தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.0 பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

        இயல், இசை, நாடகம் என்ற முக்கூறுகளைக் கொண்டு தமிழ்மொழி அமைந்துள்ளது. கால வெள்ளத்தால் இசை நாடகம் பற்றிய இலக்கிய இலக்கணங்கள் பலவற்றை இழந்தோம். இருப்பினும் கிடைக்கும் நூற்கள் வாயிலாக இவ்விரு துறைகளிலும் நம் மொழி கொண்டிருக்கும் சிறப்பு நிலைகளை அறியலாம்.

        தொன்மைக்காலத்தில் கூத்து என்ற சொல்லே நாடகத்தைக் குறித்தது. தனிப்பாடல்களுக்கு அவிநயம் (அபிநயம்) காட்டுவதை நாட்டியம் என்றும், கதையைத் தழுவி வேடமிட்டு ஆடுவதை நாடகம் என்றும் கூறிவந்தனர். இவ்விரண்டும் இணைந்து நாட்டிய நாடகமாயிற்று. இது ஒரு புதுமையான துறையல்ல. பண்டைய கூத்துகளே இன்று நாட்டிய நாடகங்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. கூத்தர், விறலி என்ற கலைஞர்கள் வாழ்ந்தனர். கூத்தராற்றுப்படை என்ற நூல் பத்துப்பாட்டில் ஒன்றாக விளங்குகிறது. ஆடல் வல்லானைக் கூத்தன் என்று அழைக்கிறோம். இக்கலை இறைவழிபாட்டோடு இணைத்துப் போற்றப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கண நூலிலும், சங்க இலக்கியங்களிலும் இக்கலை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இரட்டைக் காப்பியங்களான சிலம்பும், மேகலையும்     இக்கலையைச் சிறப்பித்துள்ளன.

        நாட்டிய நாடகங்கள் இன்றும் பெருவழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன. பாடுபொருள்கள் அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் இவை வகைப்படுத்தப்பட்டு வருகின்றன.

        நாட்டிய நாடகங்கள் இசை வளமும், ஆடல் வளமும், நாடக உத்திமுறைகளையும் கொண்டுள்ளன. நாட்டிய நாடகங்களில் பாத்திர அறிமுகம், ஒப்பனைகள், ஆடை அணிகலன்களும் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

        பல்பொருள் கொள்கலனாக விளங்கும் நாட்டிய நாடகங்கள் பற்றி இப்பாடம் விளக்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:44:01(இந்திய நேரம்)