Primary tabs
(இ-ள்.) கறங்கு என-காற்றாடிபோல, வினையின்-வினைகளினால், கதியொரு நான்கின் உள்ளும்-நான்கு கதியிலும், ஓடி-சுழன்றோடி, பிறந்தநாம்-பிறந்த ஆன்மாவாகிய நாம், பெற்ற பெற்ற பிறவிகள்-அடைந்த பல பிறவிகளையும், பேசல் ஆகா-(இத்துணை யென்று அளவிட்டுக்) கூறவியலா; இறந்தன இறந்து போக-கழிந்த பிறவிகள் (பல) கழிய, எய்துவது எய்தி-எய்தக்கடவதாகிய வினையை யெய்தி, பின்னும் பிறந்திட எல்லாம் இறந்தது-மீண்டும் பிறக்க இப்படியே எல்லாப் பிறவியும் கடந்தது (ஆதலின்), இதுவும்-இப்பொழுதுள்ள இப்பிறவியும், அவ்விய ல்பிற்றேயாம்-அத்தகையதே (மீண்டும் பிறப்பதற்கே வழி) யாம் (எ-று.)
நாம் எடுத்த பிறவிகள் எண்ணில; அவையெல்லாம் கழிந்தன. அவற்றைப் போன்றே இப்பிறவியும் கழியப்போகின்றது என்றானென்க.
கறங்கு-காற்றாடி; சுழலுந்தன்மையது. காற்றாடி உயிருக்கும், காற்று வினைகளுக்கும் உவமையாயின. காற்றினால் காற்றாடி சுழலுவதுபோல, வினைகளினால் உயி்ர் மீண்டும் மீண்டும் பிறந்து சுழல்கிறது.
கதி நான்குவகை; அவை-நாகர், விலங்கு, மக்கள், தேவர் என்பனவாம். இதனை ‘நானெறிவகை‘ என்று தொடங்குஞ் (சீவக.374) செய்யுளாலறிக. இடைவிடாது மீட்டும் மீட்டும் சென்று பிறப்பதனால், ‘ஓடி’ என்றார். ‘வினைக்காற்றினால் கதி நான்கிற் சுழலுமே‘ என்றார், வாமன முனிவரும். இந்நான்கு கதியினுக்கும் மேற்பட்டது மோக்ஷகதி; அது ஐந்தாவது கதியாகும். ‘பஞ்சம கதியிற் சென்ற பரமன்‘ என்றார் (மேரு 141-ல்) வாமனமுனிவரும்.