Primary tabs
கலைமா பிணைமானிடத்திற் கொண்ட பேரன்புங் கொண்டாடிக்கொள்ள வேண்டுவனவாம்.
நெய்தலுள், “தெண்கடை சேர்ப்பன்,” எனத் தொடங்குகின்ற செய்யுளில் சிறிது கூறிப் பெரிது விளக்கும் பெற்றி சிறந்து காணுதல் கூர்ந்து தெளிக. மேலும், பல்லி முட்டையின் இயல்பினைப் பண்புறக்கூறிப் புன்னையரும்பினோடு பொருந்துமாறு புகன்ற முறையும், படைத்து மொழிகிளவியான் வரைவு கடாவும் மாண்பும், தலைவி வரைவு வேட்கையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் கொள்கையும், தோழி தலைவியின் வரைவு வேட்கையைத் தலைவற்குச் சிலவாகிய அடைமொழிகளாற் றெரிவிக்குந் திறமும், கடற்கரைக் காட்சியும் அந்நெய்தற்றிணையை நெஞ்சகத்தே நிலைபெறச் செய்ய வல்லவாய் வாய்த்துள்ளன.
இந்நூலுள், மலைநாட்டார் மலைச்சாரலை நெருப்பிட்டழித்து அச்சாம்பரினையே எருவாக்கி உழுது பயிரிடும் ஒரு பெரும் வழக்கமும், குதிரைகளை, கழுத்தில் ஒலிக்கும் மணிகளிட்டு, தேரிற் பூட்டி யோட்டலாகிய மரபும், போரிற் பட்டார்க்கு அவரைப் புதைத்தவிடத்தே அவர் பெயர் வரைந்த கல்லை நட்டுச் சிறப்புறச் செய்து போற்றுஞ் செயலும், புண்ணிற்குக் காரமென்ற ஒருவகை மருந்தினை யிட்டு ஆற்று முறையும், வெறியாடலாகிய முருகன் விழவும் காணக் கிடக்கின்றன. மகளிர் அருவியாடலும், கண்சிவத்தலும், கூடல் இழைத்து எதிர்கால நிகழ்ச்சியைக் குறித்துணர்தலும், மலைநாட்டு மகளிர் வளர்தினை காத்தலும், வேங்கை மலர் கொய்தலும், நெய்தன் மகளிர் மீன் உணங்கல்களைக் கவர வரும் புட்களை ஒப்புதலும், கடற்கரையிற் சிறு மனை கட்டி விளையாடலும், அச்சிறுமனைக்கு முத்துக்களை விளக்காகக் கொள்ளலும், மகளிர் கவுளின்மீது கையூன்றி நிற்றலும் அக்கால வழக்கென இந்நூலால் அறியலாகும்.
இதன்கண் பெரும்பாலும் நேரிசை வெண்பாக்களும் சிறுபான்மை இன்னிசை வெண்பாக்களும் வந்துள்ளன. பாலைக்கண் முதற் செய்யுளில், இரண்டாமடி,