Primary tabs
வீரச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன:--கல்வியும், தறுகண்மை (அஞ்சாமை) யும், புகழும், கொடையும் என்பன. இவை காரணமாக வீரம் பிறக்கும்.
வெகுளிச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன:.--தன்னுறுப்பைச் சிதைத்தலும், தன்குடிக்குக் கேடுசூழ்தலும், தன்னறிவையும் புகழையுங் கொன்றுரைத்தலும், தன்னை அலைவு செய்தலும் என்பன. இவை காரணமாக வெகுளி பிறக்கும்.
உவகைச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன:-- செல்வநுகர்ச்சியும், அறிவுரையும், புணர்ச்சியும், விளையாட்டும் என்பன. இவை காரணமாக உவகை பிறக்கும்.
இவற்றுள் நகை முதலிய நான்கும் தன்கண் தோன்றும் பொருள் காரணமாகவும் பிறன்கண் தோன்றும் பொருள் காரணமாகவுந் தோன்றுவனவாம். அச்சமும் வெகுளியும் பிறன்கண் தோன்றும் பொருள் காரணமாகத் தோன்றும். வீரமும் உவகையும் தன்கண் தோன்றும் பொருள்காரணமாகத் தோன்றும். உவகை பிறரின்பம்பற்றியும் தோன்றும். நகை முதலிய இச்சுவைகள் எட்டனையும் பேராசிரியர் காட்டிய உதாரணங்களை நோக்கி அறிந்துகொள்க.
இனி, நகை முதலிய சுவைகளெட்டனையும் எளிதினறிந்து கொள்ளுதற்கு உதாரணமாக பிற்கால இலக்கியங்களுள் ஒவ்வொரு செய்யுள் எடுத்துக்காட்டி வடமொழி நூலின் விதியையுந் தழுவி முறையே விளக்குதும்.
நகை
“நிருதர்த மருளும் பெற்றே னின்னலம் பெற்றே னின்னோ
டொருவருஞ் செல்வத் தியாண்டு முறையவும் பெற்றே னன்றோ
திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயந்த தென்னா
வரிசிலை பிடித்த தோளான் வாளெயி றிலங்க நக்கான்.”
இதன்கண், சூர்ப்பநகை கூற்றைக் கேட்டு இராமனுக்கு மனத்திற்றோன்றியசிரிப்பு--ஸ்தாயிபாவம். சூர்ப்பநகையின் கூற்று--பொருள் (ஆலம்பநவிபாவம்). அவள் பேதைமையான கருத்தைப் பலதரமும் நினைத்தல்--உத்தீபநவிபாவம். வெறுப்பு, எள்ளலுரை முதலியன--குறிப்பு (அநுபாவம்). இராமன் கடிவன கடிதல் (வரைவு) -- துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). அவள் பேதைமைபற்றி வந்த நகை--சுவை (இரசம்) ஆகும்.