தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Neri Vilakkam 

முகவுரை

iii

நூல்களும் பல இருந்தன. இப்பொழுது இறையனாரகப்பொருள் நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், களவியற் காரிகை யென்னும் புனைபெயருடைய தொருநூல், மாறனகப் பொருளென்பன நமக்குக் கிடைப்பவை. தொல்காப்பிய உரைகள், இறையனாரகப் பொருளுரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்தாளப்படும் சில சூத்திரங்களும் வெண்பாக்களும் வேறுபல அகப்பொருளிலக்கண நூல்களின் பகுதிகளென்றே நினைக்கத்தகும்.

திருச்சிற்றம்பலக் கோவையாருரையில், பேராசிரியர் அந்நூலுக்கேற்பக் காட்டும் சூத்திரங்கள் ஓர் அகப்பொருளிலக்கண நூலிலுள்ளனவோ, அன்றி அவராக அமைத்துக்கொண்ட உரைச் சூத்திரங்களோ இன்னவென்று துணிய முடியவில்லை.

இங்ஙனம் அமைந்த நூல்கள் ஒன்றற் கொன்று பலவகை வேறுபாடுகள் உடையனவாக இருக்கும். இத்தமிழ்நெறி விளக்கத்தின் அகப்பொருட் பகுதிக்கும் வேறு அகப்பொருளிலக்கண நூல்களுக்கும் வேறுபாடுகள் பல உண்டு. இந்நூல் களவுக்கு முன் கைக்கிளையைக் கூறவில்லை. களவின் பகுதியாகப் பெரும்பாலோரால் அமைக்கப்படும் அறத்தொடு நிலை, உடன்போக்கு என்னும் இரண்டடையும் இந்நூல் கற்பினுள் அமைக்கின்றது, தொல்காப்பியத்தில், கூற்றிற்குரியவருள் ஒருவராகச் சொல்லப்படாத, தலைவனுடைய நற்றாயின் கூற்றொன்று இதிற் காணப்படுகிறது, அங்கங்கே அருகிக் காணப்படும் சில துறைகளுக்கு இதில் இலக்கணமும் இலக்கியமும் உள்ளன (மேற். 41, 96, 108)

இந்நூலாசிரியர் பொருளியலை அகம், புறம், அகப்புறமென மூன்றாகப் பகுத்துக் கூறி, பின் அகப்பொருளின் வகையாகிய முதல் கரு உரியென்னும் மூன்றை உணர்த்துகின்றார். கருப்பொருளின் வகையாகச் சூத்திரத்திற் கூறப்படுவன தெய்வம், மானிடம்: தொழில், உணவு, இசை, விலங்கு என்பன. ஏனையவை ‘பிறவும்’ என்பதனாற் கொள்ளக்கிடக்கின்றன. தெய்வக் கருப்பொருள் கூறும்பொழுது பாலைக்கு இரவியை அமைக்கின்றார்.
 

என்று நச்சினார்க்கினியர் சுட்டும் ஆசிரியருள் இவரும் ஒருவரென்றே கொள்ளத்தகும். இறையனாரகப் பொருள் உரையாசிரியரும், தக்கயாகப் பரணியுரையாசிரியரும் இத்தகைய ஒருசாரார் கொள்கையை எடுத்துக் கூறுவர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:05:30(இந்திய நேரம்)