Primary tabs
இளம்பூரணரும் பேராசிரியரும் உள்ளத்தில் நிகழ்வது குறிப்பு என்றும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தால் உடம்பின்கணுண்டாகும் வேறுபாடு சத்துவமென்றுங் கூறுவர். வட நூலாருட் சிலர் உடம்பினுருவிலிருந்து தோன்றும் மனோதர் மத்தைக் குறிப்பு (அநுபாவம்) என்றும், உடம்பின்வழியாக வெளிப்படும் மன விகாரங்களைச் சாத்துவிகம் என்றுங் கூறுவர். சாத்துவிகபாவம் அநுபாவத்தினின்றும் வேறுபட்டதும் வேறு படாததுமா யிருத்தலினாலே அநுபாவத்துட் சாத்துவிகம் அடங்குமென்பாருமுளர். இவற்றின் வேறுபாடுகளை ஆராய்ந்துணர்ந்துகொள்க.
இனித் தொல்காப்பியர் கூறியவாறு, மெய்ப்பாடுகளையும், அவை உண்டாதற்குக் காரணமான பொருள்களையும் இங்கே காட்டுதும்.
மெய்ப்பாடுகள் எட்டாகும். அவையாவன: நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை என்பன.
இவற்றுள் நகைச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன: இகழ்ச்சியும் இளமையும், அறிவின்மையும், மடமும் என்பன. இவை காரணமாக நகை தோன்றும்.
அவலச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன:--இகழ்ச்சியும், இழத்தலும், நிலை வேறுபடலும், வறுமையும் என்பன. இவை காரணமாக அவலம் (அழுகை) தோன்றும்.
இளிவரற்சுவைக்குக் காரணமான பொருள்களாவன:--மூப்பும், பிணியும், வருத்தமும், மென்மையும் என்பன. இவை காரணமாக இளிவரல் தோன்றும். இளிவரலெனினும், இழிபு எனினும், அருவருப்பு எனினு மொக்கும்.
வியப்புச்சுவைக்குக் காரணமாகிய பொருள்களாவன:--புதுமையும், பெருமையும், சிறுமையும், ஆக்கமுமென்பன. இவை காரணமாக வியப்புத் தோன்றும்.
அச்சச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன:--வருத்துந் தெய்வமும், விலங்கும், கள்வரும், இறைவரும் என்பன. இவை காரணமாக அச்சந் தோன்றும்.