Primary tabs
பின்னைந்து செய்யுட்களில், மாலைப் பொழுதின் மாண்பும் கார்ப பெயலாற் செழிப்புற்ற முல்லை நிலக்கவினும், தலைவியின் அன்பு ததும்பிய கற்புத்திறனுங் கற்பார் நெஞ்சைக் கவருந் திறத்தவாயுள்ளன. குறிஞ்சியுள், களவுப் புணர்ச்சிக் குரிய பழங்காலப் பழக்கங்களும், சிறிது கூறிப் பெரிது விளக்குஞ் சிறப்பும், வரைவுகடாவு வழிகளும், குறிஞ்சி நில இரவுக் காட்சிகளும், பகற் பண்புகளும் நினைவகத் திருத்தவேண்டிய நிகரிலாப் பொருள்களாம். “வேங்கை நறுமலர்,” எனத் தொடங்குகின்ற செய்யுளில், தோழிகூற்றாக, “யாம் பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேயரிக்கண் சேந்தனவாம்,” எனக் கூறும் படைத்துமொழி கிளவியில் தலைவியின் கண்கள் மட்டுஞ் சிவந்து காண்பதற்குப் பொருத்தமாக, “சேயரிக்கண்” எனக் கூறுஞ் சிறப்பு மிகுதியும் வியந்துகொள்ளத் தக்கதாம்.
மருத முதற்கண், “கொல்லர் தெருவில் ஊசிவிற்றல்”, என்ற பழமொழியினைக் கையாண்டு, தாம் எடுத்துக்கொண்ட பொருளைப் புகட்டப் புகுந்த ஆசிரியர் அப்பழமொழிக்குமுன், “கொண்டுழிப் பண்டம் விலையொரீஇ,” என்ற அடைமொழிகளைச் சேர்த்துப் பழமொழிப் பொருளைத் தெளிவு படுத்துந் திறன் மகிழ்ந்து கொண்டாடும் மரபினதாம். “கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி யீர்வாளை, நீலத்துப் புக்கொளிக்கும்,” என்ற மருதநில வளனைக் கூறும் அடிகள் நளவெண்பாவிற் கண்ட, “செங்கழுநீர் மொட்டை, அரவின் பசுந்தலை யென்றஞ்சி - இரவெல்லாம், பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புட் டாலாட்டும்,” என்ற அடிகளை நினைவிற் கொண்டுவரக் கூடியனவாய்க் காண்கின்றன. ‘குளிருங் காலமாகிய ஐப்பசி, கார்த்திகைத் திங்கள்களில் வீசுந் தென்றல் மெய்யிற் கினிதாம்,’ என்ற ஆராய்ச்சியுரை பொன்னேபோல் போற்றவேண்டிய பொருண்மொழியாம்.
பாலையுட் பகர்ந்துள்ள இளவேனிலின் இயல்பும், தலைவன் பிரிந்து செல்லும் பாலைநில அருவழியின் பாடும், களிறு பிடியின் மாட்டுக் காட்டும் பேரருளின் பெற்றியும், கானலினைத் தொடர்ந்தோடுங் கரியினப்போக்கும்,