Primary tabs
அறிஞர் மொழிதல், அவனது நாட்டைச் சிறப்பித்தல், அவனுடைய அரண்மனையில் தடாரிப்பொருநன் பெருஞ்சிறப்புப்பெற்றுத் தனது வறுமை நீங்கல், யாழையுடைய பாணர்கள் தாங்கள் போர்க்களத்தில் அரசனாற் பெற்ற யானை முதலியவற்றைப் பற்றிப் பாராட்டிக்கூறல், அரசன் வேற்றரசர்கள் தன்னைப் பணிந்து நிற்பச் செம்மாந்திருத்தல், அவன் பகைவருடைய மதிலைக் கைக்கொண்டு தீட்சையை நிவர்த்தி செய்துகொள்ளல், அவன் மணஞ் செய்து கொள்ளல், அவனுக்குப் புதல்வன் பிறத்தல், அரசனது பிறந்த நாள் விழாவைக் குடிகள் கொண்டாடுதல், அரசனாற் பலவகைப் பொருள்களைப் பெற்ற இரவலர் அவன்பால் நெடுங்காலம் இருந்து பின்பு தம் சுற்றத்தாரின் வறிய நிலையைக் கருதி விடை கொள்ள எண்ணல், அரசன் அவர்களுக்கு யானை முதலியவற்றைக் கொடுத்து விடையளித்தல், அவனுடைய இல்லற வாழ்க்கை, வறியவனாக எதிரேவந்த ஒரு பாணனைப் பரிசில் பெற்று வருவானொருவன் அரசனிடத்தில் ஆற்றுப்படுத்தல், அங்ஙனமே கூத்தரைப் பரிசு பெற்ற வேறொரு கூத்தன் ஆற்றுப்படுத்தல், பொருநரையும் விறலியரையும் பரிசு பெற்றுவரும் பொருநனும் விறலியும் ஆற்றுப்படுத்தல்.
சான்றோர் பின்பு உறுதிபயக்கும் சொற்களை அரசனுக்கு அறிவுறுத்தல், அவர் அரசனுக்குரிய ஒழுகலாற்றை அறிவுறுத்தல்.
அரசனது குடையையும் வாளையும் சிறப்பித்தல், அவன் திருமஞ்சனம் செய்துகொள்ளல், இன்னது செய்தல் அரசர்க்கியல்பென்று அரசனிடம் அறிஞர் கூறல், 'நின்னுடைய வழிபடுதெய்வம் நின்னைப் பாதுகாப்ப நீ நீடூழி வாழ்க' என அவனை வாழ்த்தல், அவனது கொடியை மும்மூர்த்திகளுள் ஒருவரது கொடியோடு ஒப்பிட்டுப் புகழ்தல்.
திருமால் சோவென்னும் அரணத்தை அழித்த சிறப்பைக் கூறல், மகளிர் முருகவேளைக் கருதி வள்ளிக் கூத்தாடுதல், ஒரு புலவனை வேறொரு புலவன் 1தேவருள் ஒருவர்பால் ஆற்றுப்படுத்தல், 'நின்னைவணங்குவதனால் இன்ன பயன் பெறுவோம்' என்று தெய்வத்தைப் பணிதல், பயன்பெறுதற் பொருட்டுக் கடவுளை வாழ்த்தல்.
தலைவி ஒருத்தி தலைவனது மாலையைப் பெற விரும்பியதைத் தானே கூறல், தலைவனுக்கு விருப்பமின்றேனும் அவனை அடைவதற்காகத் தலைவி இருளிற் போதல், பரத்தையின்பாற் சென்று வந்த தலைவனோடு ஊடித் தலைவி கூறல்.
கடவுளிடத்துக் கடவுட் பெண்டிர் காதல் கொண்டதாகக் கூறல், கடவுளரிடத்து மானிடப் பெண்டிர் காதல் கூர்ந்ததாகக் கூறல், குழந்தைப் பருவத்திலுள்ளாரை மகளிர் பாராட்டல், ஊரிலுள்ளாரது இன்பவாழ்வைக் கூறல் என்பன.
1. திருமுருகாற்றுப்படை இதன்பாற்படும்.