Primary tabs
தோன்றுங் காதன்முதலிய சுவைத் தோற்றத்தை (அஃதாவது சுவையின் முளையை) ஸ்தாயிபாவம் (நிலையான மனக்கருத்து) என்றும், அச் சுவைத்தோற்றத்திற்குக் காரணமான பொருளை விபாவம் என்றும், அச் சுவைத்தோற்றத்தை வெளியே வெளிப்படுத்தும் உள்ளநிகழ்ச்சியை (க் குறிப்பை) அநுபாவம் என்றும், அச் சுவைத்தோற்றத்தின் விரிவாய் உடம்பின்வழியாக வெளிப்படும் மனவிகாரங்களை (விறலை)ச் சாத்துவிகபாவம் என்றும், அதன் வளர்வுக்குக் காரணமாய் அதனை நிறைவுபடுத்தி நிற்பனவற்றை (துணைமெய்ப்பாட்டை)ச் சஞ்சாரிபாவம் என்றும், அச் சுவைத் தோற்றமானது வளர்ந்து அவனாலே சுவைக்கப்படுதலினாலே, சுவையை இரசம் என்றுங் கூறுவர். எனவே ஒருவனிடத்துச் சுவைத்தோற்றமானது விபாவங்களாற் றோன்றி அநுபாவங்களான் வளர்ந்து சஞ்சாரிபாவங்களாற் புஷ்டியடைந்து அவனாற் சுவைக்கப்படுதலினாலே சுவைஆகின்றது என்றபடி. ஸ்தாயிபாவம் எனப்படும் சுவைத் தோற்றம் (சுவைமுளை)ஒன்பது வகைப்படும். அவையாவன: காதல், சிரிப்பு, துன்பம், கோபம், எழுச்சி(முயற்சி), பயம், அருவருப்பு, ஆச்சரியம், அடக்கம் என்பன. காதலன்றி உவப்பும் உவகைக்கு ஏதுவாம். இவை ஒருவனுள்ளத்திற்றோன்றியபோது, நிலையாய்த் தடைப்படாமல் வளர்ந்து பால் தயிரானாற் போலச் சுவையாக மாற்றமடைகின்றன. சுவையும் ஒன்பது வகைப்படும். அவையாவன: உவகை (சிருங்காரம்), நகை (ஹாஸ்யம்), அவலம் (கருணை), வெகுளி (உருத்திரம்), பெருமிதம் (வீரம்), அச்சம் (பயானகம்), இளிவரல் (பீபற்சம்), மருட்கை (அற்புதம்), நடுநிலை (சாந்தம்) என்பன. இவற்றுள், சாந்தம் உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் அஃதொன்று மொழித்து ஏனைய எட்டுமே நூல்களாற் கூறப்படுகின்றன. அவலம், தனக்கு வருந் துன்பம் பற்றியது அவலம் என்றும் பிறர்க்கு வருந் துன்பம் பற்றியது கருணையென்றும் இரு வகைப்படும் என அறிந்துகொள்க. இனி விபாவமும் ஆலம்பந விபாவமும் உத்தீபந விபாவமும் என இருவகைப்படும். ஆலம்பந விபாவமாவது: ஒருவனுள்ளத்திற்றோன்றும் சுவைத் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள பொருள். உத்தீபந விபாவமாவது: அப்பொருளைச் சார்ந்தும் சாராமலும் பொருந்திச் சூக்குமமான சுவைத்தோற்றத்தை வளர்க்கும் பொருள்.