Primary tabs
(தோத்திரத்திட்டு) என்றும் கூறியிருப்பவை ஈண்டு அறிதற்பாலன, இந்தச் செய்யுளிற் கூறிய இவ் வெண் வகையேயன்றி. நீரை வடிகட்டி உபயோகித்தல், கந்த மூலாதிகளைப்புசியாதிருத்தல், இரவில் உண்ணாதிருத்தல் முதலிய பல சிறந்த அறங்களை இல்லறத்தார்க்கு உரியனவாக ஆகமங்கள் கூறும். அவையும் அறிந்து தெளிக. (17)
(இ-ள்.) கூறின்- (ஒழுக்கத்தா லடையும் பயனைக்) கூறுமிடத்து, கொலையினது இன்மை - கொல்லாமையாகிய அறம், குவலயத்து இறைமை செய்யும் - நிலவுலகத்து அரசத் தன்மையை நல்கும்: மலைதல் இல் வாய்மொழி - மாறுபாடு இல்லாத உண்மையானது, வாய்மையார்க்கு - அவ்வுண்மையை யுடையவர்க்கு, மதிப்பை ஆக்கும் - நன்மதிப்பைத் தரும்: களவின் மீட்சி - (இருவகைக்) கள்ளச் செயலைத் தவிர்தல் (களவின்மை), விலை இல் - விலைமதிக்க முடியாத, பேர் அருளின் மாட்சி விளைப்பது - மிக்க அருட்செல்வத்தை விளைப்பதாகும்: ஒழிந்தது - ஏனைப் பிறன் மனை நயவாமை, உலைதல் இல் பெருமை - அழிவில்லாத பெருமையையும், திட்பம் - உறுதியையும், உறுவலி - மிக்க வலிமையையும், ஈயம் - நல்கும். (எ-று.)
கொல்லாமை முதலியன நல்கும் நன்மைகளைக் கூறினாரென்க.
குவலயம் - நிலமாகிய வட்டம். மனம் வேறு சொல்வேறு செயல் வேறின்றி நிகழ்தலை, ‘மலைதல் இல் வாய்மை ' என்றார்.
1 கூடார்.
2 யாக்கும்,யார்க்கும்.