தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.3

  • 5.3 பாடுபொருள் அடிப்படையிலான வகைகள்

        நாட்டிய நாடகங்களையும் வகைமை அடிப்படையில் வகைப்படுத்தலாம். நாட்டிய நாடகங்களைப் பாடுபொருள் அடிப்படையிலும், வடிவ நிலையிலும் வகைப்படுத்தலாம். இவ்வாறு     வகைப்படுத்தப்படும் பொழுது இவைகளின் உள்ளீடுகளையும், இவற்றிடையே காணப்படும் சிறப்பு நிலைகளையும், பொது அமைப்புகளையும் உணர முடியும். இவ்வகை வகைமை ஆய்வால் நாட்டிய நாடகங்களை இனம் பிரித்து அறிய முடியும். நாட்டிய நாடகங்கள் பரந்த பரப்பிற்குட்பட்டன. இவற்றை ஒரு நிலைக்குள் கொண்டு வர இத்தகு ஆய்வுகள் தேவைப்படுகின்றன. முதலில் பாடுபொருள் வடிவ அடிப்படையில் நாட்டிய நாடகங்களைக் காண்போம்.

    • பாடுபொருள்

         பாடுபொருள் என்பது உள்ளீட்டைக் குறிக்கும். இதனைக் கருத்து என்றும் அழைப்பர். கதைபொதி இலக்கியங்கள் ஒரு சிறப்பான கருத்தை வெளிப்படுத்தவே படைக்கப்படுகின்றன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருள்களின் அடிப்படையிலும், அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற உண்மைப் பொருள் அடிப்படையிலும், மனித குலம் மேம்பட, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளின் அடிப்படையிலும், வாழ்பவனுக்கும், வாழ வேண்டியவனுக்கும் வழிகாட்டும்     அடிப்படையிலும் அந்த இலக்கியங்கள் அமைகின்றன.     தத்தம்     சமயக்     கருத்துகளை வெளிப்படுத்துகின்றன; தாம் வழிபடும் தெய்வம் பற்றிய செய்திகளையும்,     சமயப்     பெரியோர்கள்     பற்றிய வரலாறுகளையும் கூறுகின்றன.

    5.3.1 இதிகாசம்

         ஆதி கவி என்று போற்றப்படும் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயணமும், வியாசரின் பாரதமும் இந்திய இதிகாசங்களாகப்     போற்றப்படுகின்றன.     வான்மீகியின் இராமாயணத்தை மொழி பெயர்த்தும், தழுவியும், ஒரு சில நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகங்கள் பல தோற்றம் பெற்றன.

         கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம் எழுதிய திருமுடி சூடிய திருவடி என்ற நாட்டிய நாடகம் இராமனின் பாதுகைகளைப் பெற்று வந்த பரதனுடைய நிலையை விளக்குகின்றது. இதுகுறித்து இந்நாட்டிய நாடக ஆசிரியர் குறிப்பிடும் பொழுது நாடறிந்த இராமகாதையின் பின்னணியில் தீட்டப் பெற்றது என்கிறார். இதைப்போல சீதா கல்யாணம், வாலி மோட்சம், சுந்தர காண்டம் போன்ற நாட்டிய நாடகங்கள்     படைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன. கலைக்கோட்டு மாமுனிவர் வரலாறு, இராம இலக்குவர் வேள்வி காத்தல், பரசுராமர் வரலாறு, இரணிய வதை, சடாயு மோட்சம், இராமர் பட்டாபிடேகம் போன்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன.

         சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனையை நாட்டிய நாடகமாக ஆடி வருகின்றனர். இதில் நாடகப் பாத்திரங்களின் கூற்றுகள் உள்ள பகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர் தொடக்கப் பகுதியாகிய தோடயம் இடம் பெற்றுள்ளது.

         தோடயம் தொடங்கிய பின்பு வசனத்துடன் அமையும் கட்டியம் இடம் பெறும். இதனைத் தொடர்ந்து நாட்டிய நாடகம் நடைபெறும்.

         பாரதக் கதையை மையமாகக் கொண்டு நாட்டிய நாடகங்கள் பல உள. திரௌபதி திருமணம், பாஞ்சாலி, பீஷ்மர் மோட்சம், சுர்ண மோட்சம், கீதை உரைத்த கண்ணன், சுபத்திரா திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரதத்தில் கிளைக் கதைகள் மிகுதி. இக்கிளைக் கதைகள் மையமிட்ட நாட்டிய நாடகங்கள் பல தோற்றம் பெற்றன. அரக்கு மாளிகை நாட்டிய நாடகம், அரவான் களபலி, அருச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, தருமபுத்திர நாடகம், நளவிலாசம், விதுரன் குறம், துரோபதை குறம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

    5.3.2 புராணங்கள்

         இதிகாசங்களைப் போல மக்களால் பெரிதும் போற்றப்பட்ட புராணங்களின் அடிப்படையிலும் நாட்டிய நாடகங்கள் தோற்றம் பெற்றன. இந்திய நாகரிகத்தின் கருவூலமாகப் புராணங்கள் விளங்குகின்றன. பழமையான வரலாறுகள், செய்திகள், சமயக் கதைகள், சமயச் சடங்குகள் போன்றன இதில் இடம் பெறுகின்றன. பழமையான புராணங்கள் 18 என்று கூறுவர். இவை வைணவம் தொடர்பானவைகளாகவும், சைவம் தொடர்பானவைகளாகவும் உள்ளன. இவையல்லாமல், திருத்தொண்டர் புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்ற சைவப் புராணங்களை மையமாகக் கொண்டும் நாட்டிய நாடகங்கள் உள்ளன.

    • சைவம்

         சைவம் தொடர்பான புராணங்களில் திருவிளையாடற் புராணக் கதைகளும், பெரியபுராணத்தில் வரும் நாயன்மார் கதைகளும், கந்தபுராணத்தில் வரும் தெய்வானை, வள்ளித் திருமணங்களை மையமாகக் கொண்ட கதைகளும் நாட்டிய நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றன.

         திருச்சி பாரதன் எழுதிய கந்தன் காவியம் என்ற நாட்டிய நாடகத்தை, திருச்சி கலைமாமணி, ரேவதி முத்துசாமி குழுவினர் சுமார் 600 மேடைகளில் நிகழ்த்தியுள்ளனர். சென்னை இராசகணேசன் குழுவினரால் ஞானப்பழம் என்ற நாட்டிய     நாடகம் நடத்தப்பட்டுள்ளது. திருமதி சித்ரா விசுவேசுவரனின் நாட்டியப் பள்ளியினரால் பெரியபுராண நாயன்மார்களுள் ஒருவரான திருநீலகண்டரின் வாழ்க்கை நாட்டிய நாடகமாகப் படைக்கப்பட்டுள்ளது.

    • வைணவம்

         வைணவம் தொடர்பான நாட்டிய நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திருமாலின் அவதாரச் சிறப்பினை விளக்கும் வகையிலும் நாட்டிய நாடகங்கள் படைக்கப்பட்டு வருகின்றனர்.

         சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற நாட்டிய நாடகம் ஆண்டாளின் வரலாற்றை மையமாகக் கொண்டது. இதில் ஆண்டாள் தன் தோழியருடன் பந்தடித்து விளையாடுகிறாள். தோழியருடன் விளையாடினாலும், அவள் மனம் அரங்கன் மீதே நிலைத்திருந்தது என்ற நிலையில் படைக்கப்பட்டுள்ளது.

         திருவரங்கம் அரங்கன் மீது காதல் கொண்ட துலுக்க நாச்சியார் வரலாற்றை மையமாகக் கொண்ட துலுக்க நாச்சியார் நாட்டிய நாடகமும், கிருட்டிண அவதாரத்தை மையமாகக் கொண்டு கோகுலத்துக் கண்ணன், ருக்மணி கல்யாணம், சுபத்ரா கல்யாணம் போன்ற நாட்டிய நாடகங்களும், வைணவ அடியார்களின் வாழ்க்கையை ஒட்டித் திருமங்கையாழ்வார்,     தொண்டரடிப்பொடியாழ்வார், புரந்தரதாசர், வேதாந்த தேசிகர் முதலிய நாட்டிய நாடகங்களும் படைக்கப் பட்டுள்ளன.

    5.3.3 வரலாறும் சமுதாயமும்

         வரலாற்றின் அடிப்படையிலும் சமுதாயப் பிரச்சனைகள் அடிப்படையிலும் நாட்டிய நாடகங்கள் உள்ளன.

    • வரலாறு

         தமிழக வரலாற்றின் சில சிறப்பு நிலைகளை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகங்கள் தோன்றியுள்ளன. சங்ககால மன்னர்களை மையமாகக் கொண்ட ஒளவையார் அதியன் நட்பு, ஆதிமந்தி, ஆட்டனத்தி, கடையெழு வள்ளல்களான பாரி, பேகன், ஓரி, காரி, ஆய் அண்டிரன் போன்றோரின் வரலாறுகளை மையமாகக் கொண்டு நாட்டிய நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன.

         தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் சார்பில் ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று விலாசம் என்ற பெயரிலும் இரண்டு நாடகங்கள்என்ற பெயரிலும் உள்ளன.

    1. பூலோக தேவேந்திர விலாசம்
    2. சந்திரிகா ஆசை விலாசம்
    3. விசுணு சாக ராச விலாசம்
    4. சகசி குறவஞ்சி
    5. காவேரி கல்யாணம்

    இவை தஞ்சை மராட்டிய மன்னர் சகசியின் காலத்தில் (கி.பி. 1684-1712-இல்)     தோன்றின.     தஞ்சையிலும், திருவையாற்றிலும் இந்நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    • சமுதாயம்

         சமுதாயத்தின் தேவைகளையும், சமுதாய முன்னேற்ற நிலைகளையும் மையமாகக் கொண்ட நாட்டிய நாடகங்கள் தோன்றி     வருகின்றன.     அனிதா ரத்தினம் என்பவர் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் நிலையில் ஒரு நாடகத்தைப் படைத்துள்ளார். சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, பசுமைப் புரட்சி, மக்களாட்சி மகத்துவம் போன்ற நிலைகளை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகங்கள் படைக்கப்பட்டு் வருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:44:11(இந்திய நேரம்)