Primary tabs
(இ-ள்.) இத்தலை - இவ்விடத்தில், யான் - யசோதரனாகிய யான், அசை அது ஆகி - ஆடாகி, இசையிலாதன - பொருத்தமில்லாதனவாகிய, ஒன்று இலா அரும் படர் - பல அரிய துன்பங்களை, உற - அடைந்திருக்க, வசையில் இ மன்னவன் - நிந்தனையில்லாத இந்த (யசோமதி) அரசன், தசை தின் ஆளர்தங்களின் - இறைச்சியுண்பவர்களால், என்னை - --, வானுலகு உய்க்குமோ - தேவருலகத்திற்கு விடுப்பானோ! (எ-று.)
மாம்ஸமுண்ணு மிவர்களால் யான் தேவருலகெய்த முடியுமா! என்று யசோதரன் இகழ்ந்த வருந்தினானென்க.
அசை - அஜம் என்னும் வட சொல்லின் திரிபு. அரும் படர் - பொறுத்தற்கரிய துன்பம். இசையிலாதன - புகழ் இல்லாதன எனவுமாம். வசையில் மன்னவன் என்பது வசையுடையவன் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று. உய்க்குமோ என்பதில், ஓகாராம், எதிர் மறைப் பொருளைத்தருகின்றது. (42)
(இ-ள்.) (யான்), பேதை மாதர் பெய் - பேதை-யாய அமிர்தமதி கலந்து உண்பித்த, நஞ்சினில் எஞ்சி-விஷத்தாலிறந்து, இம் மேதினிப் பதி ஆதல் விடுத்த பின்-இவ்வுலகின் அரசனான தன்மை விடுத்த பிறகு, வினையேன்-தீவினையாளனாகிய யான், இடை - இடைப்பட்ட காலத்தில், யாது செய்தனனோ - எத்தகைய தீவினை செய்தேனோ! இனி யாது செய்குவனோ-இனி என்ன தீவினைகளைச் செய்வேனோ! உணரேன் - அறிகிலேன். (எ-று.)