தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library

பதிப்புரை

தமிழணங்கின் தனிமுதற்றோற்றத்தையும் என்றும் மாறா இளமைவீறையும், எழில்வடிவினையும் மக்கள் மனக்கண்முன் விளங்கக் காட்டும் ஆடியெனச் சிறந்து பொலிவது தொல்காப்பியம் என்னும் ஒப்புயர்வற்ற செந்தமிழ் நூலே ஆகும்.

இந்நூல் எழுத்து சொல் பொருள் என மூவகைத்தாய்த் தமிழின் இயலினைத் தெரிக்கின்றது, இந்நூலின் முதன்மையும்  சிறப்பும் நோக்கி இதற்குப் பலத் உரை எழுதியுள்ளனர். எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையும், சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையும், பொருளதிகாரத்தின் இறுதி நான்கியல்கட்குப் பேராசிரியர் உரையும் பெருவழக்காகப் பயிலப்பட்டு வருகின்றன.

ஆயினும், ஓருரையைப்பயில்வார் மற்றையோர் உரையையும் ஒப்பு நோக்கிப் பார்த்தல் உண்மையாராய்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் துணைசெய்வதாகலின் எம்மால் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பட்டதோடு, அதன் இறுதியில் நச்சினார்க்கினியர், இளம்பூரணரோடு கருத்து மாறுகொண்ட இடங்கள், நூற்பாக்களோடும் அவரவர் உரைகளோடும் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

இம்முறையில், அதற்கடுத்த சொல்லதிகாரமாகிய இதையும் சேனாவரையர் உரையுடன் பதிப்பித்ததோடு, விளக்கம் பெறவேண்டிய இடங்கட்குத் தக்க ஆராய்ச்சிக் குறிப்புக்களும் பிறவாசிரியர் கோட்பாடுகளும் தெள்ளிதின் விளங்குமாறு அடிக் குறிப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கின்ன. இவற்றை எழுதியுதவிய வித்துவான் ஞா. தேவநேயப்பாவாணர், எம், ஏ., அவர்கட்கு எம் நன்றி உரித்தாகுக.

தமிழ்மொழியின் நல்லியிலினை மக்கள் உள்ளத்தில் தெள்ளுறத் தெரிப்பச் செவ்விய சிறப்புடன் வெளிவரும் இந்நூலைத் தமிழுலகம் ஏற்றுப் பயனெய்துமாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 15:21:56(இந்திய நேரம்)