Primary tabs
தரிசன மோஹனீய மென்னும் மித்யாத்வகர்மத்தினால் அறிவு மயங்குவதனையும் அதனால் நிகழும் செயலையும் ‘அறிவிலராய காலத்து அமைவில செய்தவெல்லாம்’ என்றார். ‘அனாதி மிச்சோதயத்தால் அறிவு மிச்சத்தமாகிக்கனாவினும் மெய்ம்மை காணார’ என்றார் (மேரு. 711இல்) வாமனமுனிவரும். அமைவு - செய்தற்கு (ஏற்றதாகி) அமைந்தவை. நெறி - அறநெறி. விலகி - விலக; எச்சத்திரிபு. நிற்பர் - தம் நிலையில் நிற்பர் எனவுமாம். அறியாமையா லீட்டிய தீவினையுளதேனும் நன்ஞானம் மிகுமாயின் நற்பயனையே பெறுவர்: ‘விளக்குப்புக விருள்மாய்ந்தாங் கொருவன், தவத்தின் முன் நில்லாதாம் பாவம’, என்றதனை ஒப்பிடுக. நின்றவை விலகி நிற்பர் என்பதற்கு: தம்மைப் பற்றிநின்ற தீவினைகளினின்று விலகி நிற்பார் என்றலும் அமையும். (இதனை ஸத்வம் என்பர் வடநூலார்.) செய்த தீவினைகளால் துன்பப்படுவோர் அணுவிரதத்தாலும் உய்வார் என்னும் உண்மையை, கோழிப்பிறப்பில் நின்ற உயிர்கள் அணுவிரதத்தால் நன்மைபெற்ற வரலாற்றான் உணரலாகும் என்பார். ‘நுமர்கட் காணாய’ என்று வலியுறுத்தினார். அணுவிரதமும் நன்மை பயப்பதாதலின், ‘சிறிய நல் விரதம’ என்றார். திருவினை - நல்வினையுமாம். (80)
(இ-ள்.) அருள் புரி மனத்தராகி - அருள்புரியும் உள்ளத்தராகி, ஆர் உயிர்க்கு - (இவ்வுலகில்) நிறைந்த உயிர்களுக்கு, அபயம் நல்கி - அபயதானத்தைக் கொடுத்து, பொருள் கொலை களவு காமம் பொய்யோடு - பொருளின் கடும்பற்று கொலை களவு காமம் பொய் முதலியவற்றை, புறக்கணித்திட்டு - (தன்கண்) சேராதவாறு நீக்கி, இருள்புரிவினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின் - மயக்கவுணர்வைத் தருகின்ற இருவினையும் சாராத முனைவன் மொழிந்த திருவறத்தை மேற்கொள்வாராயின்,