Primary tabs
-
5.5 நாடகங்கள்
இக்கால கட்டத்தில் நாடகக் குழுக்களின் செம்மையான
செயல்பாட்டின் காரணமாகத் திட்டமிடப் பெற்ற நாடகங்கள்
மேடையேற்றம் கண்டன. புதிய நாடகங்கள் தொழில்முறை,
மற்றும் பயின்முறை நாடகக் குழுக்களுக்காக எழுதப் பெற்றன.
தொடக்கத்தில் தொழில் முறைக் குழுக்கள் சங்கரதாசு
சுவாமிகளின் நாடகங்களையே அதிகமாக மேடையேற்றின.
பயின்முறை நாடகக் குழுக்கள் தொடக்கத்தில் சம்பந்த
முதலியாரின் நாடகங்களை மேடையேற்றின.
5.5.1 புதிய நாடக ஆக்கம்காலம் செல்லச் செல்லக் குழுக்கள் ஒவ்வொன்றும் புதுப்புது
நாடகங்களைத் தங்களுக்கென ஆக்கிக் கொள்ளும் முயற்சியை
மேற்கொள்ளலாயின.
சான்றாக, தி.க. சண்முகம் சகோதரர்கள் தங்களது நாடகக்
குழுவுக்காக இராஜராஜசோழன், தமிழ்ச்செல்வம், வாழ்வில்
இன்பம், அப்பாவின் ஆசை, பலாப்பழம் போன்ற பல
நாடகங்களை எழுதச் செய்தனர். இதனால் பல புதிய
நாடகாசிரியர்கள் தமிழ் நாடக மேடைக்குக் கிடைத்தனர்.
தங்கள் குழுக்களுக்கென ஆக்கப்படும் நாடகங்களில்
திருத்தம் தேவைப்படின் உரிய ஆசிரியர்களைக் கொண்டே
அவை மேற்கொள்ளப் பெற்றன.
தொன்மம், சமுதாயம், நாட்டு விடுதலை, வரலாறு எனப்
பலவகைக் குழுக்களின் நாடகங்கள் வெளி வரலாயின. பல
நாடகக் குழுக்கள் தங்கள் நாடகப் படைப்புகளை அச்சில்
வெளியிட்டன. இவ்வகையில் தி.க. சண்முகம் சகோதரர்கள்
தங்களது பல நாடகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.
மனிதன், தமிழ்ச்செல்வம் போன்றவை குறிப்பிடத்தக்க
வெளியீடுகளாகும்.
5.5.2 கதையமைப்புஇக்காலகட்ட நாடகங்கள் புதுமையான கதையமைப்பில்
உருவாகி வந்தன. பேசும்படத்தின் வருகையும் இத்தகைய
மாற்றத்திற்குக் காரணமாயிற்று.
தொன்மங்களை நாடகமாக்கும் முயற்சியினின்று மாறிச்
சமுதாயம், நாட்டு விடுதலை இயக்கம், வரலாறு போன்றவற்றை
அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் தோற்றம் கண்டன.
- சீர்திருத்தக் கருத்துகள்
தேவதாசி எதிர்ப்பு, வரதட்சணை எதிர்ப்பு, சமுதாயச்
சீரழிவுகளைப் படம்பிடித்தல், மொழியின் மாண்பு உணர்த்தல்,
விடுதலை வேட்கைக்கு வித்திடல், நாட்டு வரலாறு, மன்னர்
வரலாறு, தியாகிகள் வரலாறு, வீரவரலாறு போற்றுதல் போன்ற
நிலைகளில் புதிய கதையமைப்புகளுடன் நாடகங்கள் படைக்கப்
பெற்றன.
சான்றாக, முள்ளில்ரோஜா (ப.நீலகண்டன்) தேவதாசி
முறையை எதிர்க்கத் துணிந்தது. இராசேந்திரா, இராசாம்பாள்
(கந்தசாமி முதலியார்) போன்றன சமுதாயச் சீர்திருத்த
நாடகங்களாக உருவாயின. தமிழ்ச்செல்வம் நாடகம் தமிழ்
மொழியின் பெருமை பேசியது.
இமயத்தில் நாம் (ரா.வெங்கடாசலம்) தேசபக்தர் சிதம்பரனார்
(சேலம் சித்தராசன்) போன்ற நாடகங்கள் விடுதலை வேட்கையை
ஊட்டி நின்றன. இராசராச சோழன் (அரு.இராமநாதன்) நாடகம்
மன்னர் வரலாறு போற்றியது.
ஆங்கில நாடகங்கள் மற்றும் வடமொழி நாடகங்களும்
தமிழில் தழுவலாகவும், மொழி மாற்றம் செய்யப் பெற்றும்
வழங்கப் பெற்றன.
5.5.3 கால அளவுநாடகம் நடக்கும் கால அளவில் மிகக் கூடுதலான கவனம்
செலுத்தப்பட்டது. விடிய விடிய நாடகம் நடந்த நிலை மாறி,
படிப்படியாக மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப் பெறும்
வண்ணம் நாடகங்கள் சுருக்கப் பெற்றன. பயின்முறை நாடகக்
குழுக்கள் கால வரையறையை மிகச் சரியாகக் கடைப்பிடித்தன.
5.5.4 பாடல்கள்நாடகங்களில் உரிய இடங்களில் பாடல்கள் இடம்பெற்று
வரலாயின.
தொடக்கக் காலத்தில் உரையும் பாடலும் சரி சமமாக இடம்
பெற்ற நிலையில் மாற்றம் ஏற்படலாயிற்று. தேவையான
இடங்களில் மட்டுமே கருத்துச் செறிவு மிக்க பாடல்கள்
பயன்படுத்தப் பெற்றன.
- பாடல்களின் பயன்
கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கான கருவியாகவும் பாடல்கள்
பயன்பட்டு வரலாயின. விடுதலை இயக்கக் காலத்தில் புராண
நாடகங்களில் கூட வெள்ளையர் எதிர்ப்புப் பாடல்கள் பாடப்
பெற்றன. இதை மக்களும் வெகுவாக ஏற்றுக் கொண்டனர்.
நாடகக் காட்சிகள் பாடல் மூலம் விளக்கிக் காட்டும் முயற்சியும்
மேற்கொள்ளப் பெற்றது. சான்றாகப் பின்வரும் பாடல்
காட்சியைப் பார்ப்போம்!
தேசபக்தர் சிதம்பரனார் நாடகத்தில் இடம் பெற்ற கப்பல்
கட்டும் காட்சியில்,
போகுதடா - கப்பல் போகுதடா
பொங்கியெழும் அலை கிழித்து
போட்டி போட்டு தமிழர் கப்பல்
சிங்களம் புட்பகம் சாவகமாகிய
தீவு பலவினும் சென்றேறி
எங்கள் மரக்கலம் வென்ற சரித்திரம்
இன்று திரும்பிடும் காட்சியடா.......என்ற பின்னணிப் பாடலுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றது.
காலம் செல்லச் செல்லப் பாடல்களின் எண்ணிக்கை
குறைக்கப் பெற்றது.
தமிழிசைப் பாடல்கள் பல நாடகங்களில் இடம்பெறலாயின.
பாரதியார் பாடல்களும் நாடகங்களில் பயன்படுத்தப் பெற்றன.
5.5.5 மறுமலர்ச்சிபொதுவாக இக்காலக் கட்டம், தமிழ் நாடக மேடைக்கு
மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். பார்வையாளர்
உள்ளிட்ட நிலையிலும் தமிழ் நாடக மேடை பல கொடைகளை
வரவாகப் பெற்றுக் கொண்டது. நல்ல கலைஞர்கள், நல்ல நாடகக்
குழுக்கள், நல்ல நாடகங்கள், நல்ல பார்வையாளர் எனப் பல
தரப்பட்ட நன்மைகள் தமிழ்நாடக மேடைக்கு கிடைக்கப்
பெற்றன. சான்றாக, பின்வரும் நன்மைகளைக் கொள்ளலாம்.
- நாடகத்திற்கு வரவேற்பு
சங்கரதாசு சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் செய்த
இடைவிடாத முயற்சியும், உழைப்பும் இக்காலக் கட்டத்தில் நல்ல
பலனைத் தந்தன. தமிழ் நாடகங்களுக்கு மக்களிடையே மிகுந்த
வரவேற்புக் காணப்பட்டது. ஒழுக்கம், கட்டுப்பாடு பேணப்பட்ட
மேடையில் நல்ல தரமான நாடகங்கள் தமிழ் மக்களுக்குக்
கொடையாகக் கிடைத்தன.
- நாடகக் கலைஞருக்கு மிகுந்த மரியாதை
நாடகக் கலைஞர்கள் நல்ல பண்புடனும், தியாக உணர்வுடனும்
உருப் பெற்றனர். நாட்டு விடுதலைக்காக அவர்கள் காட்டிய
ஆர்வமும் ஈடுபாடும் நடிகர்களுக்கும், மேடைக்கும் மிக்க
மரியாதையைப் பெற்றுத் தந்தன. நாடக மேடையில் சமுதாயப்
பொறுப்பு உணர்வு மேலிடத் தொடங்கியது.
- பழையன காத்தலும் புதியன புகுத்தலும்
தமிழ் நாடக மேடையில் தமிழகத்தின் மரபு போற்றும் பழைய
இலக்கியங்களும், தொன்மங்களும், வரலாறுகளும் நாடகமாக
அரங்கேறின. அதே போன்று மேனாட்டு நாடகங்களுக்கு ஈடு
கொடுக்கத்தக்க வகையில் புதிய நாடக முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டன. புதுவகை நாடக இலக்கியங்களும்
கிடைத்தன. சமுதாய மாற்றங்களும் ஏற்பட வழி பி்றந்தது.
- நல்ல பார்வையாளர்
பார்வையாளர் இன்றி நாடகம் இல்லை. தமிழ் நாடக
மேடையின் புது முயற்சிக்கு மக்கள் ஆதரவளித்தனர். நல்ல
நாடகங்களுக்கு நல்ல பார்வையாளர் கிடைக்கும் நிலை
உருவானது.