Primary tabs
“பாகனிடம் ஆர்வம் சென்ற காரணத்தை ஆராய வேண்டா; இனி அவனைக் கூடும்படி செய்க” என்று ஏவினா ளென்க.
ஒரு காரியத்தைத் தொடங்குவோர் தொடங்கு வதற்குமுன்னரே அதன் காரணங்களையும் முடிபையும் பயன் முதலியவற்றையும் ஆராயவேண்டும்; அங்ஙனமன்றி அக் காரியம் முடிந்தபின் ஆராய்தல் வேண்டுவதின்மை -யின் ‘ காரியமன்று‘ என்றாள். இங்குக் காரியம், தன் மனோவாஞ்சையை அஷ்டபங்கன் பெறுதல் - காரணம், அவனிடம் இருக்க வேண்டிய திரு, திறல் முதலியன.
கருதிடு; இடு, துணிவுப் பொருள் உணர்த்துந் துணைவினை. (35)
தோழியின் அச்சம
(இ-ள்.) தேவி - கோப்பெருந்தேவியே, நீ கமலை ஆவாய் - நீ மலர்மகளாவாய்; திருஉளத்து அருளப்பட்டான்-நினது சிறந்த உள்ளத்தால் காதலித்தருளப்பட்டவன், ஆவி செல்கின்ற வெந்நோய் - இறக்குந்தறுவாயி லுள்ள கொடிய தொழுநோயாற் பற்றப்பட்ட, அரு நவை ஞமலி ஆகும் - மிக்க குற்றமுடைய நாயாவான்; இதனை - இத்தகைய கூட்டுறவை, பூவின் வார் கணையன் - பூவாகிய நெடிய கணையையுடைய மன்மதன், புணர்த்த ஆறு- சேர்த்துவைத்த விதம், என்னே -வியக்கத்தக்கது” என்னா -என்று, உளைந்து - மனம்வருந்தி, நாவினால் கூறி - வாயினாற் சொல்லி, நடுங்குபு நடுங்கி நின்றாள் - (தோழி) நடு நடுங்கி நின்றாள்; (எ-று.)