Primary tabs
(இ-ள்.) (ஐயனே!) இறந்தநாள் என்றும் - கடந்த நாட்களிலெல்லாம், உள்ளத்து இரங்குதல் இன்றி - நின்மனத்தில் இரக்கமின்றி, வெய்துஆய் - கொடுமையாக, உயிர்கறந்து உண்டு - உயிரைப் பிரித்து(க்கொன்றும் அதன் ஊனை) உண்டும், கன்றி - (அதிலேயே) மிகுதியும் அடிப்பட்டு, கரு வினை - (பிறவிக்கு உரித்தாகிய) தீவினைகளை, பெருகச் செய்தாய் - அதிகமாகச் செய்திருக்கிறாய், (அதனால்), நீ --, பிறவிதோறும் பிறந்து - பல பிறவிகளிலும்பிறந்து, பெருநவை உறுவது எல்லாம் - மிக்க துன்பங்களெய்துவதெல்லாம், சிறந்த நல் அறத்தின் அன்றி -திருவறமாகிய அந்த அஹிம்ஸையாலன்றி, தீரும் ஆறு உளது உம் உண்டோ - (ஏனைய விரதங்களால் அத்துன்பங்கள்) தீரும் வகையாக இருப்பதும் ஒன்று உண்டோ? இல்லையென்றபடி.
கொலையால் வந்த பாபம் அறத்தாலன்றித் தவிராதென்றா ரென்க.
இறந்த - கடந்த. இரங்குதல் - மனமழிதல், கறந்து -துன்புறுத்திப் பிரித்து: ‘கறந்து கூற்றுண்ணும’ (சீவக.2616). தான் ஈட்டிய வினைகளைத் தானே துய்க்க வேண்டுமாகலின், ‘பிறந்து...உறுவது’ என்றார். நிச்சயமாகவேறொன்றால் தவிரா தென்றதற்கு, ‘உளதும் உண்டோ’ என்று வற்புறுத்தினார். ‘இன்றுயிர்கொன்ற பாவத் திடர்பல விளையுமேலால், நன்றியொன் றன்று’ என்றார் (யசோ.135) முன்னரும். (22)