் அல்லது
    வேறு பணிகள் ஒதுக்கப்படும்.

  • ஒழுக்கம், கட்டுப்பாடு


  • இவ்வகை நாடகக் குழுவின் மூலம் மேடையிலும், தனி
    வாழ்விலும் ஒழுக்கம், கட்டுப்பாடு இவை பெரிதும் பேணும்
    நிலை மேற்கொள்ளப்பட்டது.

  • சங்கரதாசுவாமிகளின் பணி


  • சங்கரதாசு சுவாமிகள் அமைத்துக் கொடுத்த இவ்வகை மேடை
    ஒழுக்கம், மேடைக் கட்டுப்பாடு போன்ற கூறுகள் தொடர்ந்து
    பெரும்பாலான தொழில் முறை     நாடகக் குழுக்களால்
    பேணப்பட்டன. குறிப்பாகப் பாலர் நாடகக் குழுக்கள் இவற்றை
    ஒரு வேள்வியாகவே கொண்டு செயல்பட்டன.

  • தண்டனை


  • புகை பிடித்தல் மற்றும் பிற போதைப் பொருட்கள்
    தவிர்க்கப்பட்டன. இதை மீறுவோர் குழுக்களிலிருந்து அப்புறப்
    படுத்தப்பட்டனர்.

    பார்வையாளர் மத்தியிலும் புகை மற்றும் போதைப்
    பொருட்கள் பயன்படுத்தும் நிலை தவிர்க்கப்பட்டது. மது
    அருந்துவோர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவர் என்ற
    அறிவிப்பு நாடக விளம்பரங்களிலேயே அச்சிட்டு வழங்கப்பட்டது.

    1.
    பாலர் நாடக சபை முறை ஏன் தோன்றியது?
    2.
    நிரந்தரக் குழு முறை என்றால் என்ன?
    3.
    மகரக் கட்டு என்றால் என்ன?
    4.
    தொழில் முறை நாடகக் குழுக்களில் இரண்டினைக்
    குறிப்பிடுக.
    5.
    பயின்முறை நாடக முறை எதைப் பின்பற்றி
    அமைந்திருந்தது?
    6.
    பயின்முறை நாடகக் குழுக்களில் இரண்டினைக்
    குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 16:10:49(இந்திய நேரம்)