Primary tabs
-
1.3 ஆடுகளங்கள்
கலை நிகழ்த்துதற்கான அமைவிடமே ஆடுகளம் எனப்படுகிறது. கலைஞர்கள் மற்றும் பார்வையாளர் படைத்தற்கும், பார்த்து இன்புறுதற்கும் உரிய கலையின் படைப்பிடம் இதுவே ஆகும். ஆடுகளம் என்பதனை அவை, அரங்கு என, வளர்ச்சி நிலையில் பெயரிட்டழைப்பர்.
1.3.1 களம்சங்க கால இலக்கியங்கள், நடத்துகலைகளுக்கான படைப்பு இடத்தினைக் ‘களம்’ எனற நிலையில் ஆடுகளம் என்றே பெரும்பாலும் பெயரிட்டு அழைக்கின்றன. விழாக்காலங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும், அறுவடைக்காலங்களிலும் மக்கள் ஆடிப்பாடியதால் இயற்கையாக அமைந்த திறந்த வெளிப்பரப்புக்களே ஆடுகளங்களாக அமைந்தன.
புய்த் தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மக நாட்டையே(புறநானூறு : 28)
(புய்த்தெறி = பிடுங்கியெறியும்; பூம்போது = பொலிந்த பூ; கடுக்கும் = ஒக்கும்)
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள் ஆடுகளம் குறித்த செய்தியினைத் தருகின்றன. கூத்து மற்றும் ஆடல் வடிவக் கலைகளுக்கு ‘ஆடுகளம்’ பொதுவானதாக அமைந்தது. மேலும்,‘நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன்னியம் கடுப்ப’(பெரும் : 55-56)
என்னும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்அடியும் ‘ஆடுகளம்’ குறித்த செய்தியைத் தெளிவுபடுத்துகின்றது.
‘நாடக மகளிர் ஆடுகளத்து...’ என்னும் பாடல்அடி, கூத்துக்கலையும் ஆட்டக்கலையும் ஆடுகளத்தில் நடைபெறத்தக்கவை என்பதைப் புலப்படுத்துகின்றது.
அரங்கினைக், ‘களம்’ என்ற சொல்லால் குறிப்பிடும் நிலையால் அது ஒரு திறந்த வெளிப் பரப்பாகவே அமைந்திருந்த நிலையும் அறிய முடிகின்றது. இவ்வகையில் மணற்பரப்பு, ஆற்றுப்படுகை, வயல்வெளி, குன்றின் மேற்பகுதி போன்றன ஆடுகளங்களாக அமைந்தன எனலாம்.1.3.2 கூத்தாட்டவைஆடுகளத்தினின்றும் மேம்பட்டதோர் நாடகக் களத்தினைத் திருவள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்கிறார். பரந்த வெளியில் அமைந்த ஆடுகளத்தினின்று மாறுபட்ட வடிவமான ‘கூத்தாட்டவை’ என்னும் வடிவம் பற்றிய செய்தியே அது.
கூத்தாட்டவைக் குழாஅத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று(திருக்குறள் : 332)
என்று குறிப்பிடுகிறது குறள்.
திருவள்ளுவர் குறிப்பிடும் ‘கூத்தாட்டவை’ எனும் வடிவமானது சுற்றிலும் அடைக்கப்பெற்ற அவை எனக் கொள்ளமுடிகிறது. இது திறந்த வெளியிலிருந்து முன்னேறிய நாடக அரங்கின் வடிவத்திற்கான மாற்றத்தை உறுதி செய்கிறது. மேலும் ‘கூத்தாட்டவை’ எனப்படும் வடிவமானது அடைப்பரங்கினை (அடைப்பு அரங்கு என்பது, நான்கு புறங்களில் மூன்று புறமும் சுற்றிலும் அடைக்கப்பெற்ற நிலையில் உள்ள அரங்கு ஆகும்) ஒத்த வடிவமாக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.1.3.3 அரங்குசிலப்பதிகாரம் முதன் முறையாக நாடகக் கலையின் வடிவங்கள் தேர்ந்த அரங்கினுள் நடத்தப்பெற்ற நிலையை எடுத்துக் காட்டுகிறது.
‘பொதுவியல்’ எனப்படும் பொதுமக்களுக்கென நடத்தப்படும் கலைகள் ஆடுகளம், பாடுகளம் எனத் திறந்த வெளியில் நடத்தப் பெற்றன. மன்னருக்கெனத் தனியாக நடத்தப்படும் கலைகள் வேத்தியல் எனப்பட்டன; அவை ‘அரங்கு’ எனப்படும் அடைப்பரங்கில் நடத்தப் பெற்றன.
‘பொதுவியல்’ தன்மையிலான நாடகக் கலை வடிவங்கள் நடத்தப் பெற்ற செய்தியினைப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் அடி தெரியப்படுத்துகிறது.
கடலாடு காதையில் இடம் பெறும்,‘ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்’(க . கா : 158)
என்னும் பாடல் அடி பொதுமக்கள் பங்குபெற்ற ‘களங்கள்‘ பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால், அரங்கேற்று காதையில் இடம் பெறும்,
‘வலக்கால் வைத்தேறி அரங்கத்து’(அர : கா : 131)
என்னும் பாடல் அடி, வேந்தர்கள் பங்கு பெறும் ‘வேத்தியல்’ தன்மையிலான அடைப்பு அரங்கு குறித்த செய்தியினைத் தந்து நிற்கிறது.
- அரங்கின் இடம்
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அரங்கு குறித்த இன்றியமையாத செய்திகளை விரிவாகத் தருகிறார்.நாடிய அரங்கு சமைக்குங் காலைஎனத் தொடங்கி விளக்குகிறார்.
அவர் கூறுவதாவது:
“குற்றமற்ற நிலமே அரங்கம் அமையுமிடமாகத் தேர்வு செய்யப் பெறுதல் வேண்டும். தெய்வத்தானமும் பள்ளியும், அந்தணர் இருக்கையும், கிணறும் குளனும், சோலையும் முதலாயின அழியாத இயல்பினையுடைத்தாய்; நிறுக்கப்பட்ட குழிப்புழுதி. தோண்டியெடுத்த, மண் நறுமணமும் சுவையும் உடையதாய் தானும் கெட்டியாய் என்பும் உமியும் பரலும் சேர்ந்த நிலம்; களர்நிலம், உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பல் தரைஇல்லாத இடம் என்று சொல்லப்பட்டன ஒழிந்து, ஊரின் நடுவிலுள்ள இடம் தேரோடும் வீதிகள் எதிர்முகமாக இருத்தல் முதலியன நாடக அரங்கத்திற்குரியதென ஆய்ந்து தேர்வு செய்தல் வேண்டும்”.
(களர் = வறண்ட; உவர் = உப்புக் கலந்த; ஈளை = ஈரம் கலந்த)
- அரங்கின் அமைப்பு
அரங்கானது ஏழுகோல் அகலமும், எண்கோல் நீளமும் ஒரு கோல் குறட்டுயரமும் உடையதாக இருத்தல் வேண்டும். (ஒரு கோலென்பது உத்தமன் கைப் பெருவிரல் 24 கொண்ட மூங்கில் கோல். 8 அணு - 1 தேர்த்து; 8 தேர்த்து - 1 இம்மி; 8 இம்மி - 1 எள்ளு; 8 எள்ளு - 1 நெல்லு; 8 நெல்லு - 1 பெருவிரல் ஆகும். (இன்றைய அளவு நிலையில் 28” 32” 4’)
அரங்கப் பலகைக்கும் உத்தரப் பலகைக்கும் இடையே உயரம் 4 கோல் (அல்லது 16 அடி) அரங்கிற்குச் செல்வாயில், வருவாயில் என இரு வாயில்கள் அமைந்திருத்தல் வேண்டும். அரங்கத்தூணின் நிழல் விழாதபடி நிலை விளக்கு ஏற்றப்படுதல் வேண்டும்.
- திரைகள்
ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி என 3 வகைக் காட்சித் திரைகள் தொங்கவிடப்பட வேண்டும்.
ஒருமுக எழினி எனப்படுவது ஒரு பக்கத்தினி்ன்று மறுபக்கமாக விலகிச் செல்லும் திரையாகும். பொருமுக எழினி எனப்படுவது இருபக்கத்திலிருந்தும் வந்து நடுவே பொருந்தியும் இருபக்கமாய்ப் பிரிந்தும் செல்லக் கூடிய திரையாகும். கரந்து வரல் எழினி எனப்படுவது மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மலோகவும் செல்லும் திரையாகும்.
மேற்குறிப்பிட்ட திரையின் மேம்பட்ட திரை வடிவமாக ‘எந்திர எழினி’ என்னும் திரையைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.