Primary tabs
தோழி, பாகனைக் கண்டு மீளல்.
(இ-ள்.) இருள் மழுகு இரவின் - இருளினால் ஒளி மழுங்கிக் கிடக்கிற இராக்காலத்தில், வைகி - தங்கியிருந்து, மாளவ பசஞ்மத் தேன் மாளவபஞ்சமம் என்னும் பண்ணாகிய தேன், ஒழுகிய -ஒழுகுவதற்குக் காரண மாயிருந்த, மிடற்று -கண்டத்தையுடைய, ஒர்காளை உள்ளவன் - ஒப்பற்ற காளைபோன்று இருப்பவன், யாவன் என்று -எவன்? என்று, நாடி - தேடி, கழுது உரு அவனை- பேயினது வடிவம் போன்ற அட்டபங்கனை, கண்டனள் - (குணவதி) பார்த்தாள்; கண்டு - பார்த்தவுடன், தையற்கு- அமிர்தமதிக்கு, காமத்து ஒழுகிய உள்ளம் - கள்ளக் காமத்தின்பாற் சென்ற மனம், ஒழியும் - நீங்கும், என்று, உவந்து மீண்டாள் - மகிழ்ந்து திரும்பினாள்;(எ-று.)
தோழி, பண் ஒழுகிய காளை எவனென நாடி, பேய் போன்ற அட்டபங்கனைக் கண்டு, இவனுருவத்தின் இயல்- பைக் கூறின் அப்பொழுதே அரசியின் காதல் மாறிவிடும் என்று மகிழ்ந்து மீண்டாள் என்க.
ஓர், அசையெனினுமாம். ‘கழுதுருவவனைக்‘ கண்டதும், தன் தலைவியின் தீய செயலும் அதற்குத்தான் உடனின்று கூட்டுவித்தலும் ஒழியு மென்ற எண்ணத்தால், உவந்தா ளென்க. மழுகுஇருள் - மங்கிய இருள் என்னலாம். ‘இரா‘ என்னுஞ் சொல், இரவு என்றாயிற்று. (30)
(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்