Primary tabs
-
1.1 நாடகம் - அறிமுகம்
முத்தமிழ் வடிவங்களில் நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். ‘நாடகம்’ என்ற தனிச்சொல்லைக் காலத்தால் முந்தைய தொல்காப்பியம் எனும் இலக்கணநூல் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இதை இச்சொல்லின் அறிமுகமாகவும் கருத இயலும்.
‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்’(தொல் : அகத் : 53)
மேற்குறிப்பிட்ட சூத்திரத்தில் ‘நாடகம்’ என்னும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இவ்வடிகளில் பயின்று வரும் நாடக வழக்கு எனும் சொல் அக்காலத்தைய நாடகக் கலை வடிவத்தின் மரபினை உணர்த்துகிறது.
- நாடக வழக்கு
நாடக வழக்கு என்பது உலகியல் வழக்கு என்னும் இயல்பு நிலைக்கு மாறானது. நாடக வழக்கு என்பது புனைந்துரை வகையைச் சார்ந்தது. உலகியல் வழக்கு என்பது உண்மை நிலையின் அடிப்படையில் அமைந்தது. இவற்றுள், நாடக வழக்கு என்பது சுவைபட வருவன எல்லாவற்றையும் ஓரிடத்து வந்ததாகத் தொகுத்து, கற்பனை கலந்து கூறும் முறையினைச் சுட்டுவதாகும்.
1.1.1 தொல்காப்பியர் காலத்து நாடகக்கலைநாடகம் குறித்த முதற் குறிப்பினைத் தந்து நிற்கும் தொல்காப்பியர். நாடக வடிவங்களைக் கூத்து, ஆடல் (ஆட்டம்) என்ற இருவகைகளில் அறியத் தருகிறார்.
வள்ளிக் கூத்து, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, வெறியாடல், காந்தள், அமலைக் கூத்து, துடிநிலை, சுழல் நிலைக் கூத்து, பிள்ளையாட்டு முதலியன தொல்காப்பியர் காலத்து நிகழ்த்துகலை (performing art) வடிவங்களாகும்.
மேலும், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நாடகச் சுவைகள் பற்றிய குறிப்புகளையும் தருகின்றது.‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’(தொல் : மெய்ப் : 27)
என்னும் தொல்காப்பியச் சூத்திரம் நாடகத்தைச் சுவைப்பதற்கான அடிப்படையாக விளங்குபவை கண்களும், செவிகளுமே என்கிறது. ஆம்... ! நாடகம் மட்டுமே கண்ணால் காண்பதற்கும், காதால் கேட்பதற்குமான காட்சிக் கலையாக விளங்குகிறது. இக்குறிப்பானது நாடகச் சுவைஞர் அல்லது பார்வையாளர் நோக்கில் மிக முக்கியமான செய்தியாகும்.
மேற்குறிப்பிடப்பெற்றுள்ள செய்திகள் வழி, தொல்காப்பியர் காலத்தில் நாடகக்கலை செம்மையுற்று விளங்கிய நிலையை அறிய முடிகின்றது.1.1.2 சங்ககாலத்து நாடகக் கலைசங்ககால இலக்கியங்கள் நாடகம் குறித்த பல செய்திகளைத் தருகின்றன. இவ்வகைச் செய்திகள் தமிழ் நாடக வரலாற்றின் தொடக்க நிலைச் செய்திகளுக்கான தெளிவான சான்றாதாரங்களாகவும் அமைந்துள்ளன. எனவே இக்காலக்கட்டம் மிக முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது. இவற்றை நாம் அறிவதற்கு உதவுவனவாகப் பல இலக்கியங்களும் அவற்றிற்கான உரையாசிரியர் குறிப்புக்களும் காணக் கிடைக்கின்றன.
- இலக்கியங்கள்
நாடகத்துக்கான செய்திக்களஞ்சியமாக விளங்குகின்ற சங்க இலக்கியங்கள் எவை என நாம் முதலில் அறிவோம். பத்துப்பாட்டு, அகநானுறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை போன்றனவே குறிப்பிடத்தக்க சங்க இலக்கிய நூல்களாகும்.
சங்கம் மருவிய காலக்கட்ட இலக்கியங்களாக, திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் நாடகம் தொடர்பான செய்திகளைத் தருகின்றன.
- நாடக நூல்கள்
தமிழ் நாடகம் குறித்தும் தமிழ் இசை குறித்தும் பல அரிய நூல்கள் தமிழுக்குக் கிடைத்தும் அவை பாதுகாக்கப்படாமையால் அழிந்து போயின. சில சிதைந்த நிலையில் காணக் கிடைக்கின்றன. எனினும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து கிடைக்கப்பெறும் குறிப்புகள் இவ்வகை நூல்கள் குறித்து எடுத்துரைக்கின்றன. அவை அகத்தியம், இசை நுணுக்கம், இந்திர காளியம், குணநூல், கூத்த நூல், சயந்தம், சிற்றிசை, செயன்முறை, செயிற்றியம், தாளவகையோத்து, பஞ்ச மரபு, பரதம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, மதிவாணர் நாடகத்தமிழ் நூல், முறுவல், மோதிரப்பாட்டு, வஞ்சிப்பாட்டு, விளக்கத்தார் கூத்து போன்றன குறிப்பிடத்தக்க இசை, நாடக நூல்களாகும்.