தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 27 -

  (இ-ள்,) மன்னன்-அரசனாகிய மாரிதத்தன், ஆணையின் -(தனது) ஆணையால், மா மயில்-சிறந்த மயில், வாரணம்-கோழி, சூகரம்-பன்றி, ஆடு--, எருமை--, இன்னசாதி விலங்கில்-இத்தகைய இனத்தைச் சேர்ந்த விலங்குகளில், இரட்டைகள் - ஆணும்பெண்ணுமாகிய இரட்டைகளின், துன்னு தொகை-நெருங்கிய கூட்டம், பின்னிவந்து-பிணைக்கப் பட்டு வந்து, பிறங்கின-(எதிரே) தோன்றினவற்றை, கண்டனன்-கண்டான். (எ-று,)

மன்னவன் மயில்முதலிய விலங்கினங்களைக் கண்டனனென்க.  ‘துன்னு’ என்பதனைத் ‘தொகை’ யென்பதனோடியைத்து, ‘ துன்னுதொகை‘ என்றாக்கி, அதனை மயில் முதலிய ஒவ்வொன்றனோடும் கூட்டுக.  ‘மயில் வாரணந்துன்னு சூகர மாடெருமைத்தொகை யின்ன சாதிவிலங்கு’ என்றது, பறவைமுதலியனவும் விலங்கினத்தன வாதலா லென்க.  இதனை, ‘விலங்கானே னாகலினால் விலங்கினேன’ என்று (கம்ப. சடாயுகாண்,22) சடாயுகூற்றாகவந்திருத்தலால் அறியலாகும்.  இரட்டையாவன - ஒருசூலில் தோன்றிய இரண்டு உயிர்கள்.  வடநூலார், ‘யமலம்‘ என்பர்.     (16)

21.
யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை
 
ஈன மில்பலி யாக வியற்றினால்
 
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்
 
ஆன பூசனை யாற்றுத லாற்றென.

(இ-ள்,) (விலங்கினங்களைக் கண்ணுற்ற அரசன்), யான்-, இவ்வாளினில்-இவ்வெற்றிவாளால், ஈனம் இல்-(அங்கவிலக்கணங்களில்) குறைவு இல்லாத, மக்கள் இரட்டையை - மக்களுள் இரட்டையரை, பலியாக இயற்றினால்-பலிபூசையாகச் செய்தால்,  (அதன் பிறகு), ஏனை மானுயர்-மற்ற மாந்தர்கள், இவ்விலங்கினில் - இவ்விலங்கினங்களால், ஆன பூசனை-தேவிக்கு உரிய பலி பூசை, ஆற்றுதல் - இயற்றுதலை, ஆற்ற-செய்வார்களாக, என-என்று கருதி; (தந்தீகென என்று அடுத்த கவியில் தொடரும்.)



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:48:40(இந்திய நேரம்)