தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l2-2.2 முன்னவிலக்கு அணி

  • 2.2 முன்னவிலக்கு அணி
        தண்டியலங்காரத்தில் ஆறாவதாகக் கூறப்படும் அணி
    முன்னவிலக்கு அணி. முன்னம் என்பதற்குக் 'குறிப்பு' என்று
    பொருள். பாடலில் கவிஞர் ஒரு பொருளைக் குறிப்பாகப்
    புலப்படுத்தலாம்; குறிப்பாக விலக்குதலும் செய்யலாம்
    முன்னவிலக்கு அணி இவற்றுள் பின்னைய வகையைச் சார்ந்தது.
    2.2.1 முன்னவிலக்கு அணியின் இலக்கணம்
        ஒரு பொருளை (ஒரு கருத்தை அல்லது ஒரு
    செயலை)க் குறிப்பினால் விலக்கின் (மறுத்தால்) அது
    முன்னவிலக்கு என்னும் அணியாகும். அது இறந்த காலம்,
    நிகழ் காலம், எதிர் காலம் என்னும் மூன்று காலத்தோடும்
    தொடர்பு படலாம் அதாவது மூன்று காலப்பொருள்களும்
    மறுக்கப்படலாம்.

    குறிப்பினால் அல்லாமல் கூற்றினால் (வெளிப்படையாக) மறுப்பதும் முன்னவிலக்கு அணியேயாகும்.

    ''முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே மூவகைக் காலமும் மேவியது ஆகும்'' (தண்டி. 42)
    2.2.2 முன்னவிலக்கு அணியின் வகைகள்
        முன்னவிலக்கு அணி 'இறந்தவினை விலக்கு, நிகழ்வினை
    விலக்கு, எதிர்வினைவிலக்கு' என மூவகைப்படும் என்று
    தண்டியலங்கார உரை கூறுகிறது.
    . இறந்த வினை விலக்கு,
        இறந்த காலத்தில் நிகழ்ந்ததை மறுத்து விலக்குவது இறந்த
    வினை விலக்கு ஆகும்
    .

    எடுத்துக்காட்டு :

    பாலன் தனது உருவாய், ஏழ்உலகுஉண்டு,
    ஆல்இலையின்
    மேல் அன்று கண்துயின்றாய், மெய்என்பர்; -
    ஆல்அன்று
    வேலைநீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
    சோலைசூழ் குன்றுஎடுத்தாய் சொல்

    (குன்று - கோவர்த்தன மலை)

    இப்பாடலின் பொருள்

        'சோலை சூழ்ந்த குன்றத்தைக் குடையாகப் பிடித்த திருமாலே!
    நீ ஊழிக்காலத்தில் ஏழு உலகத்தையும் உண்டு, குழந்தை
    வடிவம் கொண்டு, ஆல் இலையில் துயின்றாய் என்று கூறப்படும்
    கூற்று உண்மை என்று கூறுவர். அவ்வாறாயின் நீ உறங்கிய ஆல்
    இலையானது அன்றைய நாளில் கடலின் உள்ளே இருந்ததோ?
    விண்ணுலகில்     இருந்ததோ? மண்ணுலகில் இருந்ததோ?
    சொல்லுவாயாக.'

    • அணிப் பொருத்தம்

        உலகம் முழுவதும் உண்ணப்பட்ட பின் ஆல் இலை ஒன்று
    மட்டும் தனியாக இருந்தது எனக் கூறுவது பொருந்தாது என்று
    அந்நிகழ்ச்சியைக் குறிப்பால் மறுத்துக்     கூறியமையால்
    முன்ன விலக்கு அணி ஆயிற்று. இறந்த காலத்தில் நிகழ்ந்த
    வினை (செயல்) ஒன்றைக் குறிப்பாக விலக்கியதனால்
    இறந்த வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று.

    இங்குத் திருமாலின் செயல் நம்பமுடியாதது என மறுக்கப்பட்டது
    போலத் தோன்றினாலும் புலவர் கருத்து அஃது அன்று; மறுப்பது
    போலச் சொல்லித் திருமால் எத்தகைய அற்புதமும்
    செய்யவல்லவர் எனக் குறிப்பதே நோக்கம்

    • நிகழ் வினை விலக்கு

        நிகழ்கால நிகழ்ச்சியை மறுத்து விலக்குவது நிகழ்வினை
    விலக்கு ஆகும்.

    எடுத்துக்காட்டு:
        
    மாதர் நுழைமருங்குல் நோவ, மணிக்குழைசேர்
    காதில் மிகைநீலம் கைபுனைவீர்! - மீது உலவும்
    நீள்நீல வாள்கண் நெடுங்கடையே செய்யாவோ?
    நாள்நீலம் செய்யும் நலம்


    (மாதர்-விருப்பம்; நுழை மருங்குல்-நுண்ணிய இடை;
    நீலம்
    - நீலமலர்; நலம் - அழகு)

    இப்பாடலின் பொருள்

        இப்பாடலில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிச்
    சொல்கிறான்: நுண்ணிய இடை வருந்துமாறு அழகிய குழை
    அணிந்த உம் காதின் மீது மிகையாக நீலமலரைச்
    செருகுகின்றீர்களே! அக் காதளவு சென்று உலாவுகின்ற நீண்ட
    நீல நிறத்தை உடைய உமது கண்களின் நெடிய கடையே நீல
    மலர்கள் தரும் அழகைத் தரும் அல்லவா!

    • அணிப் பொருத்தம்

        இப்பாடலில், காதளவு ஓடிய நீண்ட நீல விழியுடைய தலைவி
    தன் காதுகளில் நீல மலர் சூடுவது மிகை என்று அவ்வொப்பனை
    குறிப்பாக விலக்கப்படுதலின் இப்பாடல் முன்ன விலக்கு அணி
    ஆயிற்று. நிகழ்காலத்தில் நிகழ்கின்ற வினை (ஒப்பனைச் செயல்)
    ஒன்றைக் குறிப்பாக விலக்கியதனால் இது நிகழ் வினை விலக்கு
    என்னும் வகை ஆயிற்று


    • எதிர் வினை விலக்கு,
        எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வினை ஒன்றை மறுத்து
    விலக்குவது எதிர்வினை விலக்கு ஆகும்.

    எடுத்துக்காட்டு:

    முல்லைக் கொடிநடுங்க, மொய்காந்தள் கைகுலைப்ப,
    எல்லை இனவண்டு எழுந்து இரங்க, - மெல்லியல்மேல்
    தீவாய் நெடுவாடை வந்தால் செயல் அறியேன்
    போவாய், ஒழிவாய், பொருட்கு


    (மொய் = நெருங்கிய; இரங்க = ஒலிக்க)

    • இப்பாடலின் பொருள்

        பொருள்தேடப் பிரிந்து செல்லவிருக்கும் தலைவனிடம்
    தோழிகூறுகிறாள்: தலைவனே! முல்லைக்கொடி நடுங்கவும்,
    நெருங்கிய காந்தள் மலர்கள் கைகளைப் போலப் பூப்பவும், ஒளி
    பொருந்திய வண்டின் கூட்டம் எழுந்து ஒலிக்கவும், தீயின்
    தன்மையை உடைய நெடிய வாடைக் காற்றானது மெல்லிய
    இயல்பை உடைய தலைவியின் மேல் வந்தால் பின் விளையும்
    செய்தியைத் தோழியாகிய யான் அறியமாட்டேன். ஆதலின்,
    தலைவியைப் பிரிந்து பொருள் தேடுவதற்குப் போவதையோ,
    அவளைப் பிரியாது உடன் இருப்பதையோ உன் விருப்பப்படி
    செய்வாயாக.' தலைவன் பிரிந்து சென்றால் தலைவிக்குப் பெரும்
    தீங்கு நேரும் என்பது பொருள்.


    • அணிப் பொருத்தம்

    இப்பாடலில், எதிர்காலத்தில் தலைவனது பிரிவால் நிகழக்கூடிய
    தலைவியின் துன்ப நிகழ்வைக் கூறி, அவனது பிரிவைக்
    குறிப்பாக விலக்கியதால் இப்பாடல்
    எதிர் வினை விலக்கு
    என்னும் வகை ஆயிற்று.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1

    பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?

    2

    சொல் பின்வருநிலை அணி என்றால் என்ன?

    3

    பொருள் பின்வருநிலை அணி என்றால் என்ன?

    4

    சொல் பொருள் பின்வருநிலை அணிக்குத்
    திருக்குறள் ஒன்றைச் சான்று காட்டுக.

    5

    முன்னம் - இதன் பொருள் யாது?

    6

    முன்னவிலக்கு அணி என்றால் என்ன?

    7

    முன்னவிலக்கு அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:53:12(இந்திய நேரம்)