தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.7 தொகுப்புரை

  • 5.7 தொகுப்புரை

        கூத்துகள் தாம் பெற்று வந்த சிறப்பைத் திரைப்படங்கள் தோன்றியதும் இழந்தன. திரைப்படங்கள் பெற்று வந்த சிறப்புகளை சின்னத்திரை வலுவிழக்கச் செய்து வருகின்றது. ஆயினும் தார்வின் என்ற அறிவியல் அறிஞர் கூறுவது போல் ஆற்றல் உள்ளது வாழும் என்ற நிலையில் திரைப்படங்களையும் சின்னத் திரையையும் மீறி நாட்டிய நாடகங்கள் ஆங்காங்கே போற்றப்பட்டு வருகின்றன. பண்டைய கூத்துகள் இன்று தம் பெயர் நிலையில் மாறி நாட்டிய நாடகங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பாடுபொருள்களில் இன்றும் வாழ்ந்து வந்தாலும் பக்தி நெறிக்குட்பட்ட நாட்டிய நாடகங்களே மிகுதியாகப் போற்றப்படுகின்றன. இறை வழிபாட்டு நெறியாளர்களே இதனை மிகவும் வளர்த்து வருகின்றனர்.

        இயல், இசை, நாடகம், நாட்டியம், ஒப்பனை, மேடை அலங்காரம் என்ற நிலைகளைக் கொண்ட கலையாக இது விளங்குகின்றது. தனி நடனத்தைப் பார்ப்பதைவிட நாட்டிய நாடகம் பார்ப்பதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் இதனை அமைப்பது மிகவும் கடினமான செய்கையாக விளங்கி வருகின்றது. ஆடலாசானே இயக்குனராக விளங்குகின்றார். கடுமையான உழைப்பும், மிகுந்த பொருட் செலவும் ஆகும். அந்த அளவிற்கு வருவாய் இல்லை. இருப்பினும் ஒரு சில ஆடலாசான்கள் இதனை இன்றும் போற்றி வருகின்றனர். மிகப்பழமையான இக்கலை நமது பண்பாட்டுச் சொத்தாகும். இக்கலையைப் போற்ற வேண்டியது நமது கடமையாகும்.

        நாட்டிய நாடகங்களில் அதிகமாக மேடையேறிய நாட்டிய நாடகமாகக் குறவஞ்சி திகழ்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குறவஞ்சிப் படைப்புகள் தமிழில் உள்ளன. அது நாட்டுப்புறமும் செவ்வியலழகும் கலந்து விளங்கும் கலையாகும். மக்களின் நம்பிக்கை அடிப்படையில் குறி சொல்லுதலைக் குறியாகக் கொண்டு     பாட்டுடைத்     தலைவனை     வாழ்த்திப்பாடும் இலக்கியமாகும்.

        செவ்வியல் ஆடல்களிலும் குறத்தி ஆட்டமாக இது விளங்குகிறது. மக்களைப் பெரிதும் ஈர்த்து, கலைஞர்களை மகிழ்வித்து, படைப்போர்களின் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றித் தரும் வடிவமாகும்.

        சங்ககாலம் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் குறவஞ்சி, குறமாகவும்,     குளுவமாகவும்     வளர்ந்தாலும் குறவஞ்சி இலக்கியங்களே பெரும்பாலும் மேடைக்குரிய நாட்டிய நாடகங்களாக விளங்குகின்றன.

        முத்தமிழும் நல்நடையும் பொருந்தி அகப்பொருள் அமைதியோடு அமைந்த இலக்கியமான குறவஞ்சி தமிழர் தம் மொழி உணர்விற்கும், கலை உணர்விற்கும் உரிய நாட்டிய நாடகமாகத் திகழ்கிறது.

    1.
    வடிவ அடிப்படையில் அமையும் நாட்டிய நாடகங்களில் சிலவற்றினைக் கூறுக.
    2.
    சரபேந்திர பூபாலக் குறவஞ்சியின் அமைப்பைக் கூறுக.
    3.
    குறவஞ்சி நாட்டிய நாடகங்களில் செவ்வியல நாட்டுபுற ஆடல்களின் நிலை பற்றிக் கூறுக.
    4.
    குறவஞ்சி நாட்டிய நாடக மேடையில் அமையும் இசைக் குழுவினர் பற்றிக் கூறுக.
    5.
    அரையர் சேவை என்றால் என்ன?
    6.
    அரையர் சேவை தற்போது நடைபெற்றுவரும் இடங்களில் இரண்டினைக் குறிப்பிடுக.
    7.
    இசை நாடகத்தை ஆங்கிலத்தில் எப்பெயரால் அழைப்பர்?
    8.
    யட்சகான நூல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
    9.
    நாட்டிய நாடகங்களில் பயன்படுத்தப்படும் செவ்வியல் ஆடல்கள் பற்றிக் கூறுக.
    10.
    இராம நாடகக் கீர்த்தனையில் அமைந்துள்ள இசைப்பகுதிகள் பற்றிக் கூறுக.
    11.
    ஒப்பனைகளே பாத்திரப்பண்புகளை விளக்கிக் காட்டும் என்பதனை நிறுவுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:44:23(இந்திய நேரம்)