Primary tabs
கண்ணால் அருள் பெரிது ஒழுகி - கண்களில் கருணை மிக்கு நீர்வார, ஓர்உயிர்போல - தன்னுயிரே போல, நெஞ்சத்து உருகி நைந்து - உள்ளம் உருகி இரங்கி, உய்ய நிற்றல் - அவை ஈடேறுமாறு காத்தல்,வாரியின்வதங்கட்கு எல்லாம் - (அறப்பயனுக்கு) வருவாயாகவுள்ள விரதங்க ளனைத்திற்கும், அரசவதம் - தலையாய விரதம்,இதற்கே - இக்கொல்லா விரதத்தைப் போற்றிக் காப்பதற்கே, தகவுஉம் - நடுநிலையும், அத்தயவு உம் - (அறத்திற்கு மூலமாகிய) கருணையும், சார்துணையாகக்கொள்க - உற்ற துணையாகக் கொள்வாயாக, என்றான் - என்று முனிவர் கூறினார். (எ-று..)
ஐய, தலையாய விரதமாகிய கொல்லா விரதத்தை மேற்கொள்வதோடு அதனுக்கே துணையாக நடுநிலையையும் கருணையையும் மேற்கொள்க வென்றா ரென்க.
‘மன்னுயிர் வருத்தங்கண்டும் வாழ்வதே வலிக்குமாயின், அன்னவ னாண்மையாவ தலிபெற்ற வழகுபோலாம்‘என்றார் ஆதலின், மன்னுயிரைத் தன்னுயிராகக் கருதிக்காத்தல் வேண்டு மென்றார். நைதல் - இரங்குதல் : ‘நீ நல்காமையி னைவரச்சாஅய்‘ (புறம். 146). வாரி - வருவாய்.அரசவதம் - தலையாய விரதம். மா, அசை: ‘அனங்கமா ’வீணை‘ என்றாற்போலக் கொள்க. மா-சிறந்ததெனினுமாம்.‘யானையடியு ளடங்காதனவில்லை, ஏனையவற்றடிகள் யாவையும் - ஊனுயிரைக், கொல்லாவதத்தின் கொழுநிழலுள்பட்டடங்கும், எல்லாவதமு மியைந்து‘ என்றார் பெருந்தேவனாரும். (பாரதம்.) கொலைக்குற்றந் தவிர்தற்குக்கருணையே துணையென்பார், ‘சார்துணை‘ யென்றார். சார் துணை - சேருந் துணை. தகவும் தயவும் என்பன, ஒன்றையொன்று தழுவிய எச்ச உம்மைகள். தகவு - நடுவு நிலை: ‘தக்கார் தகவிலார் என்பது... காணப்படும்‘ என்னுங்குறளைக் காண்க. (21)